TNPSC Thervupettagam

கிழக்கு நோக்கிய பார்வை!

May 30 , 2019 2058 days 1093 0
  • முதல் தடவையாக 2014-இல் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது, பதவியேற்பு விழாவுக்கு இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துக்குமே அழைப்பு விடப்பட்டிருந்தது. அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட அண்டை நாடுகளின் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டதும் அவர்கள் கலந்துகொண்டதும் நரேந்திர மோடியின் முதல் ராஜதந்திர வெற்றியாக வர்ணிக்கப்பட்டது.
கடந்த முறை
  • கடந்த முறை சார்க் நாட்டுத் தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார்கள் என்றால், இந்த முறை அதில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நரேந்திர மோடி. பிம்ஸ்டெக் என்று சுருக்கமாக அழைக்கப்படும் வங்காள விரிகுடாவை ஒட்டிய நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டிருப்பதிலிருந்து இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறையில் காணப்படும் மாற்றத்தை உணர முடிகிறது. பிம்ஸ்டெக் என்பது இந்தியாவைத் தவிர வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பு.
  • 2014-இல் தனது பதவியேற்புக்கு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொண்டதை பிரதமர் மோடி பெருமையாகவே தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவுடனான பாகிஸ்தானின் அணுகுமுறை மாற்றம் பரவலான வரவேற்பைப் பெற்றது.
  • நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். சார்க் உறுப்பினர் நாடுகளின் உயரதிகாரிகள் பல மாதங்கள் விவாதித்து பல்வேறு ஒப்பந்தங்களைத் தயாரித்திருந்தனர். அவற்றில் மிக முக்கியமான ஒப்பந்தம், உறுப்பினர் நாடுகளுக்கிடையேயான பரஸ்பரத் தொடர்புகள் குறித்தது. கடைசி நிமிஷத்தில் ஒப்பந்தம் கையொப்பமாக இருந்த நிலையில், ராவல்பிண்டியிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் ஒப்புதல் அளிக்காததால், பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் முடக்கினார்.
பிம்ஸ்டெக்
  • காத்மாண்டுவில் ஏற்பட்ட அனுபவம்தான் வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்திக்கொள்ள நரேந்திர மோடியைத் தூண்டியது. அப்போதிலிருந்தே சார்க் அமைப்பைத் தாண்டி பிம்ஸ்டெக்கை வலுப்படுத்தும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்தது. சார்க் உறுப்பினர்களான வங்க தேசம், பூடான், நேபாளம், இலங்கை மட்டுமல்லாமல் வங்காள விரிகுடா கடலை ஒட்டிய தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மரையும், தாய்லாந்தையும் பிம்ஸ்டெக்கில் இணைத்துக் கொண்டது இந்தியாவின் புத்திசாலித்தனமான அடுத்தகட்ட நகர்வு.
  • இந்தியாவின் எல்லாவிதமான நட்புறவு சமிக்ஞைகளையும் பாகிஸ்தான் புறந்தள்ள முற்பட்டிருக்கிறதே தவிர, சமாதானத்துக்கான எண்ணத்துடன் செயல்பட்டதே இல்லை. 1999-இல்அன்றைய பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு பேருந்தில் பயணம் செய்து இரு நாடுகளுக்கிடையே போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால், அதன் எதிரொலியாக கார்கிலில் பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் உதவ முற்பட்டது.
பாகிஸ்தான்
  • அதேபோல, நவாஸ் ஷெரீப்பின் பிறந்தநாளுக்கு, அவரே எதிர்பாராத வண்ணம் திடீரென்று லாகூரிலுள்ள அவரது வீட்டிற்கு நரேந்திர மோடி சென்று வாழ்த்தினார். அடுத்த சில வாரங்களில் ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாதிகள் பதான்கோட் விமானதளத்தில் தாக்குதல் நடத்தினார்கள். பாகிஸ்தானில் உருவாகும் பயங்கரவாதிகள் இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்திருக்கிறார்கள். 2001-இல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், 2008-இல் மும்பைத் தாக்குதல், 2016-இல் உரி தாக்குதல், அண்மையில் புல்வாமா தாக்குதல் என்று பாகிஸ்தானின் மறைமுக ஆதரவுடன் இந்தியாவின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏராளம்.
  • புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உருவாகும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிப்பதற்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அப்படியிருந்தும்கூட, அது குறித்து எந்தவிதத் தீவிர நடவடிக்கையையும்  இம்ரான்கான் அரசு மேற்கொள்ளவில்லை எனும் நிலையில், புதிய அமைச்சரவையின் பதவியேற்புக்கு பாகிஸ்தானை அழைக்காமல் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
  • இந்தியாவைப் பொருத்தவரை நரசிம்ம ராவ் அரசு முன்மொழிந்த கிழக்கு நோக்கிய பார்வை வர்த்தக ரீதியாகவும், பொருளாதார மேம்பாட்டு ரீதியாகவும் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்து வருகிறது. ஆசிய நாடுகளுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள பிம்ஸ்டெக் ஒரு பாலமாக இந்தியாவுக்கு அமையும். கடந்த 30 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாதான் உலகிலேயே மிக அதிகமான பொருளாதார வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்பதால், நமது கிழக்கு நோக்கிய பார்வை மிக மிக அவசியம்.
கலாச்சாராத் தொடர்பு
  • எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நாடுகள் இந்து மதம், பெளத்தம் ஆகியவற்றால் இந்தியாவுடன் பல நூற்றாண்டு கலாசாரத் தொடர்புடையவை என்பதை நாம் உணர வேண்டும்.
  • 2014-இல் பதவியேற்புக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது எந்த அளவுக்குப் புத்திசாலித்தனமோ, அதேபோன்ற ராஜதந்திரம்தான் இந்த முறை வேண்டுமென்றே பாகிஸ்தானைப் புறக்கணித்து, பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களைப் பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருப்பது.
  • இந்த நாடுகளைப் பொருத்தவரை இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள விழையும் அதே நேரத்தில், இந்தியா மீதான ஒரு வருத்தமும் அந்த நாடுகளுக்கு உண்டு. அது என்னவென்றால், நாம் அந்த நாடுகளுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு அவற்றை விரைந்து நிறைவேற்றாமல் இருக்கிறோம் என்பது. பிரதமரின் கவனம் பிம்ஸ்டெக் நாடுகளின் மீது திரும்பியிருப்பதால், அந்தக் குறைபாடு அகற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி: தினமணி (30-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories