TNPSC Thervupettagam

குடிநீர் மேலாண்மை

March 11 , 2019 2133 days 1423 0
  • கோடையும் நிலத்தடி நீரும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. காரணம், கோடை காலத்தில்தான் நீரின் தேவை அதிகரிக்கும்; மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். தண்ணீரும் அதிகம் செலவழியும்.
  • தண்ணீர் அதிகம் கிடைக்கக் கூடிய மழை காலத்தில் அதன் பயன்பாட்டைவிட, தண்ணீர் அதிகம் கிடைக்காத கோடை காலத்தில்தான் அதன் பயன்பாடு அதிகம். இதனால், நிலத்தடி நீரின் தேவையும் மிக அதிகம்.
நீர் – தேவை
  • மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தண்ணீரின் தேவையால் சென்னை நகரம் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. சென்னை குடிநீர் ஆதாரங்களான புழல் ஏரி, பூண்டி ஏரி உள்ளிட்டவற்றில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.
  • லாரி மூலம் தண்ணீர் விநியோகம் அதிகரிக்கிறது. லாரி தண்ணீருக்குப் பதிவு செய்தால், சமையல் எரிவாயு சிலிண்டர் வருவது போன்று ஏழு அல்லது எட்டு நாள்கள் கழித்துத்தான் தண்ணீரைக் கொண்டுவந்து தருகிறார்கள். ஜனவரி மாதத்தில் 5,000 நடையாக இருந்த இந்த லாரி குடிநீர் விநியோகம், இப்போது 6,450 நடையாக அதிகரித்துள்ளது. நிலத்தடி நீரின் தேவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருப்பது பற்றி கவலைப்படுகிறோமா எனத் தெரியவில்லை.
நதிநீர் இணைப்பு
  • நதிநீர் இணைப்பு குறித்து அரசியல் கட்சிகள் கூறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர, எதிர்கால நீராதாரம் குறித்த எந்தத் தெளிவான முடிவையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகளின் வாக்குறுதியைப் போன்று, பருவநிலை மாற்றங்களால் மழை பொய்த்துப் போனது.
  • தமிழகத்தில் 600 மில்லி மீட்டர் பெய்ய வேண்டிய மழை, சராசரியாக 340 மி.மீட்டர்தான் பெய்திருக்கிறது; அதாவது, பாதி அளவுதான் மழை பெய்திருக்கிறது. இதே நிலை நீடித்தால், மிகப் பெரிய வறட்சியை தமிழகம் இன்னும் சில ஆண்டுகளில் எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். அதற்குள் நிலத்தடி நீரை செறிவுபடுத்தாவிட்டால் விவசாயம் முழுமையாகப் பொய்த்து விடும் நிலை ஏற்படக்கூடும்.
  • தமிழகத்தில் 12 லட்சம் கிணறுகள், 39 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 91,000 கிணறுகள், 6 லட்சத்து 21 ஆயிரம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றில் 60 சதவீத கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தற்போது வறண்டுபோய் உள்ளன.
புள்ளிவிவரம்
  • தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில், நிலத்தடி நீரின் அளவு 2 கோடி கனஅடியாக இருந்தது; 2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் நிலத்தடி நீர் 16 கோடி கனஅடியாகக் குறைந் துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தால், நீரின் தேவை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருக்கிறது.
  • நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக வரும் 2050-ஆம் ஆண்டில் தண்ணீரின் தேவை 2,032 டிஎம்சியாக இருக்கும் என்று மாநில நீர்வள மேலாண்மை முகமை தமிழக பொதுப்பணித்துறைக்கு அறிக்கை அளித்துள்ளது. தற்போது நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாதுகாப்பான பகுதிகள் பட்டியலில் இருந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 32 மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் அபாயகரமானதாக மாறி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லியில் நீதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் வெளியிட்டார்.
  • இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள 21 நகரங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றி விடும் என்ற அதிர்ச்சித் தகவலை அது வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்பட்டு சுமார் 10 கோடிப் பேர் பாதிக்கப்படுவார்கள் என அது எச்சரித்துள்ளது.
  • மேலும், வரும் 2030-ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையிலேயே நாடு இருந்தால் மிகப் பெரிய பாதிப்பைச் சந்திக்கும் என்றும் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் இழக்க நேரிடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொல்லொணா துயரத்துக்கு மக்கள் உட்படப் போகிறார்கள் என நீதி ஆயோக் எச்சரித்துள்ளது.
  • தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருகிறார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது தோராயமான தரவுதான் என்றாலும் அது தரும் அபாயகரமான செய்தியை அலட்சியப்படுத்தி விட முடியாது.
தமிழ்நாட்டில்.....
  • செழிப்பான மாவட்டங்கள்கூட இந்த ஆண்டு வறட்சியின் பிடியில் சிக்கும் என்கிற அச்சம் நிலவுகிறது. காரணம், ஆற்றோர மாவட்டங்களில்கூட நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது; அணைகள், ஆறுகள் மானாவாரி கால்வாய்கள் எல்லாம் வெடிப்பு ஏற்பட்டுக் கிடக்கின்றன. நிலத்தடி நீர் பயன்பாடு என்பது ஆபத்து காலத்தில் உதவுவதுதான். விதை நெல்லை விற்பது போன்று, நிலத்தின் நீரை ராட்சச மோட்டார்களைப் போட்டு, தேவைக்கு மேல் அல்லது வேறு தேவைகளுக்காக அல்லது வேறு நோக்கங்களுக்காக உறிஞ்சி எடுத்தாகி விட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சும்போது கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
  • இதனால், தண்ணீரின் விலை அதிகரிக்கும். இதனால், வசதி படைத்தவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் தங்களுடைய நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி, தனி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 135 முதல் 155 லிட்டர் நீர் தேவை. ஆனால், 75 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 260 முதல் 300 லிட்டர் நீரைப் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 25 சதவீதம் பேருக்கு 40 லிட்டருக்கும் குறைவான தண்ணீரே கிடைக்கிறது.
  • சிலருக்குக் கிடைப்பதே இல்லை. எனவே, நிலத்தடி நீர் தொடர்பான இந்தக் கட்டண விதிப்பின் மூலம் ஊழல்தான் அதிகரிக்குமே தவிர தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை. மண் அள்ளுவதை தடுக்க எத்தனை விதிமுறைகள் இருந்தும் மண்ணை அள்ளிக் கொண்டே இருப்பதைப் போன்று, தண்ணீரையும் ஏதேனும் ஒரு கட்டணத்தைக் கட்டிவிட்டு எடுத்துக் கொள்வார்கள். நீர் மேலாண்மையின் அடிப்படை விஷயம் எளிமையானது.
  • அது சிக்கலான வரைபடங்களாலோ கணிதங்களாலோ ஆனதல்ல. மிக அடிப்படையான விஷயம் எவ்வளவு அளவுக்கு நீர் எடுக்கிறோமோ அந்த அளவுக்கு மழையின்போது நீர் மறுபடி சேர வேண்டும். அதற்காகத்தான் பல்வேறு விதமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவசரத்துக்கு முதல் உதவி செய்வதைப் போன்ற சில குடிநீர்த் திட்டங்கள் அரைகுறையாக நிறைவேற்றப்படுகின்றன. முதல் உதவியே முழு உதவி ஆகிவிடாது.
  • மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள், மழைநீர்க் கசிவு குட்டைகள், தமிழ்நாடு விவசாயத்துறையில் ஓடை பராமரிப்புத் திட்டங்கள், தடுப்பணை திட்டங்கள் எனப் பல எளிமையான, பெரும் பலனை அளிக்கக் கூடிய திட்டங்கள் இருந்தன. ஆனால் இப்போது அந்தத் திட்டங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் செயல்படுவதாகத் தெரிய வில்லை.
நிலத்தடி நீர்
  • நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த தீவிர கவனமும் சிந்தனையும் இல்லை. மக்களிடமும் இதற்கான விழிப்புணர்வு இல்லை. பொது மக்களின் அலட்சியத்தை திருமண விருந்துகள் உள்ளிட்டவற்றில் பார்க்கலாம். பாட்டில் தண்ணீரில் பாதி குடித்து விட்டு அப்படியே வைத்து விடுவதும், மீதமுள்ள தண்ணீரை அப்படியே தூக்கி எறியும் பழக்கம் உள்ளது. தெருக் குழாய்களில் பல சரியாக மூடப்படாமல் தண்ணீர் வழிந்து ஓடும் அவலத்தை பல ஊர்களில் காணலாம்.
  • ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது பழைய திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. அறிவியலாளர்கள் கொடுத்த காலக்கெடு கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் மேலாண்மையில் மாநிலங்களின் செயல்பாட்டை மையமாகக் கொண்டு நீதி ஆயோக் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 24 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையில் குஜராத் முதலிடத்தை வகிக்கிறது. அதற்கடுத்தடுத்த இடங்களை மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை பிடித்துள்ளன.
  • குஜராத் முதலிடத்தைப் பிடித்ததற்கான காரணம் எளிமையானது. நீர் சேகரிப்பு, தடுப்பணைகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்துள்ளது. 2. "ஒரு துளி நீரில் அதிகமான பயிர்' என்ற பெயரில் சொட்டு நீர்ப் பாசனத்தை ஊக்குவிக்கிறது. 3. அனைத்து நீர்க் கசிவுகளையும் சரி செய்ததால் நிலத்தடி நீரின் அளவு உயர்ந்துள்ளது. காகத்தின் கதையைப் படித்திருக்கிறோம். கீழே இருக்கக்கூடிய நீரை மேலே எடுப்பதற்காக தன் பக்கத்தில் இருக்கக்கூடிய கல், மண் ஆகியவற்றை பானைக்குள் காகம் தூக்கிப் போடும். அது உள்ளே போகப் போக நீர் மேலே வரும்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories