TNPSC Thervupettagam

கால் தட்டும் கங்காருகள்

February 23 , 2025 1 hrs 0 min 7 0

கால் தட்டும் கங்காருகள்

  • மற்ற விலங்குகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும் கங்காருகள், ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் வாழ்கின்றன. கங்காருகளில் பல வகை உண்டு. இவை மார்சுபியல் எனும் வயிற்றில் பையுடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. இவை ஒலி, உடல் அசைவு, வாசனை மூலம் தகவல் தொடர்புகளை மேற்கொள்கின்றன.
  • கங்காருகள் 6-12 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைமைப் பெண் கங்காரு இருக்கும். குழுவில் பல அடுக்குத் தொடர்பு அமைப்பு உண்டு. எல்லைகளைக் குறிக்க மரங்களில் அடையாளமிடுதல், மண் குழிகள் தோண்டுதல் போன்ற செயல்களைச் செய்கின்றன. தினமும் எல்லைப் பகுதிகளைச் சுற்றி வருகின்றன.
  • 2019ஆம் ஆண்டு மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 150 கங்காருகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்தார்கள். 2 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் தகவல் தொடர்பு மொழியை ஆவணப்படுத்தி உள்ளார்கள்.
  • ஒரு கங்காரு ஆபத்தை உணர்ந்தால், தனது கால்களால் தரையில் தட்டும். இது ஒரு நொடிக்கு 5 முதல் 7 முறை வரை இருக்கும். ஆபத்து எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைப் பொறுத்து இந்தத் தட்டலின் வேகம் மாறுபடும். இந்த எச்சரிக்கையைக் கேட்டவுடன், குழுவில் உள்ள மற்ற கங்காருகள் சூழலைப் புரிந்து கொள்கின்றன.
  • கங்காருகளின் தலை அசைவுகளும் முக்கியமான தகவல்களைத் தெரிவிக்கின்றன. மெதுவாகத் தலையை அசைத்தால் , ’ஓ அப்படியா! நீ சொல்வது எனக்குப் புரிந்தது’ என்றிருக்கலாம். அல்லது, ’நீ சொல்வது சரிதான்’ என்று அங்கீகரிப்பதாக இருக்கலாம். அதுவே வேகமாக, செங்குத்தாக அசைத்தால் அது எச்சரிக்கையாக இருக்கும். ஆண் கங்காருகள் வட்ட வடிவில் தலையை அசைத்தால், ’நான்தான் தலைவர்’ என்று ஆதிக்கம் காட்டுவதாக இருக்கும்.
  • கால், தலை மட்டுமல்ல, உடல் அமைப்பும் முக்கியம். நேராக நிற்கும்போது எச்சரிக்கை நிலையில் உள்ளது. சாய்ந்து நிற்கும்போது ஓய்வு நிலையில், முன்னோக்கிக் குனிந்திருக்கும்போது ஆக்ரோஷ நிலையில் உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • கங்காருகள் வெவ்வேறு அதிர்வெண்களில் ஒலிகளை உருவாக்குகின்றன. ஆண் கங்காருகள் குறைந்த அதிர்வெண்ணில் (20-50 Hz) கர்ஜிக்கும். இது மூன்று கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும். பையில் இருக்கும் குட்டிகள் உயர் அதிர்வெண் கீச்சொலிகளை (2000-8000 Hz) எழுப்புகின்றன. இதன் மூலம் தங்கள் தாய்மார்களுடன் தொடர்புகொள்கின்றன. ஒவ்வொரு குட்டியும் ஆறு வகையான தனித்துவமான ஒலிகளை உருவாக்குகிறது, இதன் மூலம் தாய் கங்காரு தனது குட்டியைத் துல்லியமாக அடையாளம் காண முடிகிறது. அதுமட்டுமன்றி தொடு உணர்வும் பையின் வெப்பநிலை மாற்றங்களும் தகவல் தொடர்பில் முக்கியப் பங்காற்றுகின்றன. பால் சுரக்கும் அளவு, உடல்நிலை மாற்றங்கள் போன்ற முக்கியமான தகவல்கள் இதன் வழியே கடத்தப்படுகின்றன.
  • வேதியியல் தொடர்பும் கங்காருகளுக்கு முக்கியமானது. அவற்றின் மார்புப் பகுதியில் 3 வகையான சுரப்பிகள் உள்ளன. ஒவ்வொரு சுரப்பியும் வெவ்வேறு வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கிறது. இந்தச் சுரப்பிகளின் மணம் 72 மணி நேரம் வரை நீடிக்கும். 5 வகையான பெரோமோன்களை உற்பத்தி செய்யும் சுரப்பிகள் உள்ளன. இனப்பெருக்கக் காலத்தில் இந்தச் சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு கங்காரு குழுவிற்கும் தனித்துவமான வாசனை உண்டு.
  • காலநிலை மாற்றமும் மனிதக் குடியேற்றங்களின் விரிவாக்கமும் கங்காருகளின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. அண்மைக் காலத்தில், பெர்த் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், புதிய சூழல்களுக்கு ஏற்ப கங்காருகள் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன என்று கண்டறிந்துள்ளார்கள். 2 முதல் 3 விநாடிகளுக்குக் கண்ணோடு கண் பார்க்கின்றன. பாதுகாப்பாக உணர்ந்தால், அருகில் வருகின்றன. வளர்ப்பு விலங்குகளைப் போல் கங்காருகளும் மனிதர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories