TNPSC Thervupettagam

காலம் முழுதும் கற்போம்

January 8 , 2024 371 days 383 0
  • "இளமையில் கல்' என்றார் ஔவை மூதாட்டி. தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி சிறுவன் ஒருவன், இதனை உரத்துச்சொல்லி, மனப்பாடம் செய்துகொண்டிருந்தான். "இளமையில் கல்... இளமையில் கல்... இளமையில் கல்...'அந்த வழியே சென்றுகொண்டிருந்த மகாகவி பாரதியாரின் இதனைக் கேட்டு, "முதுமையில் மண்' என்று முழங்கினார். உடன் சென்ற வ.ரா. இதனைக் கேட்டதும் வியப்புடன் பாரதியாரைப் பார்த்தார்.
  • பாரதியார் அவரைப் பார்த்து, "ஓய்! நமக்கு எதை எடுத்தாலும் திகைப்பாக இருக்கிறது. இளமையிலே தகதகவென்று மின்னும் கோடி சூரியப் பிரகாசத்துடன் நமது குழந்தைகள் ஜ்வலிக்க வேண்டும். அப்படி ஜ்வலித்தால், அவர்கள் முதுமையில் மண்ணாக மாட்டார்கள். உலகத்தார்கள் அவர்களை மதிப்பார்கள். பின்சந்ததியார் போற்றுவார்கள். இல்லாவிட்டால், நாம் இப்பொழுது பழி சுமத்துவதைப் போல, நம்மை நம் பின் சந்ததியார் தூற்றுவார்கள்.
  • பழி சொல்ல வழியில்லாமல், இளைய பாரதத்திற்குப் புதிய வழிசொல்ல, பாரதியார் பாடிய இளநூல்தான், "புதிய ஆத்திசூடி'. இதனால், ஔவையார் பாடியது பழைய ஆத்திசூடி ஆகிவிடாது. அது ஆத்திசூடி; இது புதிய ஆத்திசூடி. அவ்வளவுதான். இருவரும் பாடியது இளையோருக்காகத்தான். ஆனால், காலத்திற்கேற்ற கருத்துகளை சொல்கிற முறையில் பழைமையைப் புதுமையாக்க வேண்டிய தேவை வந்துவிடுகிறது.
  • பொதுவாக, கல் என்ற சொல், இயக்கமற்றுக் கிடக்கும் ஒரு பொருளைக் குறிக்கிற பெயர்ச்சொல்லாகவே பயன்பாட்டில் அமைகிறது. ஔவையார் சொல்கிற "கல்', "கற்க' என்று கட்டளையிடுகிற சொல்.
  • எதிலும் எப்போதும் முனைந்து செயல்படுகிற ஊக்கமும் உற்சாகமும் கொண்ட இளமைப்பருவத்தில் எதையும் செய்யாது கல்போலச் சும்மா இருப்பதை எப்படி பாரதியாரின் மனம் ஒப்பும்? அதனால்தான், "கூடித் தொழில் செய்' என்று கட்டளை இடுகிறார். அதற்கு முன்னதாக, "கற்றது ஒழுகு', "காலம் அழியேல்' என்ற கட்டளைகளையும் புதிய ஆத்திசூடியில் பிறப்பிக்கின்றார்.
  • இளமைப் பருவம் என்பது உயிர்களின் இனிமைப்பருவம்; இயங்கு பருவம். அந்த வயதில் உட்புகுத்தப்படுகிற கருத்தும் செயற்பாடும்தான் காலம் முழுக்க உந்தாற்றல் வழங்கக்கூடியது. எனவே, இளமையில் கற்றல் என்பது பசுமரத்தில் பாய்ச்சும் ஆணிபோல் எளிதில் ஏற்புடையதாகிவிடுகிறது. அது முதலில் பழக்கமாகி, பின்னர் வழக்கமாகி, எப்போதும் நம்முடைய இயல்பாகிவிடுகிறது.
  • இளமையில் கற்றல் என்பது, தமக்குரியது எதுவெனத் தேர்ந்து கற்றல் என்பதோடு, கற்கும் கலையையும் ஓர் கல்வியாகக் கற்கிற இயல்பை இளமையிலேயே நடைமுறைப்படுத்திக் கொள்ளத் தூண்டுகிறது. அதனால்தான், பாரதியார் தன் பாப்பாப் பாட்டில், "காலை எழுந்தவுடன் படிப்பு' என்கிறார்.
  • முழுநாளின் இளம்பருவம் காலை; வாழ்நாளின் முதற்பருவம் இளமை. எனவே, இளம்பருவத்தில் இருந்தே, இளங்காலைப் பொழுதில் படிக்கத் தொடங்கிவிடுகிற பழக்கம், முதுமையிலும் தொடரும். அது முதுமையையும் இளமையாக்கிவிடும். ஆதலால், கற்றல் என்பது வாழ்நாள் முழுவதிலும் இளமையைத் தக்கவைக்கும் ஒரு கலையாக மலர்கிற நுட்பத்தை இது உணர்த்திவிடுகிறது.
  • உண்மையில் சூரியன் உதிப்பதும் இல்லை; மறைவதும் இல்லை. புவியின் சுழற்சியில் அத்தகு தோற்றத்தை அது கொண்டுவிடுகிறது. அதுபோல்தான், அறிவென்பது மலர்வதும் கூம்புவதும் இல்லை. அதனை முழுதும் தன்வயப்படுத்துகிற கலை, கல்வி. அதற்கு "உலகம் தழுவிய ஒட்பம் வேண்டும்' என்கிறார் திருவள்ளுவர் (குறள்: 425). 
  • ஒட்பம் என்பது ஒளிபொருந்திய நுட்பம் கொண்ட தன்மை. இயற்கை, செயற்கை ஆகிய இருநிலைகளிலும் பெறப்படும் நுண்ணறிவு; கூரிய பார்வையால், உலக நடைமுறையை உணர்ந்து காரியம் ஆற்றும் கலை.  
  • இந்த உலகில் பிறந்து வளர்கிற ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒருவித உலகம் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அக-புற உலகங்கள் இரண்டையும் ஒன்றிணைத்து வளர்க்கும் அற்புதம் கனவாகிறது. கனவு நனவாகும்போது இருவேறு உலகங்களும் ஒருசேர இணைகிறது. புதிய உலகம் மலர்கிறது. எதார்த்த உலகமோ எப்போதும்போல் சுழல்கிறது.
  • இவ்வாறு, இயற்கையும் செயற்கையும் இணைந்து செயல்படும் உலகில் வாழ, மனிதகுலம் கல்வியை நாடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது. ஆண்டுசிலவாகக் கழியும் ஆயுளை விரித்து, வளர்த்து யுகம் கடக்க அறிவே துணை செய்கிறது. எனவே, கற்கக் கற்க அறிவு விரிவாவதுபோல், ஆயுளும் விரிவாகிறது. அறிதோறும் அறியாமை தெரியத் தெரிய அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படும்போது, நம்முள் குழந்தையின் குதூகலம் வந்துவிடுகிறது.
  • அந்த ஆர்வமே ஆயுள் வளர்ச்சிக்கு மூல மருந்தாகிவிடுகிறது. அந்தப் பழக்கம் எப்போதும் நம்முள் இளமையைக் கொண்டுவந்து வைக்கிறது; வளர்க்கிறது. தொடர் இயக்கமாக வளர வேண்டி இருக்கிறது. அதனால்தான், "கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடு வயதினனுக்குள்ள மனத்திடனும், இளைஞனுடைய உத்ஸôகமும், குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க' என்று வேண்டுகிறார் பாரதியார்.
  • அனுபவ வழியாய் அறிவை விரிவு செய்யும் கல்வி காலந்தோறும் வளர்ந்து வருகிறது. ஔவையார் காலத்துக் கல்வி வேறு; பாரதியார் காலத்துக் கல்வி வேறு. இளம்பருவத்தோடு கற்றல் முடிந்துவிடுகிற காலம் பழையது. ஆனால், வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டிய தேவை இப்போது வந்துவிட்டிருக்கிறது. கற்க வேண்டிய பாடங்களும் கற்றல் முறைகளும் காலத்திற்கேற்ப மாறுபடுகின்றன. எண்ணும் எழுத்தும் கற்றலுக்கு அடிப்படையானவை. அவை கடந்து எண்ணற்ற நெறிமுறைகள், உரிய வழிமுறைகளோடு நம்முன் வைக்கப்படுகின்றன. அவற்றைக் கற்றால்தான் இந்தக் காலத்தோடு ஒன்றுபட்டு உலகியல் நடைமுறையில் நின்றுகொள்ள முடியும்.  அதனால்தான், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார் (140) என்கிறார் திருவள்ளுவர்.
  • அறிவைப்பெறும் வாயில்களின் தலை வாசல், கல்வி. அது, பள்ளி, பட்டப்படிப்புகளோடு தேங்கிவிடுவதில்லை. காலத்திற்கேற்பவும், கருத்திற்கேற்பவும் மாறும் வாழ்க்கை முறைக்கேற்பவும் பயிலவேண்டிய கட்டாயம் மனிதகுலத்திற்கு இன்றியமையாதது. இப்போதும், அறிவியல் சார்ந்த கருவிகளை வாங்கும்போதும் செயற்படுத்தும்போதும் அதனை இயக்குதற்குப் புதிதாக வழங்கப்பெறும் கையேடுகளைப் படித்து, அதனைச் செயற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் இருக்கிறதே.
  • தனக்கான உலகத்தில் இருந்தபடி, தன்னைச் சுற்றிய உலகத்தோடு ஒட்டி உறவாடி இயங்க வேண்டிய தேவை மனித குலத்திற்கு இருக்கிறது. அதனால்தான், சாகும் வரையிலும் கற்கவேண்டியிருக்கிறது என்பதைக் கட்டாயப்படுத்துகிறார் திருவள்ளுவர். அப்போதுதான் யாதானும் நாடாகும்; ஊராகும் என்பது அவர் தரும் உறுதிப்பாடு. "நாட்டுக்குள்தானே ஊர் இருக்கிறது. நாடாகும் என்றாலே போதாதா' என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொருவிதமான நிலைப்பாடு, உண்டு. ஆனால், நாட்டுக்கோ பொதுநிலைப்பாடு உள்ளது. இரண்டினையும் இணைத்தும் பகுத்தும் புரிந்துசெயல்படுகிற தன்மை, கற்றால்தான் வரும். ஊரையும் நாட்டையும் உள்ளடக்கிய உலக இயக்கம் பேரியக்கம். அது இயற்கை சார்ந்ததும் கடந்ததும் ஆகும்.
  • எனவே, உலகியல் இயற்கைசார் அறிவும், உலக நடைமுறைச் சட்டங்கள் சார்ந்த செயற்கைஅறிவும் இன்றியமையாத் தேவைகளாகிவிடுகின்றன. உலகின் வேறு எந்த நாட்டில் இருந்தாலும் உள்ளூரில் வாழ்கிற தன்மையை உருவாக்கிக்கொள்கிற அளவிற்கு வசதிகளும் திட்டங்களும் பெருகியிருக்கின்றன.
  • இன்றைக்கு உலகையே ஒரு சிற்றூராக்கிவிடுகிற கருவிகள் மலிந்துவிட்டன. உலக நாடுகள் பலவற்றில் வாழ்கிற பிள்ளைகளிடம் உள்ளூரில் இருந்தபடி பேசுகிற பெரியவர்கள் வாழ்கிற நாடாக நம் நாடு ஆகிவருகிறது. காலம் ஒன்றுதான் என்றாலும், உலக இயக்கத்தின் பருவங்கள் வெவ்வேறு. நமது நாட்டின் பொழுதும் அயலகத்தின் பொழுதும் வெவ்வேறு. அவற்றையெல்லாம் வெறும் படிப்பறிவாக இயற்பியலிலும் புவியியலிலும் கற்ற தலைமுறை, இப்போது பட்டறிவாகக் கற்றுப் பயன்பாட்டில் கொள்ளுகிற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
  • உள்ளூரில் பெய்கிற மழையளவுக்கு மட்டுமன்றி, உலகின் வேறு பகுதியில் வாழுகிற தம் மக்கள் வாழுகிற ஊர்களின் மழையளவு குறித்தும் கவலைப்படுகிற தேவை வந்திருக்கிறது. தட்பவெப்ப நிலை, அரசியல் மாற்றங்கள், பொருளாதாரநிலை, உணவு, பண்பாடு உள்ளிட்ட தேவைகளைத் தேடித் தேடித் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டிய கட்டாயம் வந்துவிட்டிருக்கிறது.
  • நேற்றைப்போல் இல்லை இன்று, இன்றுபோல் இல்லை நாளை என்கிற நியதியை அறிந்து நாளும் கற்கிற கட்டாயம் வருகிறபொழுது, நாம் மீளவும் இளையோராகிப் பயிலத் தொடங்குகிறோம். புறத் தேவைகளுக்கான அறிவுசார் நூல்களும், அகத்தேவைகளுக்கான அறம்சார் நூல்களும் நம்முன் பக்கங்களாய் விரிந்துகிடக்கின்றன.
  • தவழ்கிற பருவம் கடந்து முதுகுத் தண்டை நிமிர்த்தி நிற்கப் பழகிய மானுடம் இரு கால்களை ஊன்றி நடக்கப் பழகியதில் இருந்து பெற்ற வளர்ச்சிக்கு இன்னும் முடிவில்லை. ஊர்ந்தும் பறந்தும் விரைந்து இயங்கினாலும் நடை ஒன்றுதான் நம் உடல்நலம் பேணும் பயிற்சிகளில் முதன்மையான ஒன்று என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அது புற நடை.
  • அதுபோல், இளமையில் கற்கத் தொடங்கிய அகநடைப் பயிற்சி, காலம் முழுவதும் தொடரவேண்டிய ஒன்றாக இருக்கிறது. இளமையில் கற்றல் என்பது இளமையாகவே இருக்க உதவும் கலையாக கல்வியாக மலர்கிறது என்பதை அனுபவம் உணர்த்துகிறது.

நன்றி: தினமணி (08 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories