TNPSC Thervupettagam

காலநிலை: எங்கு நிற்கிறோம்?

July 6 , 2024 189 days 320 0
  • நவீனப் பேரிடர் மேலாண்மையில் இப்படியொரு வாசகத்தை முன் வைக்கிறார்கள்: கடந்த காலம் எதிர்காலத்துக்கான வழிகாட்டி அல்ல. காலநிலைச் சிக்கலுக்கும் இது ஓரளவு பொருந்தும் என்றே நினைக்கிறேன். இனி வரப்போகும் மாற்றங்களின் தன்மையும் வேகமும் பழையன போல் இராது.
  • காலநிலை ஒரு விதமான அவசரநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றனவா? கொள்கை வகுப்பதற்கு உதவும் ஆய்வுகளுக்கும், கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒதுக்கப்படும் நிதிதான் அரசின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும். நடைமுறையில், கட்சி அரசியலும் கார்ப்பரேட் மூளைகளும்தான் அரசுக்கொள்கைகளை வழிநடத்துகின்றன.
  • சுனாமி நிவாரண, மறுகட்டுமானக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணைகள் பலவும் கள நிலை மையைப் பிரதிபலிக்கவில்லை என்பதை ஓர் ஆய்வாளனாகக் கவனித் திருக்கிறேன். மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி, தொலைநோக்குப் பார்வையோடு வகுக்கப்படும் கொள்கைகள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ள, ஒரு சில வரலாற்று அனுபவங்களைப் பார்ப்போம்.

பிரிட்டன்:

  • பொ.ஆ. (கி.பி.) 1943இல் -உலகப் போர் உச்சத்தில் இருந்த காலம்- லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தை ஒரு நாள் புகைமேகம் சூழ்ந்தது. ஏறத்தாழ எல்லாருக்கும் கண் எரிச்சல்; மூக்கும் ஒழுகியது. வாகன ஓட்டிகளுக்கோ கல்லெறி தொலைவுக்கு அப்பால் சாலையில் எதுவுமே தெரியவில்லை. இது எதிரி நாடுகளின் போர்த் தாக்குதலோ என மக்கள் பதறினர். உண்மையில் அது காற்று மாசும் மூடுபனியும் சேர்ந்து ஏற்படுத்திய பனிப்புகை மூட்டம் (smog).
  • பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இது போன்றவொரு பனிப்புகை மூட்டம் லண்டன் நகரில் ஏற்பட்டது. 1950, 60களில் எல்லாம் காற்று மாசு குறித்து அங்குள்ள மக்கள் கவலைப்படத் தொடங்கியிருந்தனர். கொள்கை வகுப்பாளர்கள் தீவிரமாகப் பரிசீலிக்கத் தொடங்கினர். அந்நாடுகளின் அரசுகள் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கின. செயல்ரீதியான தீர்வுகள் 1955இல் முன்வைக்கப்பட்டன; 1956இல் பிரித்தானிய அரசு ‘தூய காற்று’ சட்டத்தைக் கொண்டுவந்தது. புகைக் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன.

அமெரிக்கா:

  • காற்று மாசு சட்டத்தை அமெரிக்கா 1963இல் கொண்டுவந்தது. மனித ஆரோக்கியத்துக்கு ஊறு விளை விக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுக்குள் கொணர்ந்த வலுவான, முழுமையான சட்டம் அது. 1970இல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நிறுவப்பட்டது.
  • விளைவாக, 1990இல் வாகனங்கள் வெளியேற்றும் நைட்ரஜன் டையாக்சைடு 56% குறைந்தது; கார்பன் மோனாக்சைடு 77% குறைந்தது. மக்கள்தொகையும் வாகனப் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டிருந்தபோதும், பொருளாதார வளர்ச்சிக்குச் சேதாரமில்லாமல் அமெரிக்கா அதைச் சாதித்தது.

சீனம்:

  • இந்தியா போன்ற ஒரு மக்கள் தொகை மிகுந்த நாட்டில் இப்படி எல்லாம் செய்வது சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு சீனத்தை முன்வைத்து ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். 2014இல் சீனத்தின் முதன்மையான நகர்ப்புறங்கள் எல்லாவற்றிலும் பனிப்புகை மூட்டமும் காற்று மாசும் ஆபத்தான அளவுக்குப் பெருகிக் கொண்டிருந்தன. அந்தச் சூழலில் சீன அரசு சில புதிய இலக்குகளை நிர்ணயித்தது.
  • காற்று மாசுபட்டிருந்த நகர்ப்புறப் பகுதிகளில் நிலக்கரி எரிபொருள் பயன்படுத்தப்படும் புதிய ஆலைகளுக்குத் தடைவிதித்தது. பெருநகர எல்லைக்குள் புதைபடிவ எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களின் நுழைவைக் கட்டுப்படுத்தியது. சில ஆண்டுகளில் பெய்ஜிங் நகரில் காற்றிலுள்ள குறிப்பிட்ட நச்சுகள் 35% அளவுக்குக் குறைந்திருந்தன. அரசின் கொள்கைத் தெளிவும், அதை நடைமுறைப்படுத்தும் அரசியல் துணிவும்தான் நீடித்த தீர்வுகளைத் தரும். மக்கள்தொகை அவ்வளவு பெரிய தடை அல்ல.

இந்தியா:

  • இனி, ஓர் இந்தியக் காட்சியைப் பார்க்கலாம். நாடாளுமன்றத்தின் டிசம்பர் 2018 குளிர்காலக் கூட்டத் தொடரில் அப்போதைய சுற்றுச்சூழல், காடுகள், காலநிலை மாற்றத் துறையின் இணை அமைச்சராக இருந்த மகேஷ் சர்மா, காலநிலை பிறழ்வு குறித்த முக்கியமான ஒரு பிரச்சினையை முன்வைத்துப் பேசினார்: “1990-2100 காலக்கட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் 34.6 அங்குலம் வரை உயர வாய்ப்பிருக்கிறது; அவ்வாறு நேர்ந்தால் கேரளம், கொங்கண், கம்பாட், கட்ச் உள்ளிட்ட மேற்குக் கடற்கரைப் பிரதேசங்களும், கங்கை, கிருஷ்ணா, மகாநதி, கோதாவரி, காவேரி வடிநிலங்களின் கடற்கரைப் பகுதிகளும் கடலுக்கு இரையாகும். இப்பகுதிகளிலுள்ள கடலோர வாழிடங்களை நாம் மொத்தமாக இழந்துவிட நேரும். இந்த அபாயத்திலிருந்து நம் கடற்கரைகளைக் காக்க நம் கையிலுள்ள ஒரே பாதுகாப்பு 2011 கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையில் உள்ள (தடை) விதிகள்தான்.”

உள் முரண்:

  • ஆனால், 2019இல் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையோ இந்த எச்சரிக்கையைக் கணக்கில் கொள்ளவேயில்லை. அன்றைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “2018 கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை, ஒரு நல்ல சட்டமில்லை” என்றார். “இந்த அறிவிக்கை பேரழிவை ஏற்படுத்தும்” என்றார் அன்றைய மத்திய பெண்கள்- குழந்தைகள் துறை அமைச்சர் மேனகா காந்தி. புதிய அறிவிக்கையிலுள்ள ஒரு முக்கியமான சிக்கல்- கடல், கழிகள், ஓடைகளிருந்து 500 மீட்டர் எல்லை வரை கட்டுமானங்களுக்குத் விதிக்கப்பட்டிருந்த தடை, 2018 அறிவிக்கையிலோ அது 50, 20 மீட்டராகக் குறைக்கப்பட்டுவிட்டது.
  • உலக வெப்பநிலை ஏற்றத்தால் கிரீன்லாந்து உள்ளிட்ட இடங்களில் பனிப்பாறைகள் உருகத் தொடங்கும்; கடல் மட்டம் பல அடிகளுக்கு எகிறும். முன்னர் குறிப்பிட்டதுபோல, அதன் முதல் பலி உலகின் கடலோரப் பகுதிகள்: ஈரநிலங்கள், தாழ்ந்த நிலங்கள், கடற்கரை மணல்வெளிகள். கடல் வெள்ளம் உள்ளேறிக் கழிமுகங்கள், நிலத்தடிநீர், ஈரநிலம் ஆகியவற்றின் உவர்ப்புத்தன்மையை உயர்த்திவிடும்.
  • உலக அளவில் சராசரியாகக் கடல்மட்டம் 0.6 முதல் 2.0 அடி வரை உயரும் அபாயம் இருப்பதாகப் பன்னாட்டுக் காலநிலை மாற்ற நிபுணர் குழு கணித்துள்ளது. இந்தியத் தீபகற்பப் பகுதியைப் பொறுத்தவரை, மேற்குக் கடற்கரைகளைவிட சாய்பரப்பான (low relief) கரைநில அமைவைக் கொண்ட கிழக்குக் கடற்கரைகள் மிகுதியாக மூழ்கும்.
  • கடற்கோள்களுக்கு அலைகளின் ஓத எல்லையோ அரசியல் எல்லைக் கோடுகளோ கிடையாது. கடலடி நிலமும் கடற்கரை அமைப்பும் தொல்லியல் வரலாற்றின் ஈவு. பல லட்சம் ஆண்டுகளின் பருவநிலைச் சுழற்சியும் கடலின் நகர்வுகளும் செதுக்கி அமைத்த இயற்கைச் சூழல். தனது பாதையைத் தானே வகுத்துக்கொள்ளும் நதியைப் போல, கடல் தன் கரையைச் சமைத்துள்ளது. அதில் மனிதக் குறுக்கீடு என்பது பேரழிவுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதாகும்.

காலநிலைக் கொள்கை:

  • அரசுகளின் கொள்கை இடையீடு என்பது காலம்தோறும் புதிய கொள்கைகளை வகுப்பது மட்டுமல்ல, அவற்றைச் செயல்படுத்த உடனிருப்பது. தூய ஆற்றல் மாற்றுகளுக்காகத் தனி மனிதர்களையோ தனியார் நிறுவனங்களையோ நாடு நம்பியிருக்க இயலாது. பெருஞ்செலவும் அறிவு வளமும் தேவைப்படும் ஆய்வுப் புலம் இது.
  • வணிக நிறுவனங்கள் முதலீடு, லாபம் என்கிற எல்லைக்குள் நின்றுகொண்டுதான் எல்லாவற்றையும் அணுகும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்திய அரசு ஏராளமான நிதியைச் செலவிடும் கொள்கையை இந்தக் கோணத்தில் பார்க்கிறோம். இவை எல்லாவற்றையும்விட, காலநிலை பிறழ்வு மீதான ஆய்வும் தீர்வும் முன்னுரிமை பெறவேண்டும்.
  • காலநிலை பிறழ்வின் காரணிகளை மட்டுப்படுத்துதல், காலநிலைத் தாக்கத்தைக் குறைத்தல்; தாக்கத்துக்குத் தாக்குப்பிடிக்கும் திறன்களை வளர்த்தெடுத்தல்; உணவு உற்பத்தி முறையில் புதிய தொழில்நுட்பங்கள், சுகாதாரச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள்- இப்படிப் பெருஞ்சுமைப் பணிகள் காத்திருக்கின்றன. காலநிலை பிறழ்வை அடிப்படை உரிமையோடு இணைத்து அணுக வேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் பின்னணியில் மத்திய, மாநில அரசுகள் காலநிலை நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.

காலநிலை அரசியல்:

  • காலநிலை பிறழ்வு தற்போது நிகழ்ந்துவரும் எதார்த்தம். ஓர் உலகப் போரை எதிர்கொள்வதற்கான அவ்வளவு தயாரிப்புகளும் தேவைப் படுகிற சமூக நெருக்கடிநிலை. மக்களின் வருவாய் உயர உயர, ஆற்றல் நுகர்வும் கரிமவளி உமிழ்வும் அதிகரிக்கின்றன. பொருளா தாரரீதியாக மேல்தட்டுகளில் இருப்பவர்கள் வளங்களை, ஆற்றலை மிகையாக நுகர்கின்றனர்; பெருமளவு பசுங்குடில் வளிகளை உமிழ்வோரும் அத்தரப்பினரே.
  • பெருமுதலாளிய நிறுவனங்களும் அமெரிக்கா உள்ளிட்ட வட கோள நாடுகளும் மேல்தட்டில் உட்கார்ந்திருக்கின்றன. ஒரு கென்யக் குடிமகன் உமிழும் கரிம வளி சராசரி ஓர் அமெரிக்கனைவிட 55 மடங்கு குறைவு. ஒரு சராசரி கென்யனைவிட ஊர்ப்புற இனக்குழுவான தாலமியன் உமிழ்வதோ இன்னும் மிகக்குறைவு. கரிமவளி உமிழ்வின் அதிகபட்ச பாதிப்புகளைப் பொருளாதார வலுவற்ற மிகப் பெரும்பான்மையான மக்கள், தென் கோள நாடுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், பழியைச் சுமப்பவர்களும் தண்டனையை அனுபவிப்பவர்களும் இந்தத் தரப்பினரே என்பது வேதனையாக இல்லையா?

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories