- கடந்த வாரம் தமிழ்நாடு முதல்வர் மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்’ ஒன்றைத் திறந்துவைத்திருக்கிறார். ஜல்லிக்கட்டு அரங்கத்துடன், பிரத்யேகமான அருங்காட்சியகமும் அருங்காட்சியகத்துடன் இணைந்ததுபோல் சின்னஞ்சிறிய நூலகம் ஒன்றும் இதனுடன் இருக்கிறது. ஏறு தழுவுதல், கால்நடைகள், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு வரும் நோய்கள், விலங்குகள் பராமரிப்பு, இலக்கிய நூல்கள் என காளை, பசு, எருமை தொடர்புடைய ஐநூறு நூல்களைக் கொண்டிருக்கிறது நூலகம்.
- ‘ஏறு தழுவுதல்’ என்ற கருப்பொருள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியக நூலகம்,இந்திய அளவில் முன்னோடி முயற்சியாக அமைந்திருக்கிறது. நூலகம், ஆவணக்காப்பகம் இரண்டும் வாசகர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் ஆதாரமான இடங்களாகும். இவை இரண்டையும் பயன்படுத்துவதில் உள்ள பிரதான பிரச்சினையே, கடல்போல் குவிந்திருக்கிற நூல்களில், ஆவணங்களில் அவரவருக்குத் தேவையானதைக் கேட்டுப்பெறுவதுதான். ஓர் ஆய்வாளரின், வரலாற்று எழுத்தாளரின்,வல்லுநரின் பெரும்பாலான நேரம், தரவுகளைத் தேடுவதில்தான் கழிகிறது. பலர், தங்கள் தேடலைப் பாதியில்முடித்துக்கொள்வதற்குக் காரணமும் இயல்புக்கு அதிகமாக நேரத்தைச் செலவழிப்பதில் உள்ள நெருக்கடிதான்.
- நூலகத்தின் தேவையே பயன்பாட்டுக்குத்தான். நூலகத்தை எளிமையாகப் பயன்படுத்தும் உத்திகளைக் கால மாற்றத்துக்கு ஏற்றாற்போல் முயன்றுவருகின்றனர். அதில் முதன்மையானது, கருப்பொருள் அடிப்படையில் நூல்களைத் தொகுத்தல். அந்த வகையில் இந்திய அளவில் முன்னோடி முயற்சியாக இந்த அருங்காட்சியக நூலகம் அமைந்துள்ளது.
- இந்தச் சிறிய நூலகத்தில் உள்ள முக்கியமான நூல்களில் பல பிரிட்டிஷார் காலத்தவை. 1806ஆம் ஆண்டு திருவேற்காடு முத்தையா என்பவர் எழுதிய கட்டுரை, ‘The Asiatic Annual Register: or a View of the History of Hindustan and the Politics, Commerce and Literature of Asia: vol. ix’இல் இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையில், தை மாதம் முதல் மூன்று நாள்கள் பொங்கல் பண்டிகைக்காக மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் லார்ட் வில்லியம் பெண்டிங்க், விடுமுறை விடுவதற்கு அனுமதி கொடுத்தது பற்றிய குறிப்பு உள்ளது. அதில் மனித ஆண்டு (Human year) தை ஒன்றில் தொடங்குவதாகவும், சூரியன் தன்னுடைய சுழற்சியில் 180 பாகையைக் கடக்கும் காலத்தை உத்ராயணம் என்றும், மார்கழியில் நிறைவடையும் அடுத்த ஆறு மாதங்கள் தட்சிணாயணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருநூற்றுப் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அக்காலத்தைய வழக்கத்தைக் கூறுவதிலிருந்து தமிழ்ப் புத்தாண்டு பற்றிய கேள்விக்கும் விடை கிடைக்கிறது.
- வெள்ளக்கால் பழனியப்ப சுப்பிரமணிய முதலியார் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுதேசிக் கால்நடை மருத்துவராக இருந்தவர். பிரிட்டிஷார் எழுதிய நூல்களை மொழிபெயர்த்தவர். ஜேம்ஸ் மில் எழுதிய நூலொன்றை, ‘இந்து தேசத்துக் கால்நடைக்காரர் புஸ்தகம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். ‘இந்திய கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள்’ என்றொரு நூலையும் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.
- தா.நெல்லையப்பப் பிள்ளை எழுதிய ‘மாட்டு வாகடம்’, துரைசாமி முதலியார் எழுதிய ‘மாட்டு வைத்தியம்’, முனுசாமி முதலியார் எழுதிய ‘மாட்டின் வாகடக் கண்ணாடி’(1889), இராகவமூர்த்தியின் ‘மாடுபிடி சண்டை’ – (1907). வேதபோதகம் தாவீது எழுதிய ‘மாட்டு வைத்திய போதினி’ (1927), த.சண்முகசுந்தரம் எழுதிய ‘யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி’, ரா.ஸ்ரீ.ஸ்ரீகண்டன் எழுதிய ‘எட்டையாபுரத் தேவன்’, வீ.வே.முருகேசபாகவதர் எழுதிய‘தோல் பதனிடுவோர் துயரம்’, முனைவர் த.ஜான்சிபால்ராஜ் எழுதிய ‘மாடும் வண்டியும்’ ஆகிய நூல்களுடன் கால்நடைகள் சார்ந்த வாழ்வைப் பேசும் நம் காலத்தைய சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, சு.தமிழ்செல்வியின் ‘கீதாரி’, வெற்றிச்செல்வன் இராசேந்திரனின் ‘கீதாரியின் உப்புக்கண்டம்’, ‘குளம்படி’, பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ ஆகிய நூல்களும் இடம்பெற்றுள்ளன.
- கால்நடைகள் பற்றி முதன்முதலில் 1903ஆம் ஆண்டு முதல் வெளியான ‘ஜந்து வர்த்தமான சாரம்’என்ற இதழ்த் தொகுப்பும் இந்நூலகத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மாட்டு வாகடங்கள் (நோயும் நோய் தீர்க்கும் வழிமுறைகளும்) பற்றிய நூல்களுடன் 28 ஓலைச்சுவடிக் கட்டுகளும் இந்நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்துடன் ஒரு நூலகம் அமைய வேண்டும் என்று முயற்சியெடுத்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். நூலகத்துக்கான நூல்கள் சேகரிப்பில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தினர் பெரும் முயற்சியெடுத்து, மிகக் குறுகிய காலத்துக்குள் நூல்களைச் சேகரம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் பண்பாட்டு வரலாற்றைத் தொகுக்கும் இம்முயற்சி பாராட்டுக்குரியது. தொடர வேண்டிய அருஞ்செயல்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2024)