TNPSC Thervupettagam

காஷ்மீரில் காந்தியும் காந்தியப் பார்வையில் காஷ்மீரும்!

September 6 , 2019 1944 days 1266 0
  • மகாத்மா காந்தி காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு ஒரே ஒரு முறை சென்றிருக்கிறார், 1947 ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில். அப்போது அவருக்கு வயது 77. அந்தப் பயணம் மிகவும் களைப்பையும் உடல் நலிவையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. வரலாற்றின் மிகவும் முக்கியமான அக்கட்டத்தில், நாட்டின் நாலா பக்கங்களிலும் அமைதியை ஏற்படுத்துவது தன்னுடைய கடமை என்று கருதியதாலும், தேசத்தின் கௌரவம் காத்தாக வேண்டும் என்ற உந்துதலாலும் அப்பயணத்தை மேற்கொண்டார் காந்தி.
  • சுதேச சமஸ்தானமாக இருந்த ஜம்மு-காஷ்மீர் எந்த நாட்டுடன் சேரும் என்பது தெரியாத நேரம் அது. மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் என்றாலும், அவர்களிடையே மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்த ஷேக் அப்துல்லா மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த பற்றுள்ளவர் என்பதால், முஸ்லிம் நாடாக மலரவுள்ள பாகிஸ்தானுடன் சேருவதை அறவே வெறுத்தார். அந்தப் பகுதியை ஆண்ட மன்னர் ஹரி சிங் இந்து; ஆனால், அவர் இந்தியாவுடனும் சேர விரும்பவில்லை, பாகிஸ்தானுடனும் சேர விரும்பவில்லை; கிழக்கு சுவிட்சர்லாந்து நாட்டைப் போலத் தனி நாடாக காஷ்மீரை ஆள வேண்டும் என்று கனவு கண்டார். அந்நாட்டுக்குத் தானே மூலவராகவும் உற்சவராகவும் இருக்க ஆசைப்பட்டார்.
காந்தியின் இரு நோக்கங்கள்
  • காந்தியின் காஷ்மீர் பயணத்துக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன - மகாராஜாவால் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஷேக் அப்துல்லாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்யவைப்பது, தேசப் பிரிவினைக்குப் பிறகு எந்த நாட்டுடன் சேர காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர் என்பதை நேரில் அறிவது ஆகியவை அந்த நோக்கங்கள். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு அவர் சென்றபோது மக்களுடைய அன்புமயமான, உற்சாகமான வரவேற்பு அவருக்குக் கிடைத்தது.
  • ஸ்ரீநகருக்குள் காந்தி நுழையும்போதே வீதிகளின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று, ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ என்று வாழ்த்தி கோஷமிட்டனர். ஜீலம் நதி மீது கட்டப்பட்டிருந்த பாலம் முழுக்க மக்களாகத் திரண்டு நின்றுவிட்டதால் ஆற்றைக் கடக்க அவர் சிறு படகில் போக நேர்ந்தது. ஷேக் அப்துல்லாவின் மனைவி கூட்டியிருந்த கூட்டத்தில் சுமார் 25 பேர் மத்தியில் மட்டுமே அவர் பேசினார். காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்த கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், காந்தியை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கில் திரண்டுவந்தனர் என்று காந்தியுடன் சென்றிருந்த மருத்துவர் சுசீலா நய்யார் பின்னர் எழுதியிருக்கிறார்.
  • இப்படி லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும்படியாக காந்தியிடம் என்ன இருக்கிறது என்று அவருடைய நண்பர்களும் அவருடைய விரோதிகளும் சமகாலத்தில் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். அவர் ஓரிடத்துக்கு வந்து நின்றாலே அங்கு மக்களுடைய கோபங்களும் அச்சங்களும் விலகி ஒருவித சாந்தியும் நிம்மதியும் ஏற்படுவது வழக்கமாகியிருந்தது.
மக்களின் விருப்பமே முக்கியம்
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன்று நாட்களும் ஜம்முவில் இரண்டு நாட்களும் தங்கினார் காந்தி. காஷ்மீர் மகாராஜா ஹரி சிங், அவருடைய மகன் கரண் சிங் ஆகியோருடன் தான் நடத்திய உரையாடல்கள் குறித்து சுருக்கமான குறிப்பு தயாரித்து அதை ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல் ஆகிய இருவருக்கும் கடிதங்களாக அனுப்பினார். “பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, காஷ்மீர் மக்களுடைய ஆட்சி மலர வேண்டும் என்பதை இருவருமே ஒப்புக்கொண்டனர்; அவர்களுடைய விருப்பம் இந்திய அரசுடன் சேர வேண்டும் என்று இருந்தாலும், மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டு அதன்படியே நடக்க வேண்டும். அதை எப்படித் தீர்மானிப்பது என்பது குறித்து அவர்களுடன் பேசவில்லை” என்று அக்கடிதத்தில் எழுதியிருக்கிறார் காந்தி.
  • ஷேக் அப்துல்லா அப்போது சிறையில் இருந்தாலும் அவருடைய தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் வெளியிலேயே இருந்தனர்; அவர்கள் காந்தியைச் சந்தித்துப் பேசினர். “ஷேக் அப்துல்லாவையும் அவருடன் சிறையில் இருக்கும் மற்றவர்களையும் விடுவித்துவிட்டால், இந்திய ஒன்றியத்துடன் சேருவதையே அவர்களும் விரும்புவார்கள்; காஷ்மீர் மக்களும் இந்தியாவுடன்தான் சேரவே விரும்புகின்றனர். வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டதிலிருந்தே காஷ்மீர் மக்கள் உற்சாகமாக இருக்கின்றனர் என்று தேசிய மாநாட்டுத் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர்” என்று காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
  • இந்தியாவின் முதல் சுதந்திர நாளன்று காந்தி, டெல்லி மாநகரில் இல்லை. வகுப்புக் கலவரங்களால் வங்கம் பாதிக்கப்பட்டிருந்ததால் அங்கு அமைதியை ஏற்படுத்த அவர் முகாமிட்டிருந்தார். சுதந்திரத்தைக் கொண்டாடும் மகிழ்ச்சியான மனநிலையில் அவர் இல்லை. இந்து - முஸ்லிம் கலவரம் வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவிக்கொண்டிருந்தது. வன்முறை ஓய வேண்டும், தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கல்கத்தா நகரில் உண்ணாவிரதம் இருந்து, ஒற்றை நபராக அங்கு அமைதியை நிலைநாட்டினார். நாட்டின் பிற பகுதிகளிலும் அமைதியை ஏற்படுத்த டெல்லி நோக்கிச் சென்றார்.
பாகிஸ்தானுக்கு எதிராக நின்ற அப்துல்லா
  • அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஷேக் அப்துல்லாவைச் சிறையிலிருந்து விடுவித்தார் காஷ்மீர் மகாராஜா ஹரி சிங். மூன்று வாரங்களுக்குப் பிறகு, காஷ்மீரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் படையெடுத்தது பாகிஸ்தான். ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டும் பொறுப்பை எடுத்துக் கொண்டார் ஷேக் அப்துல்லா. காஷ்மீர் மக்களின் வீரத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தி, டெல்லியில் 1947 அக்டோபர் 29-ம் நாள் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பின்வருமாறு தெரிவித்தார்: “காஷ்மீரை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மகாராஜாவால் மீட்க முடியாது; காஷ்மீரைக் காப்பாற்ற யாரால் முடியும் என்றால், அங்குள்ள முஸ்லிம்கள், பண்டிட்டுகள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்களால்தான் முடியும்; இந்த எல்லாச் சமூகத்தினரோடும் ஷேக் அப்துல்லாவுக்கு அன்பும் பாசமும் நட்பும் நிலவுகிறது.”
  • ஒரு மாதத்துக்குப் பிறகு, ஊடுருவல்காரர்களை விரட்டியடிக்கும் அளவுக்கு இந்திய ராணுவம் அங்கு எதிர்த்தாக்குதலைத் தொடுத்தது. ஷேக் அப்துல்லா டெல்லிக்கு வந்தார். நவம்பர் 28-ம் நாள் டெல்லியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்து காந்திக்கு அருகில் நின்றார். “ஷேக் அப்துல்லா மகத்தான காரியத்தை காஷ்மீரில் செய்திருக்கிறார். இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்களை ஒற்றுமையாக வைத்திருக்கிறார்; வாழ்விலும் சாவிலும் ஒன்றாகவே இருக்க அவர்கள் விரும்புவார்கள்” என்று ஷேக் அப்துல்லாவை மீண்டும் பாராட்டிப் பேசினார் காந்தி.
  • அடுத்த இரண்டு மாதங்களில் சுட்டுக்கொல்லப்பட்டார் காந்தி. அதற்குப் பிறகு, கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீர் ஒரு நெருக்கடியிலிருந்து விடுபட்டு இன்னொரு நெருக்கடி; இன்னொரு நெருக்கடியிலிருந்து வேறொரு நெருக்கடி என்று தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
திறந்தவெளிச் சிறைச்சாலை
  • காந்தி இப்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார்?
  • காஷ்மீரின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த மூன்று சம்பவங்களுக்காக காந்தி மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்திருப்பார். முதலாவது, 1953-ல் நேரு தலைமையிலான மத்திய அரசு ஷேக் அப்துல்லாவைக் கைதுசெய்தபோது; இரண்டாவது, 1989-90-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியிருந்த இஸ்லாமிய ஜிகாதிகளால் இந்து பண்டிட்டுகள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது; மூன்றாவது, 2019-ல் ஒருதலைப்பட்சமாக காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிளக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு வைக்கப்பட்டபோது. இந்தக் கடைசிச் செயல் அவரை மிகவும் திடுக்கிட வைத்திருக்கும். அவருடைய 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்தச் சமயத்தில், மக்களுடைய விருப்பத்துக்கேற்ப மாற்றங்களைச் செய்ய மறுத்த இந்திய அரசு, மனித வரலாற்றிலேயே முதல் முறையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதையும் திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டது குறித்து அவர் நிறையவே வருந்தியிருப்பார்.
  • காஷ்மீரில் இப்போது நடப்பவை குறித்து கருத்து தெரிவிக்க காந்தி இப்போது உயிருடன் இல்லை; அவருடைய பெயரில் பேசக்கூடிய தகுதி படைத்த சிலர் இப்போதும் இருக்கின்றனர். காஷ்மீர் விவகாரம் குறித்து ‘காந்தி அமைதி அறக்கட்டளை’ (ஜிபிஎஃப்) வெளியிட்டுள்ள அறிக்கை இப்போது கிடைத்திருக்கிறது. மகாத்மா காந்தியின் நினைவைப் போற்ற 1959-ல் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரமான அமைப்பு இது. நிறுவப்பட்ட நாளிலிருந்து பல நற்செயல்களுக்காக அறியப்படும் அமைப்பு. ஜெயப்பிரகாஷ் நாராயண் இத்துடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டவர் என்பது இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை நாட்டில் அறிவித்தபோது, துணிச்சலுடன் எதிர்த்தது இந்த அமைப்பு. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானவுடன் இந்த அமைப்பு வேட்டையாடப்பட்டது.
  • காந்தி அமைதி அறக்கட்டளையின் அறிக்கை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அது வருமாறு: “காஷ்மீரை அமைதியில் ஆழ்த்தப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அங்கு என்ன நடக்கிறது என்பதைக் காணும் தொலைநோக்கியாக மாற்றப்பட்டிருக்கிறது; இந்தியாவுக்கு இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, வெட்ககரமானது, ஆபத்தானது. பட்டப்பகலில் ஒரு மாநிலமே இந்திய தேச வரைபடத்திலிருந்து காணாமல்போய்விட்டது. 28 மாநிலங்களாக இருந்த நாடு இப்போது 27 மாநில நாடாகிவிட்டது. இது மாயாஜாலக் காட்சி அல்ல; நடக்காத ஒன்றை நடந்ததைப் போல காட்டும் கண்கட்டு வித்தை அல்ல இது. நம்முடைய ஜனநாயக அரசியல் எந்த அளவுக்கு வறண்டுவிட்டது என்பதையே இச்செயல் காட்டுகிறது!” என்று நீளும் அந்த அறிக்கை, சாமானிய மக்களையும் அரசையும் இவ்விதம் கேட்டுக்கொண்டு முடிவுறுகிறது.
  • “நெருக்கடியான இந்த நேரத்தில் காஷ்மீர் மக்களுடன் நாம் அனைவரும் சேர்ந்து நிற்க வேண்டும், இந்த நெருக்கடி நமக்குமான நெருக்கடியாகும். கைதுசெய்யப்பட்டு கையறு நிலையில் சிறையில் இருக்கும் நம்முடைய சக குடிமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும், நடுநிலையாகவும் சரியாகவும் சிந்திக்கும் இந்தியர்கள் அனைவரும் நம்முடைய மன உளைச்சல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று; சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமைதான். ஆனால், எல்லா நிலை மக்களும் தங்களுடைய கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிக்கவும் அனுமதி தேவை. அதுதான் நிலைமையைச் சுமுகமாக்க நமக்கு உதவும்!” காந்தியைப் பற்றிய ஆய்வுகளில் பல ஆண்டுகள் தோய்ந்தவன் என்ற வகையிலும், அவருடைய எழுத்துகளில் ஆழ்ந்தவன் என்ற வகையிலும் சொல்கிறேன், காந்தி அமைதி அறக்கட்டளையின் இந்த அறிக்கையானது காந்தி உயிரோடு இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பாரோ அதை அப்படியே பிரதிபலிக்கிறது.
  • 1947-ல் காந்தியே கூறியதை நினைவுகூர்வோம்: “காஷ்மீரை மகாராஜாவால் காப்பாற்ற முடியாது; காஷ்மீரை யாராலாவது காப்பாற்ற முடியும் என்றால், அது முஸ்லிம்கள், பண்டிட்டுகள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள்தான்.”
  • இந்தியப் புவியியல் அமைப்பில் இருக்கும் இடத்தாலும், தொடர்ந்து சுமந்துவரும் சோகமான வரலாற்றுச் சுமைகளாலும் இன்னும் பல ஆண்டுகளுக்கு மோதலும் ரத்தக்களரியும்தான் என்று சபிக்கப்பட்டதைப் போலவே இருக்கிறது காஷ்மீர். தேசப் பிதாவின் போதனைகளை முழுதாக இன்னும் கைவிடாத இந்தியர்கள் - காஷ்மீரிகள் உட்பட - சுமுகமான தீர்வு காணும் முயற்சிகளைக் கைவிடக் கூடாது. பேச்சிலும் எழுத்திலும் வாய்மை; விவாதத்திலும் வாதத்திலும் நியாயம்; செயலில் அஹிம்சை, அன்றாட வாழ்வில் அனைத்து மத ஒற்றுமை என்ற காந்தியின் லட்சியங்களும் கொள்கைகளும் இருள் சூழ்ந்த இந்த நேரத்திலும் உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (06-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories