TNPSC Thervupettagam

காரிருள்தான் இனி எதிர்காலமா

December 18 , 2023 367 days 245 0
  • மதிப்பு மிக்க உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு ‘அறிவிக்கப்பட்ட சட்டம்’. ஆகையால், அது இந்தியாவின் அனைத்துக் குடிமக்களையும் கட்டுப்படுத்தும். எனவே அனைவராலும் மதிக்கப் படவும் பின்பற்றப்படவும் உரித்தானது.
  • இந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அரசமைப்புச் சட்ட அமர்வு, ‘அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை நீக்கியது செல்லும்’ என்று ‘ஒருமனதாக’ தீர்ப்பளித்தது. முன்பிருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ‘சிறப்பு அந்தஸ்து’ இனி கிடையாது என்று உறுதிபட அறிவித்துவிட்டது.
  • இதில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சட்டப் பிரிவுகள் படிப்படியாக 1950 முதல் 2019 வரையில் ஜம்மு-காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டுவருவதால், 370வது பிரிவு (தாற்காலிகமானது) அறவே நீக்கப்படுவது அந்த நடைமுறையின் உச்சபட்ச நடவடிக்கைதான்’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. அமர்வு இப்படியொரு முடிவுக்கு வந்தது குறித்து வெவ்வேறு கருத்துகள் நிலவலாம், ஆனால், தர்க்கரீதியாக இப்படியொரு முடிவுக்கு அது வந்திருக்கிறது.
  • அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை அறவே நீக்கியது தொடர்பான வேறு சில அம்சங்கள் கவலையளிக்கின்றன: ஒன்றிய அரசு / நாடாளுமன்றம் இதற்காகக் கையாண்ட வழிமுறைகள், அவற்றால் கூட்டரசு நடைமுறைக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதகமான விளைவுகள்தான் அப்படிக் கவலையை அளிக்கின்றன.
  • இவை ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு மட்டுமல்ல; எதிர்காலத்தில் எந்தவொரு மாநிலத்துக்கு எதிராகவும்கூட பயன்படுத்தப்படக்கூடும்.

தீர்ப்பின் மூன்று முக்கிய அம்சங்கள்

  • உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு மூன்று முக்கிய முடிவுகளைக் கொண்டது:
  • 1. ஒன்றிய அரசு கையாண்ட நடைமுறை, அரசமைப்புச் சட்டத்தின் 368வது பிரிவு அளிக்கும் அதிகார வரம்புக்கும் அப்பாற்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவுக்கும் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் அரசமைப்புச் சட்டத்தின் 368வது பிரிவு அனுமதிக்கும் வகையில், சிறப்புப் பெரும்பான்மை உதவியுடன்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
  • ஜம்மு-காஷ்மீர் மாநில விவகாரத்தில் ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 370 (1)(டி) பிரிவுடன் அரசமைப்புச் சட்டத்தின் 367(4)ஐ சேர்த்து (விளக்கம் தரும் பிரிவு), ‘மாநில அரசமைப்புச் சட்டப் பேரவை’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘மாநில சட்டப்பேரவை’ என்ற வார்த்தையை அரசமைப்புச் சட்டத்தின் 370(3) பிரிவில் பயன்படுத்தி, திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டப் பிரிவு 370(3)ஐ பயன்படுத்தி, 370வது பிரிவை அறவே நீக்கியிருக்கிறது. இப்படிச் சுற்றி வளைத்து மேற்கொள்ளப்பட்ட நடைமுறை, ‘அரசமைப்புச் சட்டப்படி செல்லாதது’ என்றும் அமர்வு கூறியிருப்பதைக் கவனமாக வாசியுங்கள்:
  • பத்தி (பாரா) 389 “….விளக்கமளிக்கும் பிரிவை, சட்ட வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளுக்குப் பொருள் என்ன என்று விளக்கவோ அல்லது பொருளைத் தெரிவிக்கவோதான் பயன்படுத்த வேண்டும்; அதை ஏற்கெனவே எழுதப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யப் பயன்படுத்தக் கூடாது.”
  • பத்தி (பாரா) 400 “….மாதவராவ் சிந்தியா வழக்கில், இந்த நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பின்படி, அரசமைப்புச் சட்டத்தின் 366(22)வது பிரிவை இன்னொரு நடைமுறைக்குத் துணை ஈடாக (பிணையாக) பயன்படுத்தக் கூடாது, 368வது பிரிவின் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடைமுறையைத் தவிர்க்க அல்லது நீக்க…. அரசமைப்புச் சட்டத்தின் 370(1) (டி) பிரிவையும் 367வது பிரிவையும் துணை ஈடாகப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டம் 370ஐ தடயமே இல்லாமல் அழித்துவிடக் கூடாது.”
  • அரசமைப்புச் சட்டப் பிரிவு 370க்குக் கொண்டுவந்த திருத்தம், அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று கருதியபோதிலும் ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்துக்கு, அரசமைப்புச் சட்டம் 370(1)(டி) பிரிவின்படி குடியரசுத் தலைவர் அதிகாரத்தைச் செலுத்தியது செல்லும் என்றே அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது; ‘அரசமைப்புச் சட்டம் 370ஐ, 370(3)இன்படி நீக்கியது அதே விளைவைத்தான் தரும்’ என்றும் கூறியிருக்கிறது. 370(1)(டி) உட்கூறின்படி, ‘மாநில அரசின் ஒப்புதல் தேவை’ என்பதற்கு, ‘அது அவசியம் என்றில்லை’ என்று அமர்வு கூறியிருக்கிறது: இந்தப் பிந்தைய முடிவு மிகவும் விவாதிக்கப்பட வேண்டியது.
  • 2. ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக (ஒன்றிய ஆட்சிக்குள்பட்ட நேரடிப் பகுதிகளாக) அரசமைப்புச் சட்டத்தின் 3வது பிரிவின்படி நடவடிக்கை எடுத்தது சட்டப்பூர்வமானதா என்று உச்ச நீதிமன்றம் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால், அந்த விவகாரம் தொடர்பாகத் தீர்ப்பில் ஏதும் கூற மறுத்துவிட்டது காரணம், ‘ஜம்மு-காஷ்மீருக்கு (லடாக் நீங்கலாக) மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கவும் சட்டப்பேரவைக்குப் பொதுத் தேர்தல் நடத்தவும் அரசு விழைகிறது’ என்று ஒன்றிய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் தெரிவித்தார். எனவே, அது சட்ட விரோதமா - இல்லையா என்ற கேள்விக்குள் புகாமல், அதை ‘உரிய வழக்கு அடுத்து தீர்மானிக்கட்டும்’ என்று விட்டுவிட்டது.
  • சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலை 2024 செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக ஒரு காலக்கெடுவை அறிவித்த உச்ச நீதிமன்றம், மாநில அந்தஸ்து வழங்குவதற்கு அப்படியொரு கெடுவை அறிவிக்கவில்லை. மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்ட பிறகுதான் பேரவைக்குப் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதால் இரண்டுமே இப்போது நிச்சயமற்ற நிலையில் தொடர்வது வெளிப்படை.
  • 3. மூன்றாவது விவகாரம்தான் (தீர்மானிக்கப்படாதது) மிகவும் பிரச்சினைக்குரியது. அரசமைப்புச் சட்டத்தின் 3வது பிரிவின்படி, ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றியமைக்கவோ, புதிதாக மாநிலத்தையோ, அல்லது நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதியையோ உருவாக்கும் மசோதாவைத் தொடர்புள்ள மாநிலத்தின் சட்டப்பேரவையின் கருத்துகளைக் குடியரசுத் தலைவர் அறிந்த பிறகே, நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும். 2018 டிசம்பர் 19 முதல் ஜம்மு-காஷ்மீர் பகுதி குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. எனவே, மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களும் நிர்வாகக் கடமைகளும் ‘நாடாளுமன்ற’த்தால் நிறைவேற்றப்படுகின்றன. ‘மாநிலச் சட்டப்பேரவை’யின் கருத்துக்குப் பதிலாக, ‘நாடாளுமன்ற’த்தின் கருத்து இங்கே பெறப்பட்டிருக்கிறது.
  • குடியரசுத் தலைவர் (பிரதமரின் ஆலோசனையின்படி) நாடாளுமன்றத்துடன் (அதாவது, மாநில சட்டப்பேரவைக்கு சமமாகக் கருதி) ஆலோசனை கலந்தார், மாநில சட்டப்பேரவையின் கருத்து என்ன என்பதை இங்கே நாடாளுமன்றம் தெரிவித்தது. நாடாளுமன்றம் இங்கே வினோதமாக ‘இரட்டை வேடம்’ தாங்கிச் செயல்பட்டிருக்கிறது! அதற்குப் பிறகே நாடாளுமன்றம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரண்டு மத்திய ஆட்சிக்குள்பட்ட நேரடிப் பகுதிகளாக (யூனியன் பிரதேசம்) பிரித்தது.

சூழும் பெருங்கவலை

  • அரசமைப்புச் சட்டப்படி இது சரியா, செல்லுமா என்பதைத் தீர்மானிக்காத வரையில், எந்த மாநிலத்தையும் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, மாநில சட்டப் பேரவையிடம் (அதாவது நாடாளுமன்றத்திடம்) குடியரசுத் தலைவர் கருத்து கேட்டு அதன் பிறகு மாநிலத்தை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகக் கூறு போட்டு மேலும் சில மாநிலங்களையோ, மத்திய ஆட்சிக்குள்பட்ட நேரடிப் பகுதிகளையோ ஏற்படுத்திவிட முடியும்.
  • பெரும்பாலான தருணங்களில், மாநிலத்தை பிரித்ததோ – இல்லாமல் செய்ததோ அப்படியே நிலைத்துவிடும், மீண்டும் பழைய நிலைக்கு அதை மாற்ற முடியாது. அதற்குப் பிறகு புதிய மாநிலங்களோ, நேரடி ஆட்சிப் பகுதிகளோ எடுக்கும் முடிவுகளும் மாற்றப்பட முடியாததாகிவிடும்.
  • இப்படியொரு காரிருள் சூழ்ந்த எதிர்காலம் ஏற்படும் என்று அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் அதில் இடம்பெற்ற சட்ட நிபுணர்களும் கற்பனையிலாவது சிந்தித்திருப்பார்கள் என்று கருதுகிறீர்களா?
  • காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை சற்றே ஒதுக்கி வையுங்கள்; மாநிலங்களின் உரிமைகளை நசுக்கவும் கூட்டாட்சித் தத்துவத்தை மதிப்பிழக்க வைக்கவும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளையே பேய்த்தனமாகப் பயன்படுத்தவும் முடியும் என்பதுதான் பெருங்கவலையாக இருக்கிறது!

நன்றி: அருஞ்சொல் (18 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories