TNPSC Thervupettagam

காலநிலை மாற்றத்தின் பரிமாணங்கள் | ஏப்ரல் 23: உலகப் புத்தக நாள்

April 20 , 2024 253 days 184 0
  • நிலம் நீர் தீ விளி விசும்போடு ஐந்தும்
  • கலந்த மயக்கம் உலகம் ஆதலின்...
  • உள்ளடக்கத்தைப் பிரதிபலிப்பது போன்ற இந்தத் தொல்காப்பிய மேற்கோளுடன் தொடங்கும் இந்நூல் தமிழ் அறிவியல் எழுத்துத்தளத்திற்கு ஒரு முக்கியமான வரவு. சூழலியல் துறையில் முறையாகப் படித்துப் பட்டம் பெற்ற பேராசிரியர் ரகு ராமன் எழுதியது. காலநிலை மாற்றத்தைப் பற்றி, அதன் பல பரிமாணங்களைப் பற்றி ஆழ்ந்த ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இருபத்தாறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
  • ஆனால், ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியே ஒரு முழுப் படைப்பாகவும் விளங்குகிறது. நவீன மனித இனம் இவ்வுலகில் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தும், 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மை தோன்றியது ஏன் என்கிற கேள்விக்கு ஒரு கட்டுரையில் பதில் தந்திருக்கிறார்.
  • நூலின் அடிப்படையான கரிசனம் காலநிலை மாற்றம். இது பற்றித் தமிழகத்தில் சரியான புரிதல் இல்லை. “இது எங்கோ தொலைவில் நடைபெறும் முக்கிய நிகழ்வல்ல. அது நம் அருகில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. நம் ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டிருக்கின்றது “ என்கிறார் நூலாசிரியர். இயற்கையின் தாக்கத்தையும் வரலாற்றையும், அதேபோல் இயற்கையையும் நம் வாழ்க்கையையும் பிரிக்க முடியாது என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்.
  • பேரரசுகள் பல எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் சூழலியல் காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றார். சில பத்தாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட, இன்று குஜராத்தின் கட்ச் பகுதியில் இருக்கும் சிந்து சமவெளி நாகரிக இடங்களில் ஒன்று தோலவீரா. அன்றைக்கு எவ்வாறு பரந்திருந்த ஒரு நகரம், சூழலியல் மாற்றங்களால் நலிவுற்றது என்பது விளக்கப்படுகின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சூழலியலைத் தவிர்த்து வரலாற்றைப் பதிவுசெய்ய முடியாது என்பது ஆசிரியர் நிலைப்பாடு.
  • ஐம்பதுகளில் நான் மாணவனாக பெ.நா.அப்புசாமியின் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை கலைமகள் போன்ற சஞ்சிகைகளில் படித்தது நினைவிற்கு வந்தது. அதன் பின்னர், தமிழ் அறிவியல் எழுத்தில் பெரிய தொய்வு ஏற்பட்டது.
  • இதனால் கடந்த சில பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான அறிவியல் கருத்தாக்கங்கள் சார்ந்த கலைச்சொற்கள் தமிழில் தேவையான அளவு உருவாக்கப்படவில்லை. ஆகவே, அவற்றைச் சுற்றிச் சொல்லாடல் ஏதும் பெரிதாக உருவாகவில்லை. காலநிலை மாற்றம் சரியான கவனத்தை ஈர்க்காத அவ்வாறான ஒரு கருத்தாக்கம்.
  • அறிவியல் சொல்லாடல்: இந்த நூலில் அறிவியல் கருதுகோள்களை விளக்க நூலாசிரியர் கச்சிதமான சொற்றொடர்களைப் பயன் படுத்தியிருக்கிறார். போதை தரும் தாவரங்களை ‘உளமாற்றிகள்’ (Psychodelic) என்றும் Green Houses Gas களை ‘பைங்குடில் வளிகள்’ என்றும் குறிப்பிடுகிறார். பனியுகம், கரிம சுழற்சி போன்ற அறிவியல் கருதுகோள்களைத் தட்டுத்தடுமாறாமல் ரகு ராமன் விளக்கியிருக்கிறார்.
  • தன் எழுத்தின் மூலம் பல பயனுள்ள கலைச்சொற்களை நமக்குத் தருகிறார். அறிவியல் எழுத்து வளர்வதற்குக் கலைச்சொல் உருவாக்கம் முக்கியமானது. அந்த வளர்ச்சி இல்லாது போனதால், அறிவியல் சார்ந்த சொல்லாடல் தோன்றுவதில்லை.
  • எளிமையான, தெளிவான தமிழில் அறிவியல் கோட்பாடுகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது நன்கு அறியப்பட்ட, ஜூராசிக் பார்க் (1993) போன்ற திரைப்படம் ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்த நூலில் துல்லியமான விளக்கங்களுடன் பல பெயர்பெற்ற நூல்களைக் கட்டுரைகளில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
  • உளவியலாளர் வில்லியம் ஜேம்ஸ் எழுதிய The Varieties of Religious Experience (1902) என்கிற நூல் அவற்றில் ஒன்று. 1960களில் ‘புவி வெப்பமாதலைப்’ பற்றி முதன் முதலில் பேசிய ஹூபர்ட் லேம்ப் போன்ற பல சமகால அறிவியலாளர்களின் கருத்துகளை நம் முன்வைக்கின்றார்.
  • சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், அவற்றின் அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 74,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த டோபா எரிமலை வெடிப்பு இதில் ஒன்று. இந்தோனேசியாவில் நிகழ்ந்த இந்த வெடிப்பின் சாம்பல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது.
  • இந்தியாவிலும் ஆந்திரம், ஒடிசா முதலிய இடங்களில் இந்தச் சாம்பல் கண்டறியப்பட் டுள்ளது. ஆயிரக்கணக்கான் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பேரிடர் ஒன்றைப் பற்றியும், நம் காலத்தில் நடக்கும் நகரமயமாக்கலைப் பற்றிப் பேசினாலும், நூலின் குவிமையம் காலநிலை மாற்றமே.
  • கவனம் தேவைப்படும் அம்சங்கள்: தமிழ்ப் பதிப்புலகில் அபுனைவு நூல்களின் வடிவமைப்பில் தேவையான கவனம் செலுத்தப்படுவதில்லை. இந்த நூலில் சொல்லடைவு தரப்படவில்லை. இந்த அங்கம் ஒரு நூலின் பயன்பாட்டை அதிகப்படுத்தும். அதிலும் கட்டுரைத் தொகுப்புகளில் சொல்லடைவு இன்றியமையாதது என்று நான் நினைக்கிறேன்.
  • அது பொருளடக்கம் போல அத்தியாவசியமானது. அறுபதுகளில் வெளியான பல தமிழ் நூல்களில், சிறப்பாக சைவ சித்தாந்தப் பதிப்பக நூல்களில், சொல்லடைவு தவறாமல் இடம்பெற்றிருந்தது.
  • இந்த நூல் செப்பனிடப்படவில்லை என்றும் தெரிகின்றது. நீட்டலளவைக் குறிப்புகளாகச் சில இடங்களில் அடியும் மற்ற இடங்களில் மீட்டரும் குறிப்பிடப்பட்டுள்ளன. மெட்ரிக் முறைதான் பின்பற்றப்பட வேண்டும். செப்பனிடப்படுதல் (editing) ஒரு நூலுக்கு இன்றியமையாதது என்பது இன்னும் இங்கு உணரப்படவில்லை.
  • அண்மையில் ஒரு தமிழ் எழுத்தாளரிடம் பேசியபோது அச்சுப்பிழை திருத்துபவருக்கும் (proof reader), செப்பனிடுபவருக்கும் (editor) இடையே உள்ள வேறுபாட்டை அவர் அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இது நாம் இருக்கும் நிலைக்கு எடுத்துக்காட்டு.
  • அதே நேரம் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடிய உசாத்துணை நூல்களின் பட்டியலை இந்நூலின் ஆசிரியர் விவரமாகக் கொடுத்துள்ளார். சூழலியல் நூல்களில் இந்த நூல் குறிப்பிடத்தக்க வரவு.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories