- இந்தியாவில் கிரிமினல் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. காவல் துறை போதுமான அளவு எண்ணிக்கை பலமும், தொழில்நுட்ப பலமும் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி அனைத்துத் தரப்பிலும் எழுப்பப்படுகிறது.
- தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், மேலை நாடுகளிலும் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் காவல் துறையினர் அடைந்திருக்கும் மேம்பாடும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகளும் இந்தியாவில் தரப்படவில்லை என்கிற அவலத்தை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சரவை காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. அந்த ஒதுக்கீட்டின் பெரும் பகுதி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும், நக்ஸல் தீவிரவாதிகளின் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலங்களின் காவல்துறையை நவீனப்படுத்துவதற்காகவும் செலவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால், மாநில அரசுகளுக்கு காவல் துறை நவீனமயமாக்கலுக்காக வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மிகமிகக் குறைவு.
- காவல் துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பு சில புள்ளிவிவரங்களை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. அந்தப் புள்ளிவிவரத்தின்படி, 5 லட்சத்துக்கும் அதிகமான காவல் துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. காவல்துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.
- உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி பிகார், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் காவல் துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் காணப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- காவல் துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து 2006-இல் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. காவல் துறை சீர்திருத்தத்தை மாநில அரசுகள் மேற்கொள்ளாமல் இருப்பது குறித்தும், காவல்துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும் கவலைப்பட்ட உச்சநீதிமன்றம், மாநில அரசுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும்கூட, எதிர்பார்த்த அளவிலான சீர்திருத்தம் எதுவும் காவல் துறையில் ஏற்படவில்லை.
குற்றங்களின் எண்ணிக்கை
- கடந்த 2005-க்கும் 2015-க்கும் இடையிலான 10 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை இந்தியாவில் 28% அதிகரித்திருக்கிறது. இப்போது அதன் சதவீதம் மேலும் அதிகரித்திருக்கக் கூடும். அதற்கு முக்கியமான காரணம், போதுமான அளவில் காவலர்கள் இல்லாமல் இருப்பது என்பதைத்தான் அண்மைக்கால ஆய்வு வெளிப்படுத்துகிறது.
- ஒரு லட்சம் பேருக்கு 180 காவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 135 பேர்தான் இருக்கிறார்கள்.
- மீதிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஐ.நா. சபையின் பரிந்துரைப்படி ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும்.
- போதிய அளவிலான காவல் துறையினர் இல்லாமல் இருப்பதால் காவல் துறையினரின் பணிச்சுமை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அரசியல் ரீதியிலான போராட்டங்களும், அரசியல் தலைவர்களுக்குத் தரப்படும் பாதுகாப்பும் குறைந்த அளவில் இருக்கும் காவலர்களின் சேவையை அபகரித்துக் கொண்டுவிடுவதால், தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் அடிப்படைக் கடமையான சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், பொதுமக்களைப் பாதுகாப்பதிலும் காவலர்கள் தவறுகிறார்கள்.
- ஹரியாணா மாநிலத்தில் 2016-இல் இடஒதுக்கீடு கோரி ஜாட் இன மக்கள் போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறையை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தனர்.
- அந்த வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த தாங்கள் தடியடிப் பிரயோகமோ, துப்பாக்கிச் சூடோ நடத்தியிருந்தால், அதைத் தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையில் தண்டிக்கப்படுவோம் என்கிற அச்ச உணர்வால் போராட்டத்தை வேடிக்கை பார்த்தோம் என்று இப்போது பதவி ஓய்வு பெற்றிருக்கும் ஹரியாணா மாநில உயரதிகாரி ஒருவர் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். இதே மனநிலை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காணப்படுகிறது என்பதுதான் உண்மை நிலை.
- சட்டம் - ஒழுங்கு தகர்வது, காவல் துறையினர் முறையாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடாமல் இருப்பது, குற்றங்களைத் தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் கவனக்குறைவும் மெத்தனப்போக்கும் அவர்கள் மத்தியில் காணப்படுவது, இவற்றுக்கெல்லாம் அவர்களது எண்ணிக்கை பலம் குறைந்திருப்பது மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது.
- போதுமான அளவு பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்படாமல் இருப்பதும், காவல் துறையினருக்கான ஒதுக்கீடுகள் முறையாகச் செய்யப்படாமல் இருப்பதும் சில காரணிகள். காவல் துறை பணியிடங்களை நிரப்புவதில் காணப்படும் ஊழலும் ஒரு காரணம்.
பிரச்சினைகள்
- இவையெல்லாம் இருந்தாலும்கூட, காவலர்களின் எண்ணிக்கைக் குறைவு மிக முக்கியமான காரணம். காவல் துறை அதிகாரிகள் மத்தியிலும் எண்ணிக்கைக் குறைவு காணப்படுகிறது.
- போதுமான நிதி ஒதுக்கீடு, காலியான பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவது, பணியிடங்கள் நிரப்பப்படுவதில் ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமல் இருப்பது - இவையெல்லாம் பின்பற்றப்பட்டால் திறமையான காவல் துறை உருவாக முடியும்.
- இப்படிப்பட்ட சூழலில் நிதி ஒதுக்கீடு அளிக்கப்படாமல் போனால்கூட, உடனடியாகக் காலியாக இருக்கும் காவலர்கள் பணியிடங்களையாவது நிரப்புவதற்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- குற்றங்கள் அதிகரித்து வருவதும், சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் காவல் துறையினரால் முறையாக எதிர்கொள்ளப்படாமல் இருப்பதும் விபரீதங்களுக்கு வழிகோலும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
நன்றி: தினமணி (21-09-2019)