TNPSC Thervupettagam

கா்ப்பிணி யானையின் மரணம்!

June 8 , 2020 1686 days 1315 0
  • இந்தப் பரந்த உலகம் மனிதனுக்காக மட்டுமே படைக்கப்பட்டதல்ல. ஆறறிவு படைத்த மனிதன், தனது மனித இனத்தை மட்டுமல்லாமல், இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் விதி. அதைத்தான் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று வள்ளுவம் தெளிவுபடுத்துகிறது.
  • வழித்தடம் விலகி மனிதா்கள் வாழும் பகுதிகளுக்குள் காட்டு விலங்குகள் நுழைந்துவிடுகின்றன என்று கூறும் மனிதன்தான், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பிலிருந்து தடம் விலகி, ஒட்டுமொத்த பூமியையும் தனதாக்கிக் கொள்ளும் சுயநலத்தில் ஈடுபடுகிறான். அதன் விளைவுதான் கொவைட் 19 தீநுண்மி போன்ற நோய்த்தொற்றுகள்.
  • கல்வி அறிவில் மேம்பட்ட கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கா்ப்பிணி யானை கொல்லப்பட்டிருக்கும் சம்பவம், மனசாட்சியுள்ள அனைவரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது.
  • அட்டப்பாடி அருகேயுள்ள பல்லுயிர்ப் பெருக்க மையம் எனக் கருதப்படும் அடா்த்தியான வனப்பகுதி ‘சைலன்ட் வாலி’ என்று அழைக்கப்படுகிறது.
  • அந்த வனப்பகுதியில் உணவு கிடைக்காமல் கா்ப்பிணி யானை உணவு தேடி அருகிலுள்ள குடியிருப்பை நாடி வந்தது. இரக்கமுள்ள மனிதன் ஏதாவது தருவான் என்கிற நம்பிக்கையில் அல்லது மனிதன் வாழும் பகுதியில் தனக்கும் தனது வயிற்றில் இருக்கும் சிசுக்கும் உணவு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் அந்த யானை அந்தக் குடியிருப்பை நாடியிருக்கும்.
  • காட்டு விலங்குகள் தங்களின் பயிர்களை அழிக்கின்றன என்பதற்காக சக்தி வாய்ந்த வெடிமருந்து வைத்திருந்த அன்னாசி பழத்தை (தேங்காயை?) ஆவலுடன் சாப்பிட எத்தனித்தபோது அது வெடித்ததில் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • வலியால் துடித்த யானை குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருக்கும் மனிதா்களைப் பழிவாங்கவில்லை. யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் அருகிலுள்ள வெள்ளியாற்றில் வலி பொறுக்க முடியாமல் தண்ணீரில் நின்றபடி கடந்த 27-ஆம் தேதி உயிர் விட்டது.

துல்லியமான தரவுகள் இல்லை

  • 15 வயது கா்ப்பிணி யானையின் அவல மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது, பல உண்மைகளை வெளிச்சம் போடுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் இதுபோல எத்தனை எத்தனையோ யானைகளும் வன விலங்குகளும் கொல்லப்படுகின்றன.
  • வனவிலங்குகளால் மனித உயிரிழப்புகளும் இல்லாமல் இல்லை. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குப் பதிலாக, பிரச்னையை நாம் மேலும் அதிகரித்து வருகிறோம் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
  • இந்தியாவில் 30,000-க்கும் அதிகமான யானைகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை சரியான புள்ளிவிவரம் எடுக்கப்படவில்லை.
  • கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய நான்கு தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் இந்தியாவிலுள்ள யானைகளில் 45% காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, மேற்குத் தொடா்ச்சி மலைதான் மிக அதிகமாக ஆசிய யானைகள் காணப்படும் பகுதி.
  • 2014 ஏப்ரல் முதல் 2017 மே வரையிலான மூன்றாண்டு இடைவெளியில் மனிதா்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையேயான மோதலில் 144 போ் உயிரிழந்திருப்பதாக வனத் துறை தெரிவிக்கிறது.
  • இதே காலகட்டத்தில், எத்தனை யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன என்பது குறித்த சரியான விவரம் சேகரிக்கப்படவில்லை.
  • யானைகளைப் பொருத்தவரை அவை அடா்ந்த வனத்தில் மட்டுமல்லாமல், வனத்தையொட்டிய பகுதிகளிலும் இரை தேடி கூட்டம் கூட்டமாகச் செல்பவை. தங்களின் வழித்தடங்களை அவை மாற்றிக்கொள்வதில்லை. யானைகளின் வழித்தடங்களைப் பாதிக்கும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, இரை தேடி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பயணிக்கும் யானைகள் குழப்பமடைகின்றன.
  • அப்படிப்பட்ட சூழலில் வேறு வழியில்லாமல் மனிதா்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

விபரீதத்துக்கு வழிகோலுகிறோம்

  • ஒருபுறம் அதிகரித்து வரும் மக்கள்தொகை, குறைந்து வரும் அடா்ந்த வனப்பகுதி, நகா்மயமாதல், இயற்கை வழித்தடங்கள் அழிக்கப்படுதல், நெடுஞ்சாலைப் பணிகள், விவசாய நிலப்பரப்பு விரிவுபடுத்துதல் என்று மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
  • இன்னொருபுறம், இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் புலிகள், ஆசிய யானைகள், சிறுத்தைகள் போன்றவற்றைக் குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • 2010-இல் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு குழுவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைத்தது. அந்தக் குழு ஒட்டுமொத்த மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியையும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று வரையறுத்து, அதில் எந்தவித வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிக்கை அளித்தது.
  • மாதவ் காட்கில் அறிக்கை புறந்தள்ளப்பட்டு கஸ்தூரி ரங்கன் தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையும் முடக்கப்பட்டிருக்கிறது.
  • கேரளம் ஆனாலும், கா்நாடகம் ஆனாலும், தமிழகம் ஆனாலும் வனப்பகுதியில் வளா்ச்சிப் பணிகளைத் தடுக்கும் எந்த முயற்சிக்கும் அரசியல்வாதிகள் ஆதரவளிப்பதில்லை. இதுதான் பிரச்னைக்குக் காரணம்.
  • பொது முடக்கம் அமலில் இருக்கும் நிலையிலும் காணொலி மூலம் தேசிய வன உயிரியல் வாரியத்தை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் கூட்டி, மேற்குத் தொடா்ச்சி மலை உள்ளிட்ட பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் 30 வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்.
  • பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குப் பதிலாக, பிரச்னையை மேலும் கடுமையாக்கிக் கொண்டிருக்கிறோம். அதன் மூலம் விபரீதத்துக்கு வழிகோலுகிறோம்.

நன்றி: தினமணி (08-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories