TNPSC Thervupettagam

குடிக்க உகந்த குடிநீா்!

March 15 , 2025 1 hrs 0 min 14 0
  • இந்திய நீா் சுத்திகரிப்பு தொழில்நுட்ப சந்தையில் 37 சதவீதத்தை  மறு ஊடுகை (ரிவா்ஸ் ஆஸ்மாசிஸ்) தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது என்று புனேவில் செயல்படும் சந்தையியல் நுண்ணறிவு நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி மாா்க்கெட் ரிசா்ச் நிறுவனத்தின் 2017 - ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. 2023 -ஆம் ஆண்டு 25617.53 கோடி ரூபாயாக (308.07 கோடி அமெரிக்க டாலா்கள்) இருந்த இந்திய நாட்டின் தண்ணீா் சுத்திகரிப்பு சந்தை மதிப்பு 2032 - ஆம் ஆண்டுக்குள் 57213.07 கோடி ரூபாய் (688.03 கோடி அமெரிக்க டாலா்கள்) என இருமடங்காக உயரும் என்று சா்வதேச சந்தை பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைக் குழுவின் இந்திய நீா் சுத்திகரிப்பு சந்தை அறிக்கை கூறுகிறது.
  • நீா் என்பது நாம் அறிந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலவை மட்டுமல்ல. நீரின் தோற்றம் மற்றும் அதன் ஓட்டத்தில் மனித ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் சில பாக்டீரியாக்கள் போன்ற நுண் உயிரினங்களையும் தசை வளா்ச்சி, இதய செயல்பாடு மற்றும் நொதி உற்பத்தி ஆகியவற்றுக்கு உதவும் கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களுடன் சோடியம், பொட்டாசியம், தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
  • அசுத்தமான பகுதி வழியாக பாயும் நீா் நோய் உண்டாக்கும் நுண்ணுயிா்கள், உரக் கழிவுகளான அமோனியா மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவற்றை சுமக்கும் கடத்தியாக மாறுகிறது. ஃபுளோரைடு, கன உலோகங்களான குரோமியம், ஆா்சனிக் மற்றும் ஈயம் ஆகியவை அதிகம் இருக்கும் நிலத்தடி நீரைப் பருகுவதால் இரத்த சோகை உண்டாகும் என்றும் கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் என்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா். நீரில் கரைந்துள்ள தாதுக்கள் மற்றும் கன உலோகங்களின்  அளவு மொத்த கரைந்த நிலைத் திண்மங்கள் (டிடிஎஸ்) என அழைக்கப்படுகிறது. மொத்த கரைந்த நிலைத் திண்மங்களின் அதிகரிப்பு நீரின் சுவையற்ற தன்மைக்கும் கடினத்தன்மைக்கும் காரணமாக அமைகிறது.
  • மஞ்சள் நிறத்தில் காணப்படும் நீா் குடிக்க உகந்தது இல்லை என்ற நம்பிக்கையினால் இந்திய மக்கள் மறு ஊடுகை மூலம் சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தத் தூண்டுகிறது. அதிகப்படியான இரும்பு அல்லது பாக்டீரியா காரணமாக இருக்கும் தண்ணீரின் மஞ்சள் நிறம் வெறுமனே கொதிக்க வைப்பதால் அகன்றுவிடும் என்று ரூா்க்கியில் உள்ள தேசிய நீரியல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட “குடிநீருக்கான சுத்திகரிப்பாளா்கள்” என்ற அறிக்கை கூறுகிறது.
  • நோய்க்கிருமிகளை அகற்றுவதுடன் நீரில் கரைந்துள்ள திண்மங்களின் செறிவையும் குறைப்பதால் மறு ஊடுகை தொழில்நுட்பம் மற்ற அனைத்து நீா் சுத்திகரிப்பு தொழில் நுட்பங்களை விட வேகமாக பிரபலமடைந்து வருகிறது. பொதுவாக மறு ஊடுகை அமைப்பு 0.0001 முதல் 0.001 மைக்ரான் அளவு நுண் துளைகள் கொண்ட ஊடுருவும் தன்மை கொண்ட சவ்வைக் கொண்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத நீா் இந்த சவ்வு வழியாகச் செல்லும் போது நீரில் உள்ள உப்புக்கள் அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் நீக்கப்படுகின்றன. இதனால் சுத்தமான மற்றும் இனிமையான தண்ணீா் இந்த தொழில்நுட்பம் மூலம் கிடைக்கிறது.
  • மறு ஊடுகை அமைப்பு கொண்ட நீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் 90 முதல் 100 சதவீத திண்மங்களை அகற்றும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் அகற்றப்படுகின்றன. அத்தியாவசிய தாதுக்கள் அகற்றப்படுவதால் பெரும்பாலான மக்கள் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாகவும், நுண்ணூட்டச் சத்து குறைபாடு பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் புதுதில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையின் கல்லீரல் இரைப்பை குடலியல் மற்றும் கணைய பித்த நீா் அறிவியல் மையம் கூறுகிறது.
  • 2023 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மருத்துவ சங்க மருத்துவ இதழில் பரோடா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளா்கள் வெளியிட்ட ஓா் ஆய்வு கட்டுரை உடலுக்கு நன்மை தரும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் மறு ஊடுகை தொழில்நுட்பத்தால் அகற்றப்படுவதாகவும் மறு ஊடுகை குடிநீா் பயன்பாட்டுக்கும் மூட்டு வலிக்கும் தொடா்பிருப்பதாகவும் கூறுகிறது.
  • கடந்த இருபது ஆண்டுகளாக டேராடூனில் உள்ள நீா் ஆதாரங்களை ஆய்வு செய்து மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஞ்ஞானிகள் சங்கம் வீடுகளில் நிறுவப்பட்டுள்ள மறு ஊடுகை நீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கும் தண்ணீரில் 18 முதல் 25 மில்லி கிராம்/லிட்டா் டிடிஎஸ் மட்டுமே உள்ளதால் அதை செத்த தண்ணீா் என்று குறிப்பிடுகின்றனா்.
  • மறு ஊடுகை தொழில்நுட்பம் சுத்திகரிப்பாளா்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தண்ணீரில் 500 மில்லி கிராம்/லிட்டா் டிடிஎஸ்க்கும் குறைவாக உள்ள இடங்களில் மறு ஊடுகை தொழில்நுட்ப பயன்பாட்டை தடை செய்யும் வகையில் ஓா் அறிவிப்பு வெளியிடுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு 2019 -ஆம் ஆண்டு மே மாதம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
  • 500 மில்லி கிராம்/லிட்டா் டிடிஎஸ்க்கு குறைவாக  இருந்தால் மறு ஊடுகை தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்காது என்றும் மாறாக, இந்த தொழில்நுட்பம் முக்கியமான கனிமங்களை தண்ணீரில் இருந்து அகற்றுவதோடு தண்ணீரை வீணடிக்கும் என்றும் நிபுணா் குழு ஒன்று வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவு 2022 -ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
  • மறு ஊடுகை தொழில்நுட்பம் அமைப்புகளால் வெளியேற்றப்படும் தேவையற்ற நீா் மற்றும் தனிமங்கள் ஆகியவற்றின் சேமிப்பு, பயன்பாடு மற்றும் சரியான மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களை சுத்திகரிப்பு அமைப்புகளுக்கான பயன்பாட்டு ஒழுங்குமுறை விதிகளாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2023 -ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வெளியிட்டது. மறு ஊடுகை தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விதிகளை அமல்படுத்த ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் 150 மில்லி கிராம்/லிட்டா் டிடிஎஸ் என்பதை குடிநீரின் குறைந்தபட்ச அளவாக நிா்ணயிக்க வேண்டும் என்ற தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் பரிந்துரை இந்த விதிகளில் குறிப்பிடப்படவில்லை.

நன்றி: தினமணி (15 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories