TNPSC Thervupettagam

காலநிலை மாற்றத்தின் தாக்கம்... வெயிலால் வாடி வதங்கும் பொருளாதாரம்

June 5 , 2023 540 days 343 0
  • நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெயிலால் மனிதர்கள் மட்டுமல்ல பொருளாதாரமும் பாதிக்கிறது. வாட்டி வதைத்து வந்த கத்தரி வெயில் ஒரு வழியாக விடைபெற்றுச் சென்றிருந்தாலும் இன்னமும் பல இடங்களில் ஒரு வார காலத்துக்கு இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
  • கோடை காலத்தில் நிலவும் இயல்பான வெப்பத்தைவிட அதிகமான வெப்பம் நிலவுவது வெப்ப அலை என வரையறுக்கப்படுகிறது. வழக்கமாக இது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கும். பொதுவாக இந்தியாவில் மார்ச் - ஜூன் மாதங்களில் வெப்ப அலை உணரப்படும்.
  • ஒவ்வொரு பருவ காலத்திலும் மூன்று அல்லது அதற்கு அதிகமான வெப்ப அலைகள் ஏற்படும். காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப அலை அதிகரிக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரமித் டெப்நத் தனது குழுவினருடன் மேற்கொண்ட ஆய்வில், காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்ப அலைகள் இந்தியாவின் நீடித்த வளர்ச்சி இலக்கை அடைவதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். வறுமையை ஒழித்தல், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட ஐ.நா. சபை அறிவித்துள்ள 17 நீடித்தவளர்ச்சிக்கான இலக்கினை அடைவதில் உறுதி எடுத்துள்ள இந்தியாவிற்கு வெப்ப அலை சவாலாக இருக்கும் என்பதை இவர்களின் ஆய்வு உணர்த்துகின்றது.

உலக அளவிலான தாக்கம்:

  • உலக அளவில் 3. 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகரித்தால் 2050-க்குள் உலக அளவிலான பொருளாதாரம் 18 சதவீதம் குறைய வாய்ப்பு இருப்பதாக சுவிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2050-க்குள் வெப்பம் அதிகரிப்பதை கட்டுப்படுத்தாமல் விட்டு 2.6 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் பொருளாதார வளத்தில் அமெரிக்கா ஏழு சதவீதமும், மேற்கத்திய நாடுகளான கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்றவை கள் ஆறு முதல் பத்து சதவீத அளவிலான பொருளாதார இழப்பை சந்திக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
  • மலேசியா,பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருபதுசதவீத அளவிலான பொருளாதார இழப்பும், இந்தோனேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் முப்பது சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்றும் கூறுகிறது.சொல்லப்போனால் சராசரியாக வெப்பம் 2.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், ஒரு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

இந்தியாவில் ஏற்படும் பாதிப்பு:

  • எந்தவொரு நாடும் காலநிலை மாற்றத்தில் இருந்து தப்பித்து ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது. ஆம், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 2021-ஆம் ஆண்டில் மட்டும் அதிக வெப்பநிலை காரணமாக சில குறிப்பிட்ட துறைகளான சேவை, உற்பத்தி, வேளாண்மை மற்றும் கட்டுமானத்துறைகளில் ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் 159 பில்லியன் டாலர் ஆகும்.
  • அதிலும் 2016 முதல் 2021 ஆம் இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் காலநிலை மாற்றத்தால் வேளாண்மையில் 36 மில்லியன் ஹெக்டேர் அளவில் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டதுடன் 3.75 பில்லியன் டாலர் அளவில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • உலக வங்கி 2023-24 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.6 சதவீதம் இருக்கும் என்று கணித்து இருந்தது. ஆனால் அது தற்போது 6.3 சதவீத அளவில்தான் இருக்கும் என்று மீண்டும் கூறியுள்ளது. இதற்கு அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படும் பொருளாதார இழப்பு முக்கிய காரணி என்று குறிப்பிட்டுள்ளது.

வேளாண் துறையில்:

  • முதலில் அதிக வெப்பநிலை என்பது விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தி பயிர் மகசூலை குறைப்பதனால் உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அபாயமும் உள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகரித்து நுகர்வோரை பாதிக்கும் நிலையும் ஏற்படும். அத்துடன் பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை, பயிர்களில் நோய் தாக்கம் மற்றும் கால்நடை தீவனப் பற்றாக்குறை என வேளாண்மை சார்ந்த இதர துறைகளையும் பாதிப்புக்கு அதிக வெப்பநிலை உள்ளாக்குகிறது.

மின் துறையில்:

  • வேளாண்மைக்கு அடுத்து மின் துறையில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மின் தேவையின் அளவை மக்களிடையே அதிகரிக்கிறது. கோடை காலம் என்றால் ஏசி விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். ஏசியின் தேவை அதிகரிக்கும்போது அதற்கான மின்சாரத் தேவையும் அதிகரிக்கும். பல மாநிலங்களில் ஏற்கனவே அவ்வப்போது மின்தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் இது மேலும் பிரச்சனையை உண்டாக்கும்.

வேலைவாய்ப்பில்:

  • மனிதவளத் துறையை எடுத்துக்கொண்டால் அதிக வெப்பநிலை காரணமாக வேலையாட்களின் உற்பத்தித்திறன் பாதிப்பு அடைவதுடன் 2030-க்குள் உலக அளவில் 80 மில்லியன் அளவிலும், இந்திய அளவில் 34 மில்லியன் அளவிலும் வேலை இழப்பு ஏற்படும் என்று உலக வங்கி கூறியுள்ளது. ஏனென்றால் இந்தியாவை எடுத்துக்கொண்டால், 75 சதவீதம் மக்கள் நேரடியாக வெப்பத்தை எதிர்கொள்ளும் துறை சார்ந்த வேலைகளில்தான் ஈடுபடுகின்றனர்.
  • இதற்கிடையில் மெட்ராஸ் பொருளாதார ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வுக்குறிப்பில் காலநிலை மாற்றத்தால் 1980-2019 காலகட்டத்தில் மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்தால் தனி நபர் வருவாய் 4.7 சதவீதம் அளவுக்கு குறைவதாகவும், அதுவே வளர்ச்சி அடைந்த மாவட்டங்களில் மக்களிடையே கடன் வாங்கும் நிலை, மின்சாரம், சந்தை மற்றும் சாலைகளின் தேவை போன்றவைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படி அதிகரித்து வரும் வெப்பநிலை என்பது இந்தியாவின் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை மேற்கண்ட காரணிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

என்னதான் தீர்வு?

  • காலநிலைமாற்றத்திற்கு உடனடித் தீர்வை அவ்வளவு எளிதாக எட்டிவிட முடியாது. எனினும் அதை எதிர்கொள்ள சில யோசனைகள்:
  • கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு தகுந்த கொள்கைகளை வகுக்க முன்வரவேண்டும்.
  • வேளாண்மையில் ஆராய்ச்சியாளர்கள் அதிக அளவிலான வெப்பத்தை தங்கி வளரும் பயிர் ரகங்களை கண்டறிய களம் இறங்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் சார்ந்து இருக்கும் விதிகளை தொழில் நிறுவனங்கள் கடைபிடிப்பதுடன், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாசு ஏற்படாத வகையில் தொழில்புரிய வேண்டும். அவ்வாறு தொழிலை மேற்கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தை அமல்படுத்தும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை தர அரசு முன்வரலாம்.
  • வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சுற்றுச்சூழல் சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை தந்து கடன் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.
  • இவை எல்லாவற்றையும் விட, மரம் நடுதல் தொடங்கி தனி மனித பங்களிப்பு என்பதும் அதிக வெப்பநிலையை கட்டுப்படுத்த பெரும் உதவியாக இருக்கும்.

நன்றி: தி இந்து (05 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories