கார்ல் லின்னாயே
- தாவரவியலாளர். விலங்கியலாளர். மருத்துவர். உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். ’நவீன வகைப்பாட்டியலின் தந்தை’ என அழைக்கப்பட்டவர் கார்ல் லின்னாயே. உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்து துல்லியமான வகைப்பாட்டை நிறுவினார். உயிரினங்களுக்கு இரட்டைப் பெயரிடுதல் முறையை அறிமுகப்படுத்தினார்.
- 1707, மே 23 அன்று ஸ்வீடன் நாட்டில் பிறந்தார் கார்ல் லின்னாயே. இவரின் தந்தை தாவரவியலாளர் என்பதால் வீட்டைச் சுற்றித் தாவரங்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டிருந்தன. அதனால் லின்னேயஸுக்கும் தாவரங்கள் மீது ஈடுபாடுவந்தது. இவரின் ஆர்வத்தைக் கண்ட தந்தை, லின்னாயேயை ஊக்குவித்தார். 10 வயதில் பள்ளிக்குச் சென்றார். அங்கும் தாவரவியலில் ஆர்வம் காட்டினார். ஓர் ஆசிரியர் மருத்துவம் படிக்கப் பரிந்துரைத்தார். அதை ஏற்றுக்கொண்ட தந்தை, தனிப்பட்ட முறையில் உடலியல், தாவரவியல் படிக்க ஏற்பாடு செய்தார்.
- 1727இல் லண்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். உப்சாலா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பயின்றார். அதே உப்சாலாவில் தாவரவியல் விரிவுரையாளரானார். உப்சாலா பல்கலைக் கழகம் லின்னேயஸைத் தாவர ஆராய்ச்சிக்காக லாப்லாந்திற்கு அனுப்பியது. திரும்பி வந்து லின்னாயே ஆற்றிய உரையும், தாவர வகைப்பாட்டை மேம்படுத்துவது குறித்து எழுதிய கட்டுரைகளும் பிரபலமாகின. அதுவே அவருக்கு அடுத்த பயணத்திற்கு நிதி திரட்டிக் கொடுத்தது.
- 1734இல் இரண்டாவது பயணம் மேற்கொண்டார். அப்போது தாவரங்கள் மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் அவற்றைச் சூழ்ந்த புவியியல் குறித்தும் ஆராய்ந்தார். பல புதிய வகை தாவரங்களைத் தேடிக் கண்டடைந்தார்.
- பாலியல் அமைப்புரீதியாக விலங்குகளை வகைப்படுத்தினார். ஒரே களம், பிரிவு, வகுப்பு, வரிசை, குடும்பம், இனம் எனப் பிரித்துப் பெயரிட்டார். பெயர்களில் குழப்பம் வராமலிருக்க விலங்குகள், தாவரங்களுக்கு இரண்டு பகுதியாகப் பெயரிடும் முறையைத் தொடங்கினார். அவற்றைப் புத்தகமாக வெளியிட்டார். ’சிஸ்டமா நேச்சுரே’ என்கிற புத்தகம் மூலம் லின்னாயே அறிவியல் உலகில் தன் பெயரை நிலைநாட்டினார்.
- தாவரங்களின் இனப்பெருக்கம் குறித்து ஆராய்ந்தார். ஒவ்வொரு தாவரத்திற்கும் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் தனித்தனியாக இருக்கும் என்று நம்பினார். ’ஃபண்டமென்டா பொட்டானிகா’ என்கிற புத்தகத்தை 1736இல் எழுதினார். பூ, பழத்தின் உருவ விளக்கங்களை அடிப்படையாக வைத்து ’ஜெனிரா பிளாண்டாரம்’ என்கிற புத்தகத்தை 1737இல் எழுதினார்.
- இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மாதிரிகளைச் சேகரித்தார். அறிவியலாளர்களோடு உரையாடினார். தொடர்ந்து வகைப்பாட்டு முறையிலும், பெயரிடும் உத்தியிலும் தன்னை மேம்படுத்திக்கொண்டே இருந்தார். ‘சிஸ்டம் ஆஃப் நேச்சர்’ என்கிற நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 1738இல் லின்னாயே ஸ்வீடன் திரும்பினார். நெதர்லாந்தின் நிதி உதவியால் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து படித்தார். பட்டம் பெற்று மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், மனம் முழுவதும் தாவரத்தைச் சூழ்ந்ததால் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தாவரவியல், மருத்துவம் இரண்டுக்கும் பேராசிரியரானார். அதன்பிறகு ஆராய்ச்சிக்காகப் பயணங்கள் மேற்கொள்ளவில்லை.
- உப்சாலாவில் தாவரவியல் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தார். தாவரங்களைச் சேகரிக்க உலகம் முழுவதும் மாணவர்களை அனுப்பினார். அந்த வலை அமைப்பிற்கு ’லின்னேயன் அப்போஸ்தலர்கள்’ என்று பெயர். அவர்கள் சேரித்து அனுப்பிய விதைகள், தாவரங்களின் மாதிரிகளை உப்சாலாவின் தாவரவியல் பூங்காவில் வைத்து வளர்த்தார். ஆராய்ச்சி செய்து எழுதினார்.
- லின்னாயேவின் நூல்கள் அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. ஓகனாமியா நேச்சுரே (1749), பொலிட்டியே நேச்சுரே (1760) ஆகிய இரண்டு நூல்களும் லின்னாயேஸுக்கு மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றுத் தந்தன.
- 1753இல் 1,200 பக்கங்கள் கொண்ட ‘பிளாண்ட் ஸ்பீசிஸ்’ என்கிற நூலை 2 தொகுதிகளாக வெளியிட்டார். இதுதான் லின்னாயே எழுதியதில் முதன்மையான நூல். அவ்வளவு தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, பொருத்தமான பெயரையும் சூட்டியிருந்தார். விலங்கு, பறவை, மீன் எனச் சுமார் 13 ஆயிரம் உயிரினங்களுக்குப் பெயரிட்டார்.
- ஸ்வீடனின் ராயல் அறிவியல் கழகத்தை நிறுவி அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1761இல் ஸ்வீடிஷ் அரசு சர் பட்டம் வழங்கியது. 1766இல் உப்சாலாவில் ஏற்பட்ட தீ விபத்தில் அவருடைய சேகரிப்புகள் பெரும்பாலும் அழிந்தன. அதன் பிறகு ஒரு மலையில் அருங்காட்சியகத்தை நிறுவினார். பக்கவாதத்தால் முடங்கிய கார்ல் லின்னாயே, 1778, ஜனவரி 10 அன்று மறைந்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2025)