- காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாகத் தேச அரசாங்கங்கள் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளைத் தொடங்க வலியுறுத்தி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வீடன் நாடாளுமன்ற வாயிலில் ‘பள்ளி வேலைநிறுத்தப் போராட்ட’த்தைத் தொடங்கியவர், கிரெட்டா துன்பர்க். அப்போது அவருக்கு வயது 15. வாக்களிக்கும் வயதைக்கூட எட்டியிருக்காத நிலையில், முன்னுதாரணமற்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கிய கிரெட்டா, 251 வாரங்கள் தொடர்ந்த‘பள்ளி வேலைநிறுத்தப் போராட்ட’த்தைக் கடந்த வாரம் நிறைவுசெய்திருக்கிறார்.
- ‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ [Fridays For Future] என்கிற பெயரில் காலநிலை மாற்றம் சார்ந்த விழிப்புணர்வை முன்னெடுத்துவரும் கிரெட்டா, தற்போது பள்ளிப் படிப்பை நிறைவுசெய்துள்ளார். எனவே, ‘பள்ளி வேலைநிறுத்தம்’ என்கிற பெயரில் இனிப் போராட்டத்தைத் தொடர முடியாது என விளக்கமளித்துள்ள அவர், வெள்ளிக்கிழமைகளில் தன்னுடைய போராட்டம் வழக்கம்போல் தொடரும் என்று அறிவித்துள்ளார்.
கிரெட்டா யார்?
- 2018 ஆகஸ்ட் 20: நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஸ்வீடன் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றமான ‘ரிக்ஸ்தாக்’கின் வாயிலில், சிறுமி ஒருவர் கையில் பதாகையுடன் வந்து அமர்ந்தார்; ‘காலநிலையைக் காக்கப் பள்ளி வேலைநிறுத்தம்’ என்று அதில் எழுதியிருந்தது. பள்ளிக்கூடத்தில் இருக்கவேண்டிய சின்ன பெண், இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று வியப்பும் குழப்பமுமாக மக்கள் அவளைக் கடந்து சென்றார்கள்.
- கிரெட்டா துன்பர்க் என்கிற அந்தச் சிறுமி, காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்கும் நோக்கில், தனி ஆளாக தன்னுடைய போராட்டத்தை அன்று தொடங்கினார். அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய ‘எங்கள் வாழ்க்கைக்கான பேரணி’யில் இருந்து, தன்னுடைய போராட்ட முறைக்கு கிரெட்டா ஊக்கம் பெற்றிருந்தார்.
வரலாற்றுத் திருப்பம்
- கரிம எரிபொருள் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறையால், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், ஓர் அறிவியல்பூர்வமான உண்மை என்பது 1990களிலேயே திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது; ஐபிசிசி எனப்படும் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு [Intergovernmental Panel on Climate Change, IPCC], 1990களின் மத்தியிலிருந்து காலநிலை சார்ந்த மதிப்பீட்டு அறிக்கைகளை [Assessment Report] வெளியிட்டுவருகிறது. எனினும், காலநிலை மாற்றம் சார்ந்தோ அதன் தீவிரம் குறித்தோ மேம்பட்ட புரிதல் பொதுச் சமூகத்தில் முறையாக ஏற்பட்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது ஓர் எல்லைக்கு உள்பட்டே இருந்துவந்தது.
- இந்தப் பின்னணியில், காலநிலை மாற்றம் சார்ந்த சொல்லாடல்களுக்கு 2018 ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. இரண்டு நிகழ்வுகள் இதற்கு வழிவகுத்தன: ஒன்று, கிரெட்டாவின் வருகை; இரண்டு, ஐபிசிசி அமைப்பு வெளியிட்ட ‘1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை’ [Special Report on Global Warming of 1.5 °C]. இவை இரண்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொதுச் சமூகத்தில் காலநிலை மாற்றம் சார்ந்த உரையாடலைத் தீவிரப்படுத்தின. கிரெட்டாவின் எழுச்சி அதற்கு முக்கியப் பங்காற்றியது. ஐபிசிசியின் அறிக்கை, காலநிலை மாற்றத்தை முதன்மைப்படுத்திய ஊடகச் செயல்பாட்டுக்கு மேற்குலக ஊடகங்களைத் தூண்டியது.
உலகம் தழுவிய போராட்டங்கள்
- ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஸ்வீடன் நாடாளுமன்ற வாயிலில் கிரெட்டா மேற்கொண்ட பள்ளி வேலைநிறுத்தப் போராட்டம், ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி உலகம் முழுமைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிரெட்டாவின் வயதொத்த இளைய தலைமுறையினர், அவரிடமிருந்து ஊக்கம்பெற்று தங்கள் நாடுகளில் அதேபோன்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்; சென்னையிலும் அதன் தாக்கத்தைப் பார்க்க முடிந்தது.
- நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா மாநாட்டில் பங்கேற்க, விமானப் பயணத்தை விடுத்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கரிம உமிழ்வற்ற படகில் கடந்தது, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான [டிவிட்டர்] எதிர்கொள்ளல், “எவ்வளவு நெஞ்சழுத்தம் உங்களுக்கு?” [How dare you?] எனக் காலநிலை மாநாடுகளில் உணர்ச்சிக் கொப்பளிக்க உரையாற்றியது போன்றவை கிரெட்டா என்கிற தனிநபர் சார்ந்த கவனத்தைத் தீவிரப்படுத்தினாலும், காலநிலை மாற்றம் சார்ந்த அவரது முன்னெடுப்புகளின் மீதும் தொடர் வெளிச்சம் பாய்ச்சியேவந்தன. 2019 செப்டம்பரில் நடைபெற்ற உலகளாவிய வேலைநிறுத்தப் போராட்டம் காலநிலை மாற்றம் சார்ந்த செயல்பாடுகளுக்கு மிகப் பெரிய முன்னகர்வாக அமைந்தது. ஆனால், 2020இல் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்றால், காலநிலை சார்ந்த செயல்பாடுகளிலும் தொய்வு ஏற்பட்டது. எனினும், கிரெட்டாவும் செயல்பாட்டாளர்களும் இணையம்வழியாகத் தங்கள் போராட்டத்தைத் தொடந்தனர்.
- ‘குழந்தைகள் வகுப்புகளைப் புறக்கணிக்கக் கூடாது’, ‘இத்தகைய விஷயங்களில் என்ன செய்ய வேண்டுமென்று சொல்ல குழந்தைகளுக்கு உரிமை கிடையாது’ என்பன போன்ற விமர்சனங்கள் போராட்டத்தின் தொடக்க காலத்தில் கிரெட்டா மீது முன்வைக்கப்பட்டன; ஆனால், அவற்றையெல்லாம் மீறி காலநிலை மாற்றத்துக்கு எதிரான சமகாலத்தின் முதன்மைக் குரலாக கிரெட்டா உருவெடுத்துள்ளார். கிரெட்டாவின் தலைமுறையினருடன் இன்னும் பிறக்காத தலைமுறையினரின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு, முந்தைய தலைமுறையின் அரசியல் பிரதிநிதிகளைக் கேள்விக்கு உள்படுத்திவரும் கிரெட்டாவின் சமீபத்திய செய்தி இதுதான்: “நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதைத் தவிர [நமக்கு] வேறு வழியில்லை. போராட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.”
‘தி கிளைமெட் புக்’
- முன்னுதாரணமற்ற தன்னுடைய போராட்ட முறைகள் மூலம் காலநிலை மாற்றம் சார்ந்த உரையாடலைப் பொதுச் சமூகத்தில் தீவிரப்படுத்திய கிரெட்டா, ‘The Climate Book’ என்கிற தொகுப்பு நூலைக் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளார். காலநிலை மாற்றம் சார்ந்து இன்று இயங்கிக்கொண்டிருக்கும், தங்கள் துறை சார்ந்து முக்கியமான பங்களிப்புகளை வழங்கியுள்ள 105 ஆளுமைகள் இதில் பங்களித்துள்ளனர்.
- காலநிலை மாற்றத்துக்குக் கலை-இலக்கியம் எப்படி முகங்கொடுக்கப் போகிறது என்கிற கேள்வியை எழுப்பி, அதுசார்ந்து தொடர்ந்து இயங்கிவரும் அமிதாவ் கோஷ், புனைவெழுத்தாளரான மார்கரெட் அட்வுட் ஆகியோரின் பங்களிப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் அறிவுச் சமூகத்தின் இன்றியமையாத பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது. இந்நூல் முழுமையாகவோ அதன் பகுதிகளோ தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியம்; தமிழ்ச் சூழலில் காலநிலை மாற்றம் சார்ந்த சொல்லாடலை மேம்படுத்துவதற்கும், தமிழ்ச் சுற்றுச்சூழல் உலகின் சொல்லாடலுக்குள் அது முழுமையாக நுழைவதற்கும் அது ஒரு தொடக்கமாக அமையும்.
நன்றி: தி இந்து (17 – 06 – 2023)