TNPSC Thervupettagam

காஷ்மீர்: காலவெளியில் ஒரு பயணம்

August 23 , 2019 1978 days 1734 0
  • அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழி சிறப்பு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் பெற்ற காஷ்மீர் வரலாறானது ஒரு பெரும் பயணம். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாக இருந்த இந்தச் சட்டப் பிரிவைப் பற்றி இன்றைக்கு ஆயிரம் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. உள்ளபடி அன்றைக்கு சூழல் எப்படியிருந்தது? இந்தியா ஒரு குடியரசு ஆக அறிவிக்கப்பட்ட 1950-ஐ ஒட்டிய நாட்களில் காஷ்மீர் விவகாரத்தைப் பல்வேறு தரப்பினரும் எப்படி அணுகினார்கள்? ஆவணங்களாகப் பாதுகாக்கப்படும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் அந்நாளைய செய்திப் பக்கங்களினூடே பயணிப்பது இது தொடர்பில் நமக்குப் பல உண்மைகளை உணர்த்துகிறது. இங்கே அளிக்கப்பட்டிருக்கும் அந்தச் செய்தித் துணுக்குகளின் மொழிபெயர்ப்புகளின் வழி வாசகர்களும் அந்தக் காலத்தினுள் சென்று வரலாம்.
காஷ்மீருடனான உறவு
  • இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபை அரசியல் சட்டம் 306-ஏ சட்டக்கூறினை நிறைவேற்றியது. இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. வெளியுறவுத் துறை அமைச்சர் என்.கோபால்சாமி அய்யங்கார் இதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இம்மாநிலம் இந்திய அரசின் ஓர் அங்கமாகத் தொடரும், மாநில இணைப்பின்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பாகவும், மாநிலத்துடன் பேசி ஒப்புக்கொள்ளும் விஷயங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றம் சட்டமியற்றும்; மாநிலத்தின் அரசியல் சட்ட நிர்ணய சபை எடுக்கும் முடிவுகளைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார் அல்லது அதில் செய்ய வேண்டிய மாறுதல்களைக் குறிப்பிடுவார், அல்லது நீக்குவார், மாநில அரசியல் சட்டசபையின் பரிந்துரையின்படியான மாறுதல்களையும் விதிவிலக்குகளையும் ஏற்பார் என்கிறது இப்பிரிவு. மாநிலத்தில் முழு அமைதி திரும்பும்வரையில், முன்பிருந்த பிரஜா சபையோ அரசியல் சட்ட நிர்ணய சபையோ இனி புதிய சட்டத்துக்குப் பிறகு செயல்பட முடியாது என்று தெளிவுபடுத்தினார். பிற மாநிலங்களைப் போல ஜம்மு-காஷ்மீரும் ஒரு நாள் இந்தியாவுடன் முழுதாகச் சேரும் என்று கோபால்சாமி கூறியபோது அவை மகிழ்ச்சியுடன் அதை வரவேற்றது. மாநிலத்தின் ஒரு பகுதி எதிரிகளிடமும் தீவிரவாதிகளிடமும் சிக்கியிருப்பதையும் ஐக்கிய நாடுகள் சபை தீர்வு சொல்லட்டும் என்று காத்திருப்பதையும் அமைச்சர் நினைவுகூர்ந்தார். எப்போது இப்பகுதி விடுபடும் என்று சொல்ல முடியாது, காஷ்மீர் இணைப்புப் பிரச்சினை திருப்திகரமாகத் தீர்க்கப்படும்போதுதான் இந்தச் சிக்கலும் தீரும் என்றார். பிறகு, அரசியல் சட்டத்துக்கான முகப்புரையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது அவை. (19-10-1949)
யாரிடம் காஷ்மீர அரசுத் தலைமை?
  • காஷ்மீர் மாநிலத்துக்கு மன்னரை அரசியல் தலைமைப் பதவி ஏற்பதைக் கைவிட வேண்டும் என்று அம்மாநில அரசியல் நிர்ணய சபைக்கான அடிப்படைக் கொள்கைகள் குழு பரிந்துரைத்ததை, அரசியல் நிர்ணய சபை தயக்கம் சிறிதளவும் இன்றி ஏற்றுக்கொண்டது. ஷேக் அப்துல்லாவின் நிலையும் இதுதான். மாநிலத் தலைமைப் பதவியிலிருந்து மகாராஜா ஹரிசிங் ஓய்வுபெற வேண்டும் என்று ஷேக் அப்துல்லா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். முடியாட்சி தொடரக் கூடாது, மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு நியமனம் மூலம் அல்ல, தேர்தல் மூலம் தலைவர் வர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். மன்னர்கள் பரம்பரையாகத் தலைமைப் பதவிக்கு வந்தால், தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களின் விருப்புரிமை மறுக்கப்படுகிறது என்றார் ஷேக் அப்துல்லா. ஜனநாயகத்தில் பழைய மன்னர்கள் விடைபெற்றாலும் அந்த இடத்தைப் புதிய மன்னர்கள் பிடித்துக்கொள்வதும் நடக்கிறது. மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்பேரில் மன்னர் செயல்பட வேண்டும் என்றார். ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முன்னுதாரணமாகக் கருதப்படும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலேயே நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவினாலும் சம்பிரதாயத்துக்கு நாட்டின் தலைவராக மன்னரே தலைவராக நீடிப்பதும் நடக்கிறது. காஷ்மீர் மாநில அரசு நிறைவேற்றிய நில உடைமை தொடர்பான சட்டம் பிற மாநிலங்களின் சட்டங்களைவிட வேறுபட்டது. காஷ்மீர் மாநிலத்தின் நிலங்களைப் பிற மாநிலத்தவர்கள் வாங்க முடியாது. தங்களுக்கேற்ற அரசு அமைப்பு எது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. காஷ்மீரைப் பொறுத்தவரையில் பல பிரச்சினைகள் இருப்பதால் மிக முக்கியமான, ஆனால் அவ்வளவாக அவசரம் இல்லாத இதுகுறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம். (14-06-1952)
டெல்லியில் ஷேக் அப்துல்லா குழு
  • மாநிலத்தின் தலைவராக மகாராஜா இருக்கக் கூடாது. அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்படட்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி அரசியல் தலைவர்களைக் கொண்ட குழு மத்தியில் உரிய அமைப்புகளிடம் நேரில் வலியுறுத்தின. டோக்ரா மகாராஜா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள சமஸ்தானத்தை ஆள்வதா என்று பாகிஸ்தானிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலும் உள்ள முஸ்லிம்களின் கேள்வியாக இருக்கிறது. அவர்களுடைய கேள்விக்கு விடையளிக்கும் விதத்திலும் முஸ்லிம்கள் அனைவரும் ஏற்கும் விதத்திலும் மகாராஜாவைத் தலைமைப் பதவியிலிருந்து விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது குழு. அதேசமயம், காஷ்மீரின் முஸ்லிம் அல்லாத வகுப்பாரிடம் ஒரு தயக்கம் இருந்தது. அவர்கள் மாநிலத்தின் சம்பிரதாயத் தலைவராக மன்னரே நீடிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். அதற்கு ஒரே காரணம், காஷ்மீரை இந்திய அரசுடன் சேர்ப்பது என்ற உடன்பாடு செய்துகொண்டவரே மன்னர்தான், அவரை நீக்குவது சரியல்ல என்பது அவர்களுடைய கருத்து.
  • ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்களோ அதை ஏற்கவில்லை. மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் உள்ள தொடர்பு எங்கே அறுபடுகிறது, மகாராஜாவும் அவுருடைய குடும்பத்தாரும் மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்தான் தலைவராகச் செயல்படப்போகிறார். எனவே, தொடர்புபற்றிக் கவலையில்லை என்று கூறுகின்றனர். காஷ்மீரின் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மாநிலத் தலைவராக மகாராஜாவின் பிள்ளை கரண் சிங் கூட இருக்கட்டும் என்று ஒரு சமரச யோசனையை அவர்கள் முன்வைத்தனர். காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் அவரை மாநிலத் தலைமைப் பதவியின் வேட்பாளராகக்கூட ஏற்கத் தயார் என்றனர். அப்படியே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பதவிக்காலம் வரையில்தான் தலைமைப் பொறுப்பில் இருக்க முடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மாநிலத் தலைமைப் பதவிக்கு கரண் சிங் நியமிக்கப்படும் பட்சத்தில் அவருடைய பதவிக்காலம் ஆயுள் முழுக்க என்றில்லாமல், கணிசமான காலத்துக்கு இருக்க வேண்டும் என்று முஸ்லிம் அல்லாதவர்கள் விருப்பம் தெரிவித்தனர். காஷ்மீர் மக்களில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையினர் என்பதால், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அதுவும் மன்னர் அல்லது அவரது வாரிசு தலைவராக இருப்பது தங்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
  • காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது என்று முடிவுசெய்த பிறகு, ஒவ்வொரு விஷயமாக தனித்தனியாக விவாதித்துக்கொண்டிருக்காமல், எல்லாவற்றையும்பற்றி காஷ்மீர் அரசியல் சட்ட நிர்ணய சபையில் விவாதித்து இறுதிசெய்ய வேண்டும் என்று டெல்லி அரசியல்வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.(18-06-1952)
அப்துல்லாவுக்கு வெங்கட்ராம சாஸ்திரி கண்டனம்
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்ததுதான். ஆனால், பிற இந்திய மாநிலங்களைவிட ஜம்மு-காஷ்மீருக்கு அதிக அதிகாரங்களும் சுதந்திரமும் வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் அப்துல்லா கோரியதை சட்ட நிபுணர் டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி கடுமையாகக் கண்டித்துள்ளார். ஷேக் அப்துல்லா விரும்பினால், காஷ்மீரை சுயேச்சையான நாடாகக்கூட நிர்வகிக்கட்டும். இந்தியாவில் இருந்துகொண்டு பிற மாநிலங்களுக்கு இல்லாத தனி அதிகாரங்கள், உரிமைகளுடன் செயல்படக் கூடாது என்றார். (7-7-1952)
காஷ்மீர் ஒப்பந்தம் பற்றி நேரு
  • வேறு எந்த மாநிலங்களையும்போல ஜம்மு-காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதிதான். இந்தியாவுடன் அது சட்டப்படியாகவும் உண்மையிலும் இணைந்துவிட்டது. அது இப்போது இந்தியாவின் ஒரு பிரதேசம்தான் என்று பிரதமர் ஜவாஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தார். காஷ்மீர் பிரச்சினையின் அடி முதல் நுனி வரை அவையில் விவரித்த நேரு, காஷ்மீரின் எதிர்காலம் குறித்து ஷேக் அப்துல்லாவுடனும் பிற தலைவர்களுடனும் பேசி முடித்த பிறகே, ஒப்பந்தம் குறித்து அறிவித்ததாகக் குறிப்பிட்டார். கட்டாயப்படுத்தியோ, பலவந்தமாக நிர்ப்பந்தித்தோ காஷ்மீரை நம்முடன் சேர்ப்பது நம்முடைய நோக்கமாக இருந்ததில்லை. மக்களுடைய இயல்பான விருப்பத்தின் அடிப்படையிலேயே காஷ்மீர் இணைப்பு நடந்தது என்றார். இது சர்வதேச பிரச்சினையாகிவிட்டதால், ஐக்கிய நாடுகள் சபையைப் புறக்கணித்தோ, அதற்கும் தெரியாமலோ எதையும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ஒத்துழைப்பதன் மூலமும் நட்புறவுடனும் காஷ்மீர் விவகாரத்தில் அரசு செயல்படுகிறது என்றார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் யாரும் 23 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நிலச் சீர்திருத்தம் கொண்டுவந்திருப்பதைப் பாராட்டினார். இதற்காகப் பொறாமைப்படுவதாகவும் கூறினார். இந்தியாவின் பிற மாநிலங்களில் இது சாத்தியமில்லாதபோது காஷ்மீரில் நடந்துவிட்டது என்று புகழ்ந்தார். மேய்ச்சல் நிலங்கள் தனியார் பெயரில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அதேவேளையில், வெளியார் யாரும் நிலம் வாங்கக் கூடாது என்று மகாராஜா காலத்திலிருந்தே தடை இருப்பதையும், காஷ்மீர் தட்ப-வெப்ப நிலை நன்றாக இருப்பதால் பிரிட்டிஷாரும் ஐரோப்பியர்களும் நிலங்களை வாங்கிவிடக் கூடாது என்று ராஜா முன்னெச்சரிக்கையாக இருந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது மக்களின் விருப்பம். அதைச் செயல்படுத்துவது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் உரிமை. அதில் தான் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நேரு, பிற மாநிலங்களில் முதலமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதைப் போலவே காஷ்மீரிலும் நடக்கட்டும் என்றே விரும்பினார். (26-7-1952)
பாகிஸ்தானின் விஷமம் அம்பலம்: நேரு பேச்சு
  • நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே காஷ்மீரைக் கைப்பற்ற பாகிஸ்தான் செய்த சதி அம்பலமானதை பிரதமர் நேரு, மாநிலங்களவையில் விவாதத்தின்போது தெரிவித்தார். பஷ்டூன் பழங்குடிகள் காஷ்மீரின் ஒரு பகுதி மீது திடீர் தாக்குதல் நடத்தி, அதைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே பாகிஸ்தான் அரசு கூறி வந்தது. இந்தப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பரிசீலனைக்குக் கொண்டுசென்றார் நேரு. எஞ்சிய பகுதிகளை அப்பகுதியினர் கைப்பற்றிவிடாமல் இந்திய ராணுவம் தடுத்தது. தாக்குதல் நடந்தபோது மேற்கு பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த மம்தாத் கான், “காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக நான் என் சொந்தப் பணத்திலிருந்து ரூ.65,000 செலவுசெய்தேன், பாகிஸ்தான் அரசு அதை எனக்குக் கொடுக்க வேண்டும்” என்று கோரியிருக்கிறார். வடமேற்கு எல்லைப்புற மாகாண முதலமைச்சர்தான் பழங்குடிகளைத் திரட்டி ஆயுதம் கொடுத்து காஷ்மீரைத் தாக்கச் சொல்லியிருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது. மேற்கு பஞ்சாபில் முதல்வராக இருந்தவர், இப்போது வடமேற்கு எல்லைப்புற மாகாண முதல்வராகியிருக்கிறார். பாகிஸ்தான் எப்படி இதன் பின்னணியில் இருந்திருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பழங்குடிகள் தாக்குதல் நடத்தியிருந்தாலும் அங்கே நாம் போரைப் பெரிதாக்க விரும்பவில்லை. முதலாவதாக, நாம் போர்செய்யும் மனநிலையில் இல்லை. தேசப் பிரிவினைக்குப் பிறகு குடிபெயர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகளைக் குடியமர்த்தி, அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றை அளிக்க வேண்டிய பெருங்கடமை நமக்கிருக்கிறது. அத்துடன் அரசு நிர்வாகத்தையும் விவசாயம், தொழில் துறை உள்ளிட்ட துறைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் காஷ்மீரில் எல்லாவிதமான செயல்களும் போராட்டங்களும் அரங்கேறியுள்ளன. பிரிட்டிஷாரால் தங்கள் மீது திணிக்கப்பட்ட டோக்ரா மன்னரின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்று மக்கள் பெரிய கிளர்ச்சியைத் தொடங்கினார்கள். இந்திய அரசிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. காஷ்மீர் மன்னருக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய ஷேக் அப்துல்லா இந்தியாவுக்கு வந்து காந்தியைப் பார்க்க விரும்பினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். அவர் இந்திய எல்லைக்கு அருகே வரும்போது காஷ்மீர் மன்னரால் தடுத்து கைதுசெய்யப்பட்டார்.
  • 1947 மே அல்லது ஜூன் மாதத்தில் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர் பிரிட்டிஷ் அரசின் சார்பில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவுடன் மாநிலங்கள் சேருவது பற்றியது அது. அதற்கும் முன்னரே சுமார் 500-க்கும் மேற்பட்ட சுதேச மன்னர்களுடன், புதிய அரசில் சேருவது குறித்து பிரிட்டிஷ் அரசு பேசிவந்தது. மக்கள் மன்னராட்சிகளை விரும்புவதில்லை, அரசியல் சட்டப்படியான ஜனநாயக ஆட்சியையே விரும்புகிறார்கள், அதற்கேற்ப நீங்களும் மாற வேண்டும் என்று மன்னர்களிடத்தில் அரசு கூறியது.
  • அவர்களும் அப்படி மாறத் தயார் என்று அறிவித்தனர். புதிய இந்திய அரசு உருவாவதற்கு முன்னரே, பல பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஜம்மு-காஷ்மீர், ஹைதராபாத் மற்றும் ஓரிரு சமஸ்தானங்கள் மட்டும் முரண்டுபிடித்தன. மாநிலங்களை இந்தியாவுடன் சேர்ப்பது குறித்து நாங்கள் தெளிவாக இருந்தோம். எந்த சமஸ்தானமாக இருந்தாலும் மக்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றோம். மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தலாம் என்றோம். மக்களுடைய விருப்பம் இந்தியாவுடன் சேருவதுதான் என்றாலும் காஷ்மீர் மகாராஜா வேறு எண்ணத்தில் இருந்தார். அடுத்த முடிவு எடுக்கும்வரை இதே நிலையில் நீடிக்க விரும்புகிறோம் என்று இந்திய அரசுடனும் பிறகு பாகிஸ்தான் அரசுடனும் அவர் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
1947 ஆகஸ்ட் 15
  • இதற்கிடையேதான் 1947 ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றோம். சுதந்திரம் பெற்றாலும் தேசப் பிரிவினைக்கு முன்பைவிட, பிறகு பெருங்கலவரங்கள் ஏற்பட்டன. மேற்கு பஞ்சாப், கிழக்கு பஞ்சாபில் எல்லாவித சம்பவங்களும் நடந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு நடந்தவற்றை மத்திய இந்தியாவில் வாழ்ந்தவர்களும் தென்னிந்தியர்களும் நேரிலும் பார்க்கவில்லை, அறிந்துமிருக்கவில்லை. பாகிஸ்தானிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனால், அவற்றின் பின்னணியில் நாம் இல்லை. காஷ்மீர் மகாராஜாவுக்கு பாகிஸ்தான் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் பூஞ்ச் பகுதியில் அதிக எண்ணிக்கையில் வசித்தனர்.
  • வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தையொட்டி முசாபராபாத் என்ற இடத்தில் ஆயுதம் ஏந்திய பழங்குடிகள் பாகிஸ்தான் பகுதியிலிருந்து படையாக வந்து அப்பகுதி மக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தினர். வீடுகள் சூறையாடப்பட்டன, தீ வைத்து எரிக்கப்பட்டன, ஏராளமானோர் இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். உடனே, அங்கே சென்று தலையிட வேண்டும் என்று டெல்லியில் எங்களுக்குத் தோன்றவில்லை. அடுத்து மொஹாரா பாலமும், மின்சார நிலையமும் தாக்கப்பட்டது என்று அடுத்து தகவல் வந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமே இருளில் ஆழ்ந்துவிட்டது என்றார்கள். ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு 15 கி.மீ. தொலைவில் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. அவர்கள் விமான நிலையத்தைக் கைப்பற்றிவிட்டால் போக்குவரத்து, தகவல் தொடர்பு, மின்னிணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும் என்பதால், இந்திய அமைச்சரவை நீண்ட நேரம் விவாதித்து பிறகு இந்தியப் படையை அங்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. மகாராஜா நம்மோடு சேருகிறாரா இல்லையா என்றுகூட கவலைப்படாமல் காஷ்மீரைக் காப்பாற்ற அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஜா குடிமக்களுடன் இந்தியாவுடன் இணைவதாக அறிவித்தார்.
  • இரண்டு விஷயங்கள் நமக்குச் சாதகமாக இருந்தன. தேசிய மாநாட்டுக்கட்சித் தொண்டர்கள் தலைவர் ஷேக் அப்துல்லாவின் கட்டளையை ஏற்று சிறிதும் அச்சப்படாமல் இயல்பு வாழ்க்கை தொடரக் காரணமாக இருந்தனர். ஸ்ரீநகரில் ஒரு கடைகூட மூடப்படவில்லை. மக்கள் பீதியடையாமல் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தினர். இரண்டாவதாக, ஊடுருவல்காரர்கள் வரும் வழியெல்லாம் நாசவேலைகளைச் செய்துகொண்டும் வீடுகளைக் கொளுத்துவது, சூறையாடுவது, கண்ணில் பட்டோரைக் கொலைசெய்வது என்று செயல்பட்டதால் அவர்கள் ஸ்ரீநகரை நெருங்குவதற்குள் நம்முடைய படைகள் அங்கு சென்று சூழ்ந்துகொள்ள முடிந்தது. ஆரம்பம் முதலே பாகிஸ்தான் தனக்கு இதில் பங்கு இல்லை, ஊடுருவல்காரர்களை நாங்கள் அனுப்பவில்லை என்றே கூறி வருகிறது. ஆனால், நாங்கள் கைதுசெய்தவர்களிடம் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கிகளும் தோட்டாக்களும் இதர கருவிகளும் இருந்தன. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்றுவரையில் ஊடுருவல்காரர்களைத் திரும்ப அழையுங்கள் என்று பாகிஸ்தானிடம் கூறாதது ஏன் என்பது வியப்பாக இருக்கிறது” என்று விவரித்தார் நேரு. (07-08-1952).

நன்றி: இந்து தமிழ் திசை(23-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories