- இந்தியாவுக்கு வெளியே ஆங்காங்கே தலைகாட்டத் தொடங்கி இருக்கும் காலிஸ்தான் தீவிரவாதம் கவலையளிக்கிறது. அவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கவில்லை என்றாலும், அந்நிய நாடுகளில் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்கள் என்பதை அவர்களது செய்கைகள் வெளிச்சம் போடுகின்றன.
- அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ இந்தியத் தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதலும், கனடாவில் ஆங்காங்கே இந்தியாவுக்கு எதிராக ஒட்டப்படும் சுவரொட்டிகளும் காலிஸ்தான் அமைப்புகள் மீண்டும் வலுப்பெறுகின்றன என்பதற்கான அடையாளங்கள். கடந்த மூன்று மாதங்களில், காலிஸ்தான் கோரிக்கையை முன்வைக்கும் முக்கியமான தலைவர்கள் மூவர் உயிரிழந்திருக்கிறார்கள்.
- அஸ்ஸாம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் அம்ருத்பால் சிங்கின் குருநாதர் என்று கருதப்படும் அவ்தார் சிங் கண்டா, பிரிட்டன் பர்மிங்ஹாமிலுள்ள மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்; கனடாவின் சர்ரேயிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாரா வாசலில் காலிஸ்தான் புலிகள் படைத் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்; பாகிஸ்தான் லாகூரில், காலிஸ்தான் கமாண்டோ படைத் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
- ஜெர்மனியில் இருந்து இயங்கும் "காலிஸ்தான் ஜிந்தாபாத்' படையின் தலைவர் குர்மித் சிங் பக்கா, அமெரிக்காவில் இருந்து செயல்படும் "நீதி கேட்டு சீக்கியர்கள்' அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், பிரிட்டனில் பர்மிங்ஹாமிலிருந்து செயல்படும் காலிஸ்தான் புலிகள் படைத் தலைவர் பரம்ஜித் சிங் பம்மா ஆகிய மூவரும்தான் காலிஸ்தான் தீவிரவாதத்தை முன்னின்று நடத்தும் தலைவர்களாகத் தொடர்கிறார்கள்.
- இப்போது திடீரென்று தீவிரமடைந்திருக்கும் காலிஸ்தான் அமைப்புகளின் பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது என்பதற்குப் பல காரணங்களும், சான்றுகளும் இருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி கனடாவில் பிரிட்டன் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவுக்கு வான்கூவரிலுள்ள பாகிஸ்தான் தூதர் ஜன்பாஸ் கான் நேரில் விஜயம் செய்தார். பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் திடீர் வெள்ளப்பெருக்கு சேத நிவாரண நிதி திரட்டுவதற்கு அவர் சென்றதாக அதிகாரபூர்வ செய்திக் குறிப்பு தெரிவித்தது.
- தூதர் ஜன்பாஸ் கான் எவ்வளவு நிதி திரட்டினார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், தூதரகத்தின் ஏனைய இரண்டு அதிகாரிகளுடன் அந்த இரண்டு குருத்வாராக்களிலும் அவர் தனித்தனியாக காலிஸ்தான் பிரிவினைவாத இனங்களைச் சேர்ந்த தலைவர்களை ரகசியமாக சந்தித்தார் என்பது மட்டும் தெரியும். அமெரிக்க எல்லையையொட்டிய கனடாவின் பகுதியான சர்ரே, சீக்கியர்கள் மிக அதிகமாகக் குடியேறி வாழும் பகுதிகளில் ஒன்று.
- அடுத்த சில மாதங்களில், கனடாவில் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெறத் தொடங்கின. ஜனவரி 31 அன்று பிராம்ப்டனில் உள்ள கெளரி சங்கர் கோயில் தாக்கப்பட்டது; பிப்ரவரி 17-ஆம் தேதி மிஸ்ஸிஸெளகா ராமர் கோயிலில் இந்தியாவுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன; மார்ச் 23-இல் ஒட்டாவா இந்திய தூதரகத்தின் மீது இரண்டு கையெறி குண்டுகள் வீசப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
- இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாடுகளை, "கருத்து சுதந்திரம்' என்கிற பெயரில் கனடாவும், ஏனைய நாடுகளும் அனுமதித்து வருவதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. பிந்தரன் வாலேவுக்கு எதிராக அமிருதசரஸ் பொற்கோயிலில் நடத்தப்பட்ட 1984 "ஆபரேஷன் ப்ளு ஸ்டார்' நடவடிக்கைக்கு பதிலடியாக, 1985-இல் ஏர் இந்தியா விமானம் கனிஷ்கா காலிஸ்தானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த 329 பேரும் இந்திய வம்சாவளியினரான கனடா பிரஜைகள். இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவோ, தண்டிக்கப்படவோ இல்லை.
- இந்திய குடிமக்களுக்கு எதிராகவும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராகவும் பிரிவினைவாதிகள் நடத்த முற்பட்டிருக்கும் பிரசாரங்களும், அச்சுறுத்தல்களும் சட்டப்படி தடுக்கப் படாவிட்டால், நிலைமை கைமீறக்கூடும் என்கிற இந்திய அரசின் எச்சரிக்கையை அந்த நாடுகள் அசிரத்தையாகக் கடந்துபோகக் கூடாது. இந்தியத் தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல், அதிகாரிகளின் படங்களுடன் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்படுவது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, உடனடி நடவடிக்கைக்கும் உரியது.
- சான்பிரான்சிஸ்கோ தூதரகத் தாக்குதலை அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்து, தூதரகத்துக்கும் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சற்று தாமதமாக கனடா அரசும் காலிஸ்தானியர்களின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. "காலிஸ்தான் விடுதலைப் பேரணி' என்கிற பெயரில் வெளிநாடு வாழ் சீக்கியர்களை இந்தியாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சிகளுக்கும் தடை விதிக்க அந்நாட்டு அரசுகள் முன்வர வேண்டும்.
- சிறுபான்மை சீக்கியர்களின் வாக்குவங்கியைக் கருத்தில்கொண்டு இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத, தீவிரவாத, பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை அனுமதிப்பது என்பது பாம்புக்குப் பால் வார்க்கும் கதையாக முடியும் என்பதை அந்த நாடுகள் உணர வேண்டும்.
நன்றி: தினமணி (12 – 07 – 2023)