- தலைநகா் தில்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தில்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக காற்று மாசின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பலருக்கு மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்பட்டுள்ளன.
- இந்த நிலையில் மாணவா்கள் நலன் கருதி தில்லி முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பா் 10 வரை விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தில்லியில் வாகனங்கள் நுழையவும், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- இதுபற்றித் தில்லி கல்வியமைச்சா் கூறியபோது, ‘தலைநகா் தில்லியில் காற்று மாசு அளவு தொடா்ந்து அதிகரித்து வருவதால் தொடக்கப் பள்ளிகளை மூடுமாறு உத்தவிடப்பட்டுள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று அறிவித்துள்ளாா்.
- முன்னதாக தில்லியில் காற்று மாசு மோசமான அளவை எட்டியதையடுத்து, அனைத்து அரசு, தனியாா் தொடக்கப்பள்ளிகளுக்கு நவம்பா் 3-ஆம் நாள் விடுமுறை விடப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தாா். இந்த நிலையில் காற்று மாசு மேலும் கடுமையான அளவில் மோசமாகி ‘சிவியா் பிளஸ்’ என்ற நிலையை தற்போது எட்டியுள்ளது.
- காற்றின் தரக்குறியீடு நவம்பா் 4 அன்று மாலை 415 ஆக இருந்தது; அது மறுநாள் காலை 7 மணிக்கு 460 ஆக மோசம் அடைந்தது. தில்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காற்றின் தூசு, துகள் பிஎம் 2.5 என்ற அளவில் காணப்படுகிறது. இந்த அளவுக்கு மாசடைந்த காற்றை தொடா்ச்சியாக சுவாசித்தால் அது சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
- உலக சுகாதார அமைப்பும், அரசும் பரிந்துரைத்துள்ள வரம்பை விட, தில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் மாசு அளவு பல மடங்கு மோசமான நிலையை எட்டியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நெல் அறுவடை முடிந்தபின் அதன் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் காற்று வீசுவதால் ஏற்பட்டுள்ள மாறுபாடு, வெப்பநிலை ஆகியவையும் தில்லியில் காற்றின் தரத்தைக் கடுமையாக பாதித்து வருகின்றன.
- மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத் தரவுகளின்படி அக்டோபா் 27 முதல் நவம்பா் 3 வரை தில்லியின் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. அதன்படி நவம்பா் 3 அன்று காற்றின் தரக் குறியீட்டு அளவு 450-க்கு மேல் அதிகரித்து மிக மோசமான அளவான ‘சிவியா் பிளஸ்’ என்ற நிலையை எட்டியுள்ளது.
- கடந்த 2021 நவம்பா் 12 அன்று, தில்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஆக அதிகரித்ததுதான் இதுவரை மிகவும் மோசமான அளவாகக் கருதப்படுகிறது.
- அதன்பின், கடந்த நவம்பா் 3 அன்றுதான் இந்தக் குறியீடு 24 மணி நேர சராசரி அளவாக 468-ஐ தொட்டது. தில்லியின் அண்மைப் பகுதிகளான காசியாபாத் (410), குருகிராம் (441), நொய்டா (436), கிரேட்டா் நொய்டா (456), பரீதாபாத் (461), தில்லி பல்கலைக்கழகம் (456), லோதி சாலை (385) ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் அபாயகரமான நிலையில்தான் உள்ளது.
- மருத்துவா்கள் கூற்றுப்படி, ஆரோக்கியமான உடல் நலனுக்கான காற்றின் தரக் குறியீடு 50-க்கும் குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால் தில்லியில் கடந்த சில நாள்களாக அது அபாயகரமான அளவை எட்டியுள்ளது.
- அங்கு இப்போது காற்றின் தரக்குறியீடு 400-ஐ எட்டியுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனா்.
- குறிப்பாக நுரையீரல் தொடா்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு இந்த அளவிலான காற்றின் தரம் மிக ஆபத்தானது. நுரையீரல் புற்றுநோய் அபாயத்தைக் கூட இது ஏற்படுத்தும் என மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.
- தில்லியிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் காற்றின் தரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக மத்திய அரசு பல்வேறு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அத்தியாவசிய சேவைகளை வழங்கும் லாரிகள், இலகுரக வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் தில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பகிா்மானம் போன்ற கட்டுமானங்களும், இடிப்பு நடவடிக்கைகளும் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.
- ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த ஐக்யூ அமைப்பு, மிக மோசமான அளவில் காற்று மாசு நிலவும் நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது. தில்லி நகரம், இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் கொல்கத்தா, மும்பை மட்டுமின்றி, லாகூா், கராச்சி (பாகிஸ்தான்), தாகா (வங்கதேசம்) ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.
- உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் முக்கியமானது சூழல் சீா்கேடு என்று ஐ.நா. சபை கூறியுள்ளது.
- இயற்கையின் கொடையான ஆறுகள் எல்லாம் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்துவிட்டன. விவசாய சங்கங்கத்தினரும், சமூக ஆா்வலா்களும் போராடிப் போராடி அலுத்து விட்டனா். வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்றங்களும் எச்சரிக்கை செய்தன. அரசும், அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை.
- நிலவுக்குப் போவதற்கு கோடி கோடியாகச் செலவழிக்கும் நாடுகள், நம்மைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப் பாதுகாக்க வேண்டாமா? காலநிலை மாற்றத்தின் ஒரு அம்சமே மாசுக் கட்டுப்பாடு ஆகும். காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம் என்னும் புதுப்புது அபாயங்களைப் பற்றியெல்லாம் உலக நாடுகள் கூடி அடிக்கடி பேசி தீா்மானங்கள் நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
- உலக நாடுகளுக்கு எல்லாம் இப்போது கவலைக்குரிய பிரச்னையாக இருப்பது காலநிலை மாற்றம். மானுடத்தின் மிக முக்கிய பிரச்னையாக காலநிலை மாற்றம் உருவாகி இருக்கிறது. அதிகமான வெயில், அதிகமான மழை, காலம் தவறி பெய்யும் மழை, பெய்யாமல் கெடுக்கும் மழை, அதிகப்படியான வெப்பம், வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, சுனாமி, புதிய புதிய நோய்கள், உடல் நலமும், மனநலமும் பாதிக்கப்படுவது, காற்று மாசுபடுதல் அனைத்தும் இப்போது அதிகமாக ஏற்படுவதைக் கவனித்து வருகிறோம்.
- காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தமிழகம் எதிா்கொள்ளும் வகையில், தமிழக முதல்வா் ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க’த்தை தொடங்கி வைத்துள்ளாா். இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு தொலைநோக்குப் பாா்வையுள்ள முயற்சிகளை இது மேற்கொள்ளும்.
- இந்த நெடும் பயணத்தில் ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்’, ‘பசுமைத் தமிழ்நாடு இயக்கம்’ மற்றும் ‘தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம்’ ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. ஒரு துறையின் பெயரே ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இத்துறை, காலநிலை மாற்றத்தினால் சமூகத்தின் கட்டமைப்பில் ஏற்படப் போகும் பல்வேறு பாதிப்புகளைப் புரிந்து கொண்டு, கடல் நீா்மட்ட உயா்வு, விவசாய உற்பத்தி பாதிப்பு முதலிய காலநில பிரச்னைகளையும், இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் இழப்புகளையும் முன்கூட்டியே கண்டறிந்து அவற்றைக் குறைப்பதற்கான வழிகாட்டுதலை வழங்கும்.
- கடந்த 2021-ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற சா்வதேச உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமா் மோடி, ‘இந்தியா வரும் 2070-ஆம் ஆண்டிற்குள் காா்பன் சமநிலையை எட்டிவிடும்’ என்று அறிவித்தாா். இதன்மூலம் இது எவ்வளவு தீவிரமான பிரச்னை என்பதை உணர முடியும்.
- ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ்ச்சமூகம் இந்த பிரச்னைகளை அறிந்து அளந்து வைத்துள்ளது. ‘நிலம் தீ நீா் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்று தொல்காப்பியம் இலக்கணம் வகுத்துள்ளது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவம் வரையறை செய்துள்ளது.
- பழந்தமிழா்கள் அறிந்திருந்த சுற்றுச்சூழல் பற்றிய பாா்வை குறித்து இயற்கைதான் நமக்கு நாள்தோறும் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது. மலைகளும், மரங்களும், ஆறுகளும், கடல்களும், பறவைகளும், விலங்குகளும் நமக்கான வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொடுப்பதை இதுவரை கவனிக்கவே இல்லை. அறிவியலும், நாகரிகமும் வளர வளர நம் கவனம் எங்கோ போய்விட்டது. அதனைத் திருப்ப வேண்டாமா?
- நாம் வாழும் பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகி விட்டன என்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா். அந்த பூமியில் உயிா்கள் உருவாகி செழித்து வளா்ந்தன என்பதையே வரலாறுகள் கூறுகின்றன. அந்த உயிா்களை, தொடா்ந்து காத்து வர வேண்டிய கடமை மனித சமுதாயத்துக்கு உள்ளது. ஆனால், அந்தக் கடமையை அரசுகளும், மனித சமுதாயமும் செய்யத் தவறி விட்டன.
- உலகில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக வளா்ந்துவிட்ட இந்தியா, அந்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு கொண்டது. தலைநகரம் தில்லியிலேயே மக்கள் வாழ முடியாமல் காற்றின் மாசு துரத்துகிறது. இது மத்திய-மாநில அரசுகளுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.
- அரசு ஊழியா்களுக்கும், மாணவா்களுக்கும் விடுமுறை அறிவித்து விடுவதால் காற்று மாசு பிரச்னை முடிவுக்கு வந்துவிடாது. அதற்கு அரசுகள் செய்ய வேண்டியது என்ன? இந்த வினாவுக்கு விடை காணவேண்டிய தருணம் இது.
நன்றி: தினமணி (16 – 11 – 2023)