TNPSC Thervupettagam

காவிரிப் படுகை மறந்த நாற்று நடவு

September 23 , 2024 66 days 119 0

காவிரிப் படுகை மறந்த நாற்று நடவு

  • நாற்றுப் பறிப்பும் நடவும் காவிரிப் படுகைக்குக் கிட்டத்தட்ட மறந்து​விட்டது. புழுதியாக உழுது விதையைத் தெளித்து​விடும் இன்றைய சாகுபடி முறை என்பது நாற்பதே ஆண்டு​களில் உருவான மாற்றம். இந்தப் புனல் நாடு இரண்டா​யிரம் ஆண்டு​களாகவே நடவைத் தவிர வேறு முறையை அறியாது. இப்போது நடவை மறந்து மானாவாரிக்குப் பழக்கமான தெளிப்​புக்கு மாறியது. புரட்​சிகளின் தன்மையே இதுதான்; அவை சொல்லிக்​கொள்​ளாமல் வந்து​விடும்.
  • மிகைப் பேச்சின் கவர்ச்​சிக்காக நான் இப்படிச் சொல்ல​வில்லை. வடகோடி வீராணம் ஆயக்கட்​டிலிருந்து தெற்கு எல்லையான கல்லணைக் கால்வாய் வரை இப்போது தெளிப்பு முறைதான். இதற்குத் ‘தெளி’ என்று ஒரு பெயர்ச்​சொல்லும் மொழியில் சேர்ந்​து​கொண்டது. திட்டுத்​திட்டாக மட்டுமே சில இடங்களில் இன்னும் நடவு இருக்​கலாம். குறுவைக்கும் கோடைச் சாகுபடிக்கும் சேற்று உழவு செய்கிறார்கள். அங்கேயும் நேராகத் தெளித்து​விடும் சேற்று விதைப்பு​தான். இந்த முறை மாற்றத்தை அரசாங்கம் மானியம் கொடுத்து ஊக்கு​விக்க​வில்லை. இது விவசா​யிகள் தாங்களாகவே கண்ட வழி. காவிரிக் கரையின் கலாச்சார வலுவைத்தான் இதற்குக் காரணமாகக் கூற வேண்டும்.
  • காவிரியின் நீரோட்ட ஓசையும், உழவர்கள் ஏரோட்டும் ஓசையும் சிலப்​ப​திகார நாயகன் கோவலனின் பாட்டில் ஒலிச்​சித்திரமாக வருகின்றன. கோபால​கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்​திரத்தில் ஓர் அந்தணர் காவிரிக் கரை விவசாய வேலைகளை வரிசைப்​படுத்து​கிறார்: “உழுது, சேறுபண்ணி, பரம்படித்து, விதை தெளித்து, நாத்துப் பறித்து, நடவு நட்டு... பதத்தில் அறுத்து, கட்டியடித்து”. இதில் எதுவுமே இப்போது காவிரிப் படுகையில் நடப்ப​தில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். சேற்று உழவு இப்போது கிடையாது. நாற்றங்கால் இல்லை; நாற்றுப் பறிப்பும் இல்லை. நடவு என்பது பழங்கதை. அறுப்​பதும், கதிரடிப்​பதும் அறவே இல்லை. இத்தனையும் கடந்த நாற்பது ஆண்டு​களுக்குள் முற்றாக மறைந்தன.

நடவோடு நாற்றங்​காலும் மறைந்தது:

  • நடவு என்பது காவிரி விவசா​யத்தை அடையாளப்​படுத்தும் முகம். ஏட்டில் எழுதினாலும், திரையில் காட்டி​னாலும், பாட்டாகப் பாடினாலும் நடவைச் சொல்லி​விட்டால் விவசா​யத்தின் முழுச் சித்திரமும் சமைந்​து​விடும். அந்த ஒற்றை நடவடிக்கைக்கு அப்படி ஒரு குறியீட்டு மகத்துவம்! நடவுக்குச் சேற்று உழவு செய்து வயலைத் தயாரிப்​ப​தற்​காகவே உம்பளச்சேரி வகை மாடு இங்கு இருந்தது.
  • மற்ற இன மாடுகள் சேற்றில் இறங்காது. உம்பளச்சேரி பசு, காளைக் கன்று ஈன்றால் அது நாளைய உழவுக்கு ஊட்டமாக வளர வேண்டும். தாய்ப் பசுவின் மடியில் அதற்காகவே மூன்று காம்பு​களைக் கறக்காமல் விட்டு​விடு​வார்கள். மனிதனையும் மாட்டையும் நடவு இப்படிப் பிணைத்​திருந்தது. நிலம் வாங்குபவர்கள் அதற்கான நாற்றங்​காலோடு சேர்த்​துத்தான் வாங்கு​வார்கள். ஆனால், நடவோடு நாற்றங்​காலும் இப்போது மறைந்​து​விட்டது. பட்டுக்​கோட்​டை​யாரின் அன்றைய பாட்டில் வருவது​போல், இப்போது ‘சம்பா பயிரைப் பறிச்சு நட்டு’ விவசாயம் செய்வ​தில்லை.
  • முன்னேறிய தொழில்​நுட்​பங்களான பத்தி நடவும், ஒற்றை நாற்று நடவும் நடவை மையமிட்டவை. புராணங்​களுக்​குள்ளும் நடவு அருகாக வேரோடியது. ‘நாற்பது வேலி பூமி நடவு நட்டாக​வில்லை’ என்று சொல்லும் வேதியர், சிதம்பரம் செல்ல நந்தனாருக்கு அனுமதி மறுக்​கிறார். சிதம்​பரநாதனின் பூத கணங்கள் ஒரே இரவில் நாற்பது வேலியையும் நட்டு​விடு​கின்றன. நடவு என்ற விவசாய வேலை சாதாரண மனித முயற்​சியின் எல்லையில் நிற்கும் அசாத்​தியம். அது நடந்து​விட்டாலோ பூதங்களை ஒத்தாசையாக வைத்துதான் நாம் அதை விளங்​கிக்​கொள்ள முடியும்.

நட்டது போதுமே:

  • திருநாட்​டி​யத்​தான்குடி என்ற ஊரில் ஆண்டு​தோறும் நடவுத் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் கேட்டை நட்சத்​திரத்தில் சிவனும் பார்வ​தி​யுமாக அங்கே நடவுசெய்​த​தாகத் தல புராணம் உள்ளது. அன்றைய தினம் தோளில் கலப்பையோடு சிவனும், நாற்று​முடியோடு அம்பாளும் சேற்றில் இறங்கு​கிறார்கள். சிவனும் பார்வ​தி​யுமாக வேடமிட்ட இரண்டு சிறுவர்கள் முதலில் ஊன்றி நடவைத் தொடங்க, ஊர் மக்கள் வயலை நட்டு முடிக்​கிறார்கள். ‘முதல்’ என்பது சேற்றில் விரலால் ஊன்றும் மூன்று, நான்கு நாற்றுகள்.
  • விவசா​யத்தில் பணமாகச் செலவிடும் முதலுக்கும் இதற்கும் இவ்வளவு பத ஒற்றுமை! ஒரு காலத்தில் முதலீடே நாற்றுச் செலவாகத்தான் இருந்​திருக்​கும். பார்வதி நடும் அந்த ஒரு வயலில்தான் இப்போது நடவு; மற்ற இடம் எல்லாமே தெளி. நிஜம் என்ற நிலையி​லிருந்து நகர்ந்​து​கொண்ட நடவு, இப்போது வெறும் நாடகீய அடையாள​மாகி​விட்டது. ‘நட்டது​போதும்; கரையேறிவாரும், நாட்டி​யத்​தான்குடி நம்பி!’ என்று சுந்தரர் இறைவனைக் கோயிலுக்கு அழைத்ததாக அங்கு ஒரு பாட்டு நிலவு​கிறது. நட்டது போதும் என்று காவிரிப் படுகையே இப்போது கரையேறி​விட்​டதைப் பார்க்க அதிர்ச்​சி​தான்.

அவசரத் தீர்வு நிரந்​தர​மானது:

  • கடைமடையான திருத்​துறைப்​பூண்டிப் பகுதியில் இந்தத் தெளி நாற்பது ஆண்டு​களுக்கு முன் தொடங்​கியது. காவிரியில் வரத்து தாமதம், அதன் நிச்சயமின்மை, போதாமைக்கு அப்பகுதி விவசா​யிகள் தெளியைத் தீர்வாகக் கண்டார்கள். அங்கேயே அது மூன்று தசாப்​தங்கள் சுற்றி, சிறிது சிறிதாகப் பரவியது. பிறகு, ஒரே மூச்சில் காவிரிப் படுகை முழுது​மாகப் பரந்து​கொண்டது.
  • சில நேரம் நாற்றங்​காலைப் புழுதி உழவுசெய்து அதில் ஊறவைக்காத விதையைத் தெளித்துத் தண்ணீர் கட்டுவது உண்டு. இதை ‘வெள் விதைப்பு’ என்பார்கள். இந்த நாற்றங்கால் வழக்கமான சேற்றுப்பிடி நாற்றங்​காலுக்கு மாற்று. இன்று புரட்​சியாக வெடித்​திருக்கும் ‘தெளி’க்கான சூட்சுமத்தைக் காவிரி விவசா​யிகள் அந்த இடத்தில் கண்டிருக்க வேண்டும். மிகப் பெரிய மாற்றங்கள் இப்படிக் கடுகத்​தனை காரியத்​திலிருந்து கிளைப்பது வழக்கம்!
  • அன்றைய அவசரத் தீர்வாக வந்தது, பெரும் புரட்சி ஒன்றைத் தனக்குள் வித்தாக வைத்துக்​கொண்​டிருக்கும் என்று யார் கண்டது? ‘நடவா? தெளியா?’ என்ற ஊசலாட்டக் கட்டம் கழிந்​து​விட்டது. இப்போது எல்லாமே தெளிதான். நடவு பழகிய​தா​யிற்றே என்று விட்டுவிட இயலாமல், யாரும் தயங்கி நிற்க​வில்லை; தெளி நாம் அறியாத புதிய ஒன்று என்கிற அச்சமும் இல்லை. இந்த நிச்சய புத்தி​யைத்தான் காவிரிக் கரையின் கலாச்சார வலு என்று சொன்னேன்.
  • காவிரிப் படுகையில் நடவு மீண்டு​வரு​வதற்கு வாய்ப்பு இல்லை. நாகரிக முதிர்ச்​சியில் புராதனத் தெளியை விட்டு, நடவுக்குச் சமுதாயம் முன்னேறியது. அங்கேயே நிலைத்து, மீண்டும் அது தெளிக்குத் திரும்​பி​யிருப்​பதைச் சரியாகப் புரிந்​து​கொள்ள வேண்டும். ஆழத்தில்தான் ஞானம் உள்ளது என்று நாம் நம்ப வேண்டாம். ஆனால், தண்ணீர்த் தட்டுப்​பாடுதான் காரணம் என்பது, இதை எளிமைப்​படுத்திப் புரிந்​து​கொள்​வ​தாகும்.
  • நீர்ச் சிக்கனம் என்று நினைத்​துக்​கொண்​டால், அதுவும் ஒரு வகை அசட்டுத் திருப்​தியே. அல்லல் மிச்சம், செலவும் மிச்சம் என்கிற வழக்கமான சிந்தனைகள் ஒரு காரணமாகலாம். ‘போதும் இந்தத் தீவிர விவசாயம்’ என்று காவிரிப் படுகை மனம் சளைப்​பதும் காரணமாகலாம். சிக்கனம், கூடுதல் வருமானம் என்கிற பொருளா​தாரக் காரணிகளால் மட்டுமா காவிரி விவசாயம் நகர்கிறது?

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories