- விவசாயத்தில் உற்பத்தி பெருக வேண்டும், விளைச்சல் வீதமும் அதிகரிக்க வேண்டும். விளைநிலத்தின் பரப்பு கூட வேண்டும், பாசன வசதியும் பெருக வேண்டும்.
- விளைபொருளுக்குச் சந்தை வசதி விரிவாக வேண்டும். இவை எல்லா இடங்களுக்கும் பொதுவானவை. காவிரிப் படுகைக்கு என்று சில பிரச்சினைகள் உண்டு.
- ‘நஞ்சை திறப்பு’ என்று வயல்களைக் குறிப்பிடுவது காவிரிப் படுகையில் வழக்கம். வேலி போன்ற கட்டுக்கோப்பு இல்லாதது என்று பொருள்.
- எக்கண்டமாகக் கிடக்கும் ஒரு அறுபது வேலி கிராமம் என்றால், விவசாயிகள் வரப்பு வழியாகத்தான் தங்கள் வயல்களுக்குப் போக வர முடியும். வெகு சிலருக்கு மட்டும் சாலையிலிருந்து நேராக வயலுக்குச் செல்ல இயலும். மற்றவர்களுக்கு ஐந்து, பத்து, பதினைந்து வயல் கடப்பில் நிலம் இருக்கும்.
- அங்கெல்லாம் வாய்க்கால்களையும், வாரிகளையும் தாண்டி வரப்பிலேயே நடந்து செல்ல வேண்டும். இப்போதுவரை இந்தப் பிரச்சினை வெளியில் அதிகம் வராமல் இருந்தது. விவசாயத்தில் இயந்திரங்களின் வரவுக்குப் பிறகு பிரச்சினை தீவிரமாகிவிட்டது.
வயலுக்கு வழி
- தண்ணீர் காலத்தில் உள்வயல்களுக்கு உழவு இயந்திரம் எப்படிப் போகும்? உரிய நேரத்தில் நடவு செய்ய, அறுவடை செய்ய, வைக்கோல் திரைத்து சாலைக்கு வர, அறுவடையான நெல் வீட்டுக்கு வர இயந்திரங்களை அங்கே எப்படிக் கொண்டுசெல்வது? அந்தந்த நேரத்தில் உரமூட்டைகளும் வரப்பு வழியாகத் தலைச் சுமையாகவே வயலுக்குச் செல்கின்றன.
- முன்பெல்லாம் குறுவைச் சாகுபடி செய்தவர்கள் கதிர்க் கட்டுகளைப் பத்துப் பதினைந்து வயல் கடந்து தலைச் சுமையாகவே களத்துக்குக் கொண்டுவந்தார்கள். இப்போது அறுவடை இயந்திரம் அங்கு செல்ல இயலாது. காவிரிப் படுகை விவசாயிகளில் 90% சிறு விவசாயிகள் என்றால், அவர்களில் 80% பேராவது இந்த இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
விவசாயிகளின் சுதந்திரம்
- ஒருவருக்கு மூன்று ஏக்கர் உள்வாய் நிலம் இருக்கிறது. அவருக்கு நடவுக்குச் சற்று நாளாகிவிட்டால், தனக்கு முன்னால் உள்ள வயல்களைக் கடந்து அவர் உழவு இயந்திரத்தையோ, நடவு இயந்திரத்தையோ தன் வயலுக்குக் கொண்டுசெல்ல முடியாது.
- எல்லோருக்கும் முந்திக்கொண்டு நடவு செய்துவிட்டார் என்றாலோ தனக்குப் பிந்தி நட்ட மற்றவர்கள் அறுவடை செய்யாமல் அவர் வயலுக்கு அறுவடை இயந்திரம் செல்ல முடியாது.
- எல்லோரும் ஏக காலத்தில் நடுவதும் அறுவடை செய்வதும் இயலாது. ஒருவர் ஐந்து மாத வயதுள்ள நெல் நடுவார். அடுத்தவர், நான்கு மாத நெல்தான் நடுவேன் என்று தாமதிப்பார்.
- தாங்கள் அறிந்த சாகுபடி விவரத்தைக் கொண்டு, அந்தந்த ஆண்டுக்கு அவரவர் தங்கள் வசதிப்படி ஒரு முடிவு செய்துகொண்டால், மற்றவர்கள் அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறாகும்.
- சாகுபடியில் இப்படிச் சுதந்திரம் இல்லையென்றால், விவசாயத்தில் எஞ்சியிருக்கும் அந்தச் சிறு கவர்ச்சியும் காணாமல் போகும்.
- இந்தப் பிரச்சினை ஆண்டுக்கு ஆண்டு தீவிரப்படும். சில இடங்களில் ஒரு சமூகப் பதற்றமும் இதனால் உருவாவது சாத்தியமே.
- இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத விவசாயத்தில், உழைப்பு என்பது உடம்பைக் கொண்டு வெறுமனே உழல்வதாகப் பொருளற்றுப்போகும்.
- இயந்திரங்களைக் கூடுதலாகப் பயன்படுத்தி, விவசாயம் விரைவில் மேலும் நவீனமாக வேண்டும் என்பது பொதுக் கருத்து.
- காவிரிப் படுகையின் முக்கால் பங்கு வயல்வெளிக்கு அறுவடை இயந்திரங்கள் செல்ல வழி இல்லை என்பது இங்கு விவசாயம் நவீனமாவதற்குப் பெரிய இடைஞ்சல்.
- நெருக்கி பத்து லட்சம் ஏக்கர் நஞ்சைக்கு உரிய நேரத்திலோ நினைத்த நேரத்திலோ இயந்திரங்கள் செல்ல இயலாது. விவசாயம் நவீனமாக வேண்டும் என்ற தீவிர விழைவோடு இந்த நிலவரத்தைப் பொருத்திப் பாருங்கள்!
- விவசாயம் லாபகரமாக இல்லை என்பதற்கு இந்த நிலவரமும் ஒரு காரணம். உரிய நேரத்தில் வயலில் அறுவடை இயந்திரத்தை இறக்க முடியாமல் வாரக்கணக்கில் அறுவடை தாமதமாகி, ஏக்கருக்கு மூன்றரை குவிண்டால் வரை சேதாரமாவது இங்கு வாடிக்கை.
- மூன்று ஏக்கர் சாகுபடி செய்யும் ஒரு விவசாயி, அறுவடையின்போது சேதாரமாகவே பத்து குவிண்டால் இழப்பாரானால் அவருக்கு என்ன மிஞ்சும்?
- வயலுக்கு இயந்திரங்கள் செல்ல வழி உண்டானால் அதனால் வரும் உபரி நன்மைகள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக இருக்கும். குறுவை சாகுபடிப் பரப்பில் குறைந்தது 40%-வது அப்போது எளிதில் கூடிவிடும்.
- இப்படிக் கூடும் சாகுபடிப் பரப்பும் பெரும்பாலும் சிறு விவசாயிகளின் உடைமை இருபோக நிலமாக மாறுவதால் ஏற்படும். சாகுபடிப் பரப்பையும், பாசனம் பெறும் நிலப் பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்துக்கு இது எந்த அளவுக்கு, எவ்வளவு எளிதாக உதவக் கூடும் என்பதையும் பாருங்கள்.
- இன்றைய குறுவை நெல் உற்பத்தியைப் போல் குறைந்தது ஒன்றேகால் மடங்காவது உற்பத்தி கூடும்.
சாலையான வரப்புகள்
- வயலுக்கு இயந்திரங்கள் போக சாலை அமைப்பது சாத்தியமா என்று நீங்கள் கேட்கக்கூடும். நூறு வேலி கிராமமானால் அதற்குக் குறைந்தது மூன்று பாசன வாய்க்காலும் ஒரு வடிகாலுமாவது இருக்கும்.
- இதன் கரைகளை உடைத்துப் பரப்பி, வாய்க்கால்களைத் தூர்வாரும் மண்ணைக் கொண்டே கரைகளை அகலப்படுத்திவிடலாம்.
- இது கற்பனை என்று நினைக்காதீர்கள். பல கிராமங்களில் முன்பு குபேட்டா செல்லக்கூடிய அகலத்துக்குக் கரைகளாக இருந்தவை காலப்போக்கில் சிறு வரப்பாகக் குறுகியது பலருக்குத் தெரிந்திருக்கும்.
- அந்த இடங்களில் இவற்றை மீட்டுக்கொண்டாலே போதும். உள்கிராமங்களுக்குச் சாலை அமைக்கும்போதும், பேருந்துக்குச் சாலை அமைத்தபோதும்கூட, வயல் வரப்பை உடைத்துப் பரப்பி சாலை அமைப்பதும் காவிரிப் படுகையில் வழக்கம்தானே!
- இந்த முறைகளுக்கு வாய்ப்பில்லை என்று இருக்கும் இதர சில கிராமங்களில் ஊர் ஒற்றுமையைக் கொண்டு வழி ஏற்படுத்தலாம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பத்து கிராமங்களில் இதை முன்னோட்டமாகச் செய்து காண்பிக்கலாம். வயலுக்கு இயந்திரங்கள் செல்ல வழி இல்லை என்பதை இன்றைய பிரச்சினையாக அங்கீகரிக்க வேண்டும்.
- அப்படிச் செய்வது மட்டுமேகூட விவசாயிகளுக்கு உதவ முனையும் அரசுக்கு நல்ல அடையாளமாக அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 - 08 – 2021)