TNPSC Thervupettagam

கிஷிடாவுக்கு அடித்த யோகம்!

October 6 , 2021 1150 days 626 0
  • மக்களின் பரவலான அதிருப்தியை சமாளிக்க இந்திய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் முதல்வரை மாற்றுவதைப் போல, ஜப்பானில் பிரதமர் மாற்றப்பட்டிருக்கிறார்.
  • "டயட்' எனப்படும் ஜப்பான் நாடாளுமன்றம் ஃபுமியோ கிஷிடாவை பிரதமராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அவர் தனது அமைச்சரவையையும் அறிவித்திருக்கிறார்.
  • பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமைத்துக் கொண்டிருக்கும் அமைச்சரவை பழையவர்களும் புதியவர்களும் கலந்த கலவையாக இருக்கிறது.
  • யோஷிஹிடே சுகாவின் அமைச்சரவையில் இருந்தது போலவே வெளியுறவுத் துறை அமைச்சராக தோஷிமிட்சு மோட்டேகியும், பாதுகாப்பு அமைச்சராக நொபுவோ கிஷியும் புதிய அமைச்சரவையிலும் தொடர்வதால் கொள்கை அளவில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று நம்பலாம்.

ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா

  • ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த மோட்டேகி அனுபவசாலியான அரசியல்வாதி என்பது மட்டுமல்ல, பல முக்கியமான சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருப்பவர். பாதுகாப்பு அமைச்சர் நொபுவோ கிஷி முந்தைய பிரதமர் ஷின்சோ அபேயின் சகோதரர்.
  • நிதியமைச்சர் டாரோ ஆúஸா, அவரது உறவினரான 68 வயது ஷுனிசி சுசுகியால் மாற்றப்பட்டிருப்பது புதிய அமைச்சரவையின் குறிப்பிடத்தக்க மாற்றம்.
  • சுசுகி மூத்த தலைவர் என்பதுடன் முன்னாள் பிரதமர் ஒருவரின் வாரிசும்கூட. அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, சீக்கோ நோடாவை பிரதமர் கிஷிடா தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டது. பிரதமர் கிஷிடாவுக்கு எதிராக போட்டியில் வேட்பாளராக இருந்தவர் சீக்கோ நோடா. அவரையும் சேர்த்து அமைச்சரவையில் மூன்று பெண் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
  • முந்தைய பிரதமர் யோஷிஹிடே சுகா பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு ஏற்பட்டது. எதிர்பார்த்தது போல ஃபுமியோ கிஷிடாவின் தேர்தல் சுலபமாக இருக்கவில்லை.
  • முதல் சுற்று வாக்கெடுப்பில் களத்தில் இருந்த நான்கு வேட்பாளர்களில் யாருக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கிஷிடாவின் ஆதரவாளர்களும், மூன்றாவது இடத்திலிருந்த தக்காய்ச்சி சானேயின் ஆதரவாளர்களும் இணைந்ததால்தான் டாரோ கோனோ தோற்கடிக்கப்பட்டார்.
  • வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அனுபவசாலியான டாரோ கோனோ மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர். சமூக ஊடகங்களில் அவருக்கு பலத்த ஆதரவு உண்டு.
  • கட்சித் தொண்டர்கள் மத்தியில் நடத்தப்பட்ட முதல் சுற்று வாக்கெடுப்பில் டாரோ கோனோ 44% ஆதரவைப் பெற்றார் என்றால், இப்போது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஃபுமியோ கிஷிடா 29% வாக்குகள்தான் பெற முடிந்தது.
  • அப்படி இருந்தும்கூட கிஷிடா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நாடாளுமன்ற கட்சியில் அவருக்கு இருந்த ஆதரவுதான் காரணம். இளைஞர்கள் மத்தியில் டாரோ கோனோவும், மூத்த தலைவர்கள் மத்தியில் ஃபுமியோ கிஷிடாவும் செல்வாக்கு பெற்றிருப்பதை வாக்கெடுப்புகள் உணர்த்துகின்றன.
  • ஓராண்டுக்கு முன்புதான் முந்தைய பிரதமர் யோஷிஹிடே சுகா பிரதமர் பதவிப் போட்டியில் இப்போதைய பிரதமர் கிஷிடாவைத் தோற்கடித்தார்.
  • ஒரே ஆண்டில் அதிருஷ்ட தேவதை, வெளியுறவு அமைச்சராக இருந்த ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் பதவியை பெற்றுத் தரும் என்று யாரும் கனவிலும் நினைக்க வில்லை.
  • கடந்த ஓராண்டு யோஷிஹிடே சுகாவின் ஆட்சியில், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
  • சுகா அரசு கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றையும், அதனுடன் இணைந்த பொருளாதாரப் பிரச்னைகளையும் கையாண்ட விதம் மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
  • நவம்பர் மாத கடைசியில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலை சுகாவின் தலைமையில் சந்தித்தால் படுதோல்வி அடைய நேரிடும் என்கிற அச்சம்தான், பிரதமர் மாற்றத்துக்கான காரணம். வேறு வழியில்லாமல்தான் யோஷிஹிடே சுகா பதவி விலகுவதாக அறிவித்தார்.
  • பிரதமர் கிஷிடாவின் அதிருஷ்டம் கொள்ளை நோய்த் தொற்று பாதிப்பு குறைந்திருக்கிறது.
  • ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக இருந்தாலும்கூட, இப்போது ஜப்பான் மக்கள்தொகையில் 65% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
  • தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், பொருளாதாரத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்திவிட முடியாது என்றாலும் புதிய பிரதமர் முன்வைக்கும் வளர்ச்சித் திட்டங்களும், வாக்குறுதிகளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் செல்வாக்குச் சரிவைத் தடுத்து நிறுத்தும் என்று கட்சித் தலைமை எதிர்பார்க்கிறது.
  • நவம்பர் மாத கடைசியில் நடக்க இருக்கும் தேர்தலை அக்டோபர் மாத கடைசியில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா முன்னதாகவே நடத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
  • ஒருசில இடங்களை இழந்தாலும்கூட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று பிரதமர் கிஷிடா நம்புவதாகத் தெரிகிறது.
  • இந்தியாவைப் போலவே ஜப்பானிலும் குடும்ப அரசியல் பெரும் பங்கு வகிக்கிறது. பிரதமர் கிஷிடாவின் தந்தையும், தாத்தாவும்கூட ஜப்பான் நாடாளுமன்றமான டயட்டின் கீழவை உறுப்பினர்களாக இருந்தவர்கள்.
  • தனது தந்தையின் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் பிரதமர் கிஷிடா. இப்போதைய பிரதமர், முன்பு பிரதமராக இருந்த மியாஸவா கீச்சியின் உறவினரும்கூட.
  • பிரதமர் ஃபுமியோ கிஷிடா தேர்தலில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைப்பாரா அல்லது சில வாரங்கள் பிரதமராக இருந்து காணாமல் போவாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.

நன்றி: தினமணி  (06 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories