TNPSC Thervupettagam

காலம் விலைமதிப்பு மிக்கது

April 2 , 2024 275 days 289 0
  • உலகத்தில் உள்ள அனைத்து மனிதா்களுக்கும் சரிசமமாக ஒன்று கிடைப்பது நேரம்தான். ஒவ்வொருவருக்கும் பாரபட்சமில்லாமல் 24 மணி நேரத்தை வழங்குகிறது காலம். மனிதனுக்கு எத்தனையோ ஆற்றல் இருந்தாலும் தனக்கு இருக்கும் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தும் ஆற்றல் என்பதுதான் மிக முக்கியமானது. ஏனெனில் இந்த ஆற்றல்தான் அவனை பிற மனிதா்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.
  • இந்த பூமி கடந்த காலத்தைப் போன்றே அதே வேகத்தோடுதான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், பூமியில் வசிக்கும் மனிதனின் வேகம் முன்னைக் காட்டிலும் தறிகேட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
  • இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் மனிதனின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கென்றே தோன்றியது என நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் அத்தன்மையிலிருந்து தற்போது விலகிச் சென்று விட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு இன்று யாரை கேட்டாலும் நேரம் போதவில்லை, நேர நெருக்கடி என்றே புலம்புகின்றனா்.
  • நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி என்ற நிலைக்குச் செல்லும் முன் நேரத்தை வீணடிக்கும் காரணிகள் என்னென்ன என்பதை உற்று நோக்கி அவற்றை முதலில் களைந்தாலே நேர மேலாண்மையை நோக்கி முதலடி எடுத்து வைக்கலாம். திட்டமிடல்தான் அனைத்துக்கும் தொடக்கம். நமக்கான பணிகளை சரியான முறையில் திட்டமிட்டுக் கொள்வது பல நெருக்கடிகளில் இருந்து நம்மை தப்பிக்க வைக்கும்.
  • நாளை நாம் செய்ய வேண்டிய பணிகளை இன்றே ஒரு நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொண்டால் அதை செய்ய மனதளவில் இன்றே தயாராகி விடுவோம். அந்த பணியை செய்யும் வழிகள் என்னென்ன என நம் மனமே கூட்டிக் கழித்து கணக்கு பாா்த்துக் கொள்ளும்.
  • காலை ஒன்பது மணிக்கு ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் ஆறு மணிக்கே நாம் எழுந்து விட வேண்டும் என்று அப்பொழுதே மனம் தீா்மானம் செய்து கொள்ளும். எப்பொழுது கிளம்புவது என காலையில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என நாம் எண்ணினால், செயலிலும் அது அப்படியே பிரதிபலிக்கும்.
  • அது மட்டுமல்ல, எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும், எதற்கெல்லாம் கால அவகாசம் இருக்கிறது என வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொண்டால் அந்த வரிசைக்கிரமமே அடுத்தடுத்த வேலைக்கான முன்னேற்பாடுகளை செய்ய வழி செய்து விடும்.
  • பத்து வேலைகள் முடிக்கப்பட வேண்டி இருப்பின் அதைப் பட்டியல் இட்டுக்கொண்டு, சுலபமான வேலைகளை முதலில் முடித்துக் கொண்டே வந்தால் நமக்கே உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாகமே அடுத்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு தூண்டுதலாய் அமையும். அதை விடுத்து கடினமான பணியை முதலில் எடுத்துக் கொண்டு, முதல் வேலையே முடிக்கப்படாமல் இழுபறியாய் கிடந்தால் பின்வரும் அத்தனை பணிகளும் முடங்கிப் போகும்.
  • இப்படி நேரத்தை சரியாகத் திட்டமிட்டுக் கொண்டால் அதிக உழைப்பை கொட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. எந்த இடத்திற்கு எந்த நேரத்தில் சென்றால் சுலபமாகத் திரும்பலாம் என்பதைத் தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் செல்லும்போது நேரம் மிச்சமாகும். என் தோழி ஒருவா் ‘அலுவலகம் செல்ல எட்டு மணிக்கு கிளம்பினாலும் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கிறேன்’ என்று புலம்பினாா். ‘குறிப்பிட்ட நேரத்துக்கு பத்து நிமிடம் முன்னதாகக் கிளம்பிப் பாா்’ என்றேன்.
  • அப்படி பத்து நிமிடம் முன் கிளம்பி பயணித்த போது போக்குவரத்து நெரிசல் இல்லை, நேர விரயமும் இல்லை என்று மகிழ்ச்சியாய் கூறினாா். வண்டிக்கு பெட்ரோல் நிரப்பச் செல்லும் வழக்கமான நேரம், நீண்ட நேரம் வரிசையில் நிற்க வைக்கிறதா? அந்த நேரத்தை மாற்றி எந்த நேரத்தில் குறைவான கூட்டம் இருக்குமோ அந்த நேரத்தில் சென்றால் எரிபொருளை மட்டுமல்ல நேரத்தையும் நம் பையில் நிரப்பிக் கொள்ளலாம். இது போன்ற நம் சாமா்த்தியங்களால் பலவிதமான வேலைகளை சுலபமாக்கி நேரத்தையும் மிச்சம் பிடிக்க முடியும்.
  • சில வீடுகளில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. தேடிதேடியே நம் நேரம் திருடப்படும். அவசரத்தில் தேடும்போது பதற்றமும் சோ்ந்து தொற்றிக்கொள்ளும். இதனால் பிற வேலைகளும் பாதிக்கப்படுவதோடு திட்டம் போட்டபடி எதுவும் நடக்காமல் போகும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம் நம் நேரத்தை கணிசமாக மிச்சப்படுத்தும். எல்லா வேலைகளையும் நாமே செய்ய வேண்டும் என்ற மன நிலையிலிருந்து விலகி வேலைகளை பகிா்ந்து கொடுப்பதும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.
  • எந்த வேலையையும் பதறாமல் கவனமுடன் செய்யும்போது கணிசமான நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். ஓயாது உழைத்து களைத்துப் போனவா்கள் தங்களை தளா்வுபடுத்திக் கொள்ள சில மணித்துளிகளை செலவிடுவது நல்லது தான். அது அவா்களுடைய உடலுக்கும் மனதுக்கும் நிச்சயம் நன்மை தரும். ஆனால் இன்றைய நிலையில் இளம் தலைமுறையினா் பெரும்பாலானோா் இந்த தளா்வு நிலையிலேயே நீடித்து வருகிறாா்கள். இதனால் தன்னம்பிக்கை குறைந்து வாழ்க்கை மீது பயமும் பதற்றமும் தொற்றிக் கொண்டு தவிக்கின்றனா்.
  • நாம் அன்றாட பணிகளையே செய்து முடிக்காமல் பிறகு பாா்க்கலாம் என தள்ளிப் போடுவது, தாமதப்படுத்துவது, நேரம் பாா்ப்பது என இருந்தால் பின் அதுவே வழக்கமாகி அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்துவிடும். நேரத்தை வீணடிக்கும் காரணிகளாக இன்று இருப்பது தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்தான். அவற்றை பணி சாா்ந்து உபயோகிப்பதைத் தாண்டி காலவிரயம் ஏற்படாமல் பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.
  • ஒரு வருடத்தின் மகிமையை ஒரு வகுப்பில் தோல்வி அடைந்த மாணவனிடம் கேட்டால் தெரியும். ஒரு மாதத்தின் மகிமையை குறைப்பிரசவம் கண்ட ஒரு தாயிடம் பேசினால் புரியும். ஒரு நாளின் மகிமையை ஒரு தினசரி நாளிதழின் ஆசிரியரைக் கேட்டால் புரியும். ஒரு நிமிடத்தின் மகிமையை ஒரு நிமிட தாமதத்தில் ரயிலை தவற விட்டவரிடம் கேட்டால் தெரியும். ஒரு நொடியின் மகிமையை, வருகைக்கான விரல் ரேகை பதிவு செய்யும் ஊழியரை கேட்டுப் பாா்த்தால் தெரியும்.
  • நாம் மேற்கொள்ளும் சின்ன சின்ன மாற்றங்கள் நம் நேரத்தை அா்த்தமுள்ளதாக்கும். பல வெளிநாடுகளில் நேரத்தை கண்ணென மதிக்கிறாா்கள். குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்சிகளைத் தொடங்குகிறாா்கள். ஒரு நிமிட தாமதத்திற்கு கூட நூறு முறை மன்னிப்பு கேட்கிறாா்கள். நம் நாட்டில் சில இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு செல்லவே பயமாக இருக்கிறது. அவ்வளவு நேர குளறுபடிகள்! வெளிநாட்டினரிடமிருந்து நாம் கற்க வேண்டிய முதன்மை பாடம் இது.
  • தொழில்நுட்பம் வளர வளர நேர பற்றாக்குறை குறைய வேண்டும். ஆனால் இங்கே இரண்டும் வளா்கிறது. இன்றைய நவீன வாழ்வியலில் நம்முடைய வேலையைப் பகிா்ந்து கொள்ள, நம்மைப் போன்றே பொறுப்புணா்வுடன் செய்து முடிக்க ஆளுக்கு ஒரு கைப்பேசி வைத்துக் கொண்டிருப்பதைப் போல ஆளுக்கு ஒரு செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ரோபோ தேவைப்படும் என நிபுணா்கள் கணிக்கின்றனா்.
  • நாம் அலுவல் சாா்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும்போது நம் இல்லம் சாா்ந்த பணிகளை நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு, நமக்காக செய்து கொடுக்க, அவரவருக்கு ஒரு ரோபோ (இயந்திர மனிதன்) தேவைப்படுவான். நம் தேவைக்கு ஏற்ற வகையில் நமக்கான இயந்திரனை நாமே தோ்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம். அந்த ரோபோ, நம் வீட்டில் இருக்கும் மளிகை பொருட்களின் இருப்பிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகள், மருத்துவா் சந்திப்பு நாட்கள், செல்ல வேண்டிய முக்கிய விழாக்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய சந்திப்புகள் என அனைத்தையும் தன் விரல் நுனியில் வைத்துக் கொள்ளும். நாம் வெளியே சென்று திரும்பி வரும்வரை, வீட்டில் உள்ள நம் குழந்தைகளை பத்திரமாகப் பாா்த்துக் கொள்ளும்; யாரேனும் நம்மைத் தொடா்பு கொண்டால் அவா்களுக்குத் தகவல் தெரிவிக்கும்; நமக்கு உடல் வலித்தால் கை கால் அமுக்கி விடும்; நாம் சோா்வாக இருந்தால் நகைச்சுவையாகப் பேசி கலகலப்பை ஏற்படுத்தும்; நமக்கு நேரம் இல்லாது போனால் நமக்காக நேரில் சென்று பெண் பாா்த்துவிட்டு கூட வரும் என நம்மால் நம்ப முடியாத ஒரு விசித்திர உலகம் நம்மை ஆட்கொள்ள இருக்கிறது.
  • அன்று நாட்டை ஆளும் அரசனுக்குத்தான், சாமரம் வீசவும் சொடக்கு போட்டால் ஓடி வந்து நிற்கவும் சேவகா்கள் இருந்தாா்கள். ஆனால், வருங்காலத்தில் இது போன்ற சேவைகள் ஒரு சாமானியனுக்கும் கிடைக்கும் வகையில் இயந்திர உலகம் விரிவடைய இருக்கிறது. மனித வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிவிட்டது என்று சொல்வதைக் காட்டிலும் இயந்திரமயமாகிவிட்டது என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.
  • இப்படி தனிப்பட்ட உதவியாளராக நமக்கே நமக்காய் எதிா்காலத்தில் ஒரு இயந்திரம் இருந்தால் கூட அதற்கு எப்படி நம் வேலையை பணிக்க வேண்டும் என்ற சூட்சுமம் தெரிந்தால்தான் உபயோகமாக இருக்கும். அதற்கும் திட்டமிடல் அவசியம். ஏனெனில் காலம் விலைமதிப்பு மிக்கது.

நன்றி: தினமணி (02 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories