- ஒரு தசாப்தத்துக்கும் மேலாக ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் எனப் பரிச்சயமான பெயர்கள் ஒலித்துக்கொண்டிருந்த டென்னிஸ் அரங்கில், புதிதாக ஒரு பெயர் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அது, கார்லோஸ் அல்கராஸ். அண்மையில் நடந்து முடிந்த விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார்.
- 20 வயதேயான கார்லோஸ் தனது அசாத்திய திறமையால் டென்னிஸ் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். ‘தனித்துவமான வீரராக கார்லோஸ் உருவெடுத்திருந்தாலும், ஃபெடரர், நடால், நான் என எங்கள் மூன்று பேரின் கலவை இவர்’ என நோவக் ஜோகோவிச் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
யார் இந்த கார்லோஸ்?
- 2003இல் ஃபெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை விம்பிள்டனில் வென்றார். அதே ஆண்டில் ஸ்பெயினில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் கார்லோஸ். டென்னிஸ் அறிந்த குடும்பத்தில் பிறந்தது கார்லோஸ் செய்த பாக்கியம்தான். நான்கு வயதிலேயே டென்னிஸ் ராக்கெட்டைப் பிடிக்கத் தொடங்கிவிட்டார். சொந்த நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரம் நடாலை தனது ரோல்மாடலாகக் கொண்டு விளையாடத் தொடங்கினார் கார்லோஸ்.
- ஆனால், அவர் ஆட்டம் என்னமோ ஃபெடரரின் பாணியை ஒத்துப்போனது. சிறு வயதிலிருந்தே டென்னிஸில் முழு கவனம் செலுத்தி வரும் கார்லோஸ், 2018இல் தொழில்முறை டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். டென்னிஸ் முன்னாள் நட்சத்திரம் ஜூன் கார்லோஸ் ஃபெரிரோவின் தலைமையில் கார்லோஸின் பயிற்சி தொடங்கியது.
முழுமையான வீரர்:
- ஸ்பெயினில் இயற்கையான களிமண் தரைகளில் டென்னிஸ் பயிற்சி பெற்றுப் பழகியிருந்தாலும், கார்லோஸின் முதல் பெரிய வெற்றி அமெரிக்க ஓபனில் சாத்தியமானது. 2022இல் அமெரிக்க ஓபனில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். அதனையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி வரை முன்னேறி, ஜோகோவிச்சிடம் தோல்வியைத் தழுவினார்.
- 2023 விம்பிள்டனில் பங்கேற்க ஆயுத்தமாகிக் கொண்டிருந்த கார்லோஸ், இதே ஆண்டு நடைபெற்ற குயின்ஸ் கிளப் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தினார். புல் தரையில் விளையாடப் படும் இத்தொடரில் முழுக் கவனம் செலுத்திக் கோப்பையை வென்று, தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். இப்போது விம்பிள்டனிலும் வெற்றி வாகை சூடி அசத்தியிருக்கிறார்.
- டென்னிஸ் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இரண்டே ஆண்டுகளில் முன்னணி வீரர்களையெல்லாம் வீழ்த்தினார். 6 அடி உயரம், ஆக்ரோஷமான ஆட்டம், வேகமான தாக்குதல் பாணி ஆகியவற்றால் அடுத்த நடால் என்று அடையாளப் படுத்தப்பட்டார். ஒவ்வோர் ஆட்டத்திலும் தன்னை மெருகேற்றிக்கொண்டே சென்றவர், சிறந்த ஷாட்களால் ஆட்டத்தைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது, தவறான ஷாட்களைப் பெரும்பாலும் தவிர்ப்பது போன்ற ஆட்ட நுணுக்கங்களுக்காக அவ்வப்போது ஃபெடரரையும் நினைவுப்படுத்தி வந்தார்.
- நடால் அல்லது ஃபெடரர் பாணியைப் பின்பற்றுவது என ரசிகர்களைக் குழப்பிக்கொண்டே இருந்த கார்லோஸ், விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சின் பாணியிலேயே விளையாடிப் பட்டத்தைத் தன்வசப்படுத்தினார். ‘கேம் பிளா’னில் வலிமையான ஜோகோவிச் எதிர்த்து விளையாடுபவரைக் களத்தில் ஓட வைப்பார்.
- அதே உத்தியைப் பின்பற்றிய கார்லோஸ், ஜோகோவிச்சை முன்பின் ஓடவிட்டு எதிர்பாராத சில அசாத்திய ஷாட்களை அடித்துப் புள்ளிகளைக் குவித்து வெற்றியை வசப்படுத்தினார். ஃபெடரர், நடால், ஜோகோவிச் என டென்னிஸ் மும்மூர்த்திகளின் பலத்தையும், புல்தரை, களிமண் தரை என டென்னிஸின் அனைத்துக் களங்களிலும் அசத்தி வரும் கார்லோஸ், ’ஒரு முழுமையான வீரர்’.
- விம்பிள்டன் இறுதிப்போட்டிக்குப் பிறகான உரையில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் அசுரன் ஜோகோவிச் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஃபெடரர் ஓய்வுபெற்று, நடால் காயங்களால் விலகி இருக்கும் இத்தருணத்தில் டென்னிஸின் புதிய அத்தியாத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் கார்லோஸ்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 07 – 2023)