TNPSC Thervupettagam

காலநிலைக்குச் சாதி தெரியுமா

July 8 , 2023 553 days 369 0
  • காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு’ (IPCC) என்கிற சர்வதேச அமைப்பு, காலநிலை மாற்றம் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. காலநிலை மாற்றத்தின் அறிவியல் தொடங்கி பாதிப்புகள் வரை அதன் திசைவழி குறித்து ஆராய்ந்து, குறிப்பிட்ட இடைவெளியில் ‘மதிப்பீட்டு அறிக்கை’களை (Assessment Report) ஐபிசிசி வெளியிட்டுவருகிறது. 1990 முதல் 2022 வரை மொத்தம் 6 மதிப்பீட்டு அறிக்கைகளை ஐபிசிசி வெளியிட்டுள்ளது.
  • ஐபிசிசியின் அறிக்கைகள், அறிவியல் சமூகத்தைத் தாண்டி பரவலான கவனம் பெற்றிருக்காத நிலையில், 2018இல் அந்த அமைப்பு வெளியிட்ட ‘1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை’, பொதுச் சமூகத்தினரிடையே உலகளாவிய அளவில் சலனத்தை ஏற்படுத்தியது.
  • இந்தப் பின்னணியில், கடந்த மார்ச் மாதம் ஐபிசிசி வெளியிட்ட ‘ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை’யின் தொகுப்பு, காலநிலை மாற்றத்தின் ஆதாரப் பிரச்சினைகளில் ஒன்றை முதன்மைப்படுத்தியுள்ளது: ‘தற்போதைய காலநிலை மாற்றத்துக்கு வரலாற்றுரீதியாக மிகக் குறைவாகப் பங்களித்தச் சமூகங்கள், அதனால் விளையும் பாதிப்புகளால் சமமற்ற முறையில் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன.’

சூழலும் சாதியும்

  • தொழிற்புரட்சியின் விளைவால், புதைபடிவ எரிபொருள்களை அடிப்படையாகக் கொண்டு நவீன காலகட்டத்தின் பொருளியல் முறையாக முதலாளித்துவம் எப்படி உருப்பெற்றது; மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு, முதலாளித்துவச் சமூகத்தின் பெருநிறுவனங்கள், முதலாளிகள் உள்ளிட்ட மீச்சிறு குழுவினரின் முதன்மைப் பங்களிப்பு - அதன் பின்னணியில் வர்க்கப் போராட்டம் ஆகியவை குறித்து முந்தைய வாரங்களில் பரிசீலித்தோம்.
  • இந்நிலையில், இந்தியப் பின்னணியில் காலநிலை மாற்றம் பற்றிய சொல்லாடலில் பொருளியல், வர்க்கம் ஆகியவற்றோடு தவிர்க்க முடியாத – இந்தியாவுக்கே உரித்தான – ஓர் அம்சமாக இருக்கும் சாதி பற்றி பேச வேண்டியதும் அவசியமாகிறது.
  • இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியச் சமூகத்தில் சாதியின் தாக்கம் நிலவிவந்தாலும், அதன் செயல்பாடும் வடிவமும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ‘தன் அதிகாரத்தைத் தக்கவைக்க மாறுபடும் சூழல்களுக்கேற்பத் தன் சிந்தனைகளையும் தந்திரங்களையும் அது மாற்றிக்கொண்டே வந்துள்ளது’ என்பார் ஆய்வறிஞர் பிரஜ் ரஞ்சன் மணி. அறிவியலும் தொழில்நுட்பமும் தம் எல்லையைப் பிரபஞ்சத்தின் விளிம்புக்கு நகர்த்திக்கொண்டிருக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும், இந்தியாவில் சாதியத்தின் வேர் ஆழப்பட்டிருக்கிறது என்பது துயரம்.
  • சாதியம் என்ற அறமற்றச் சிந்தனையைப் பல தளங்களிலும் கட்டுடைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘அசுத்தம்’ என்பதில் தொடங்கி, ‘அகமணம்’ என்பது முடிய சாதியத்தின் அனைத்துக் காரணிகளையும் சூழலியல் நோக்கில் ஆய்வு செய்கையில், வியப்பளிக்கும் விதமாக அவற்றின் பின்னணியில் சுற்றுச்சூழல் தன்னைப் பொருத்திக் கொள்வதைக் காணமுடிந்தது,’ என ‘சூழலும் சாதியும்’ நூலில் நக்கீரன் அறிவிக்கிறார்.
  • அந்த வகையில், இன்றைய காலநிலை மாற்றத்தின் காலகட்டத்தில், சாதி எப்படி இயங்குகிறது என்பதும் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கொண்டிருப்பவர்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் முதன்மையாக எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் ஆய்வுக்குரியவை.

வர்க்கமும் சாதியும்

  • மழைப்பொழிவு மாறுபாடுகள், மாறிவரும்பருவமழையின் தன்மை, தீவிரமடைந்துவரும் புயல்கள், திடீர் வெள்ளங்கள், புதிய இயல்பாகி வரும் வெப்ப அலைகள், கடல் அரிப்புகள் போன்றவை கடந்த சில ஆண்டுகளாகக் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவில் தீவிரமடைந்து வருவதை உணர்த்துகின்றன.
  • சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இத்தகையப் பேரிடர்களால் நேரடியாகப் பாதிக்கப் படுகின்றனர்; ஆனால், பாதிப்பு அனைத்துத் தரப்பினருக்கும் ஒன்றுபோல இருக்கின்றனவா? சமூகப் படிநிலையில் மேல்மட்டத்தில் இருப்பவர் களும் தலித்துகள், பழங்குடியினர், நாடோடிகள், மீனவச் சமுதாயத்தினர், நகர்ப்புற ஏழைகள், வீடற்றவர்கள், பாலினச் சிறுபான்மையினர் போன்ற படிநிலையில் கீழே இருப்பவர்களும் எதிர்கொள்ளும் பாதிப்புகளை ஒருபோதும் சமமாகக் கருத முடியாது.
  • 2022இல் அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளத்தில், சுமார் 197 பேர் இறந்தனர்; 2,35,845 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நாசமாகின. அப்போது இரவு பகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தோர், பன்ஷ்போர் எனப்படும் பட்டியல் சாதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தாம்.
  • காலநிலை மாற்றத்தால் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் மேற்கு வங்கத்தின் சுந்தரவனப் (Sundarbans) பகுதியில் கடல்மட்ட உயர்வால், அப்பகுதிப் பழங்குடியினரின் வாழ்க்கை மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. நாடு முழுவதும் நிலவும் எண்ணற்ற உதாரணங்களில் இவை ஒன்றிரண்டுதான்.

சூழலியல் நீதி

  • இந்தியா, தனது ‘தேசியக் காலநிலைச் செயல்திட்டக் கொள்கை’யை [National Action Plan for Climate Change (NAPCC)] 2008இல் வெளியிட்டது; அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் தங்களுக்கான காலநிலைச் செயல்திட்ட கொள்கைகளை வெளியிட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தால் விளையும் பாதிப்புகளிலிருந்து தகவமைத்துக் கொள்வது பற்றி இந்தக் கொள்கை வழிகாட்டுக்கிறது.
  • ஆனால், சாதி குறித்தோ சாதியின் பெயரால் ஒடுக்கப்படும் சமூகத்தினர், காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்தோ அந்தக் கொள்கைகள் கவனம் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சமூகக் கோபுரத்தில் ஆகக் கீழே தள்ளப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட சாதிகள்தாம் பொருளாதார ரீதியாக மிகவும் வறியவர்களாக இருக்கின்றனர்.
  • இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளில் மீட்பு நடவடிக்கைள், வாழிட புனரமைப்பு போன்றவை அவர்களைக் கடைசியாகவே எட்டுகின்றன; சில வேளைகளில் எட்டாமலேயே போய்விடுகின்றன.
  • இந்தப் பின்னணியில், “சாதி-வர்க்க விவாதத்தில், இந்தியாவில் போதுமான அளவுக்குக் கவனம் குவிக்கப்படாத அம்சங்களில் ஒன்று அரசின் பங்கு. இதுவே இப்பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கான மையமான புள்ளியாகும். சுதந்திரத்துக்குப் பின்பு அரசு தனது அரசியல் திட்டங்களின் மூலமாக இந்தியச் சமூக வளர்ச்சியில் மேற்கொண்ட குறுக்கீடுகள் என்பன, இந்தச் சமூக அகக் கட்டுமானத்தை உறுதிசெய்து முழுமையாகத் தக்கவைத்துக் கொள்வதில் அரசின் மையமான பங்கை வெளிப்படுத்தியுள்ளன. நிலச்சீர்திருத்தம், பசுமைப் புரட்சி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், இடஒதுக்கீடு ஆகியவை இவற்றில் அடங்கும்” என்கிற அரசியல் அறிவியலாளர் ஜி.ஹரகோபாலின் (1988) மதிப்பீடு முக்கியத்துவம் பெறுகிறது.
  • அந்த வகையில், இனம், வர்க்கம், பாலினம் ஆகியவற்றுடன் சாதியையும் ஒரு கூறாக காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சட்டக மாநாடு [United Nations Framework Convention on Climate Change (UNFCCC)] அங்கீகரிக்க வேண்டும்; காலநிலை மாற்ற பாதிப்புகளில் சாதியையும் ஓர் அம்சமாக இந்தியா உள்ளடக்க வேண்டும்.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அனைத்தும்பொதுவானவை. ஆனால், சாதியின் பெயரால் சமூகப் படிநிலையில் கீழிறக்கப் படுபவர்கள், ஏற்கெனவே எதிர்கொண்டிருக்கும் ஒடுக்குமுறைகளுடன் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு களையும் முதன்மையாக எதிர் கொள்கின்றனர்.
  • இந்தியச் சமூகம் சாதியின் பிடியிலிருந்து முதலில் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்; காலநிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில், சூழலியல் நீதியை உள்ளடக்கிய சமூக நீதியை எல்லாருக்கும் உறுதிப்படுத்துவது அப்போதுதான் சாத்தியப் படும்.

நன்றி: தி இந்து (05 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories