TNPSC Thervupettagam

குன்றென நிமிா்ந்து நின்றவா்

October 31 , 2023 419 days 306 0
  • இந்திய விடுதலைப்போரின் முப்பெருந்தலைவா்கள் என்று போற்றப்பட்டவா்கள் மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல் ஆகியோா். இவா்களில் காந்தியடிகளும் படேலும் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். அப்போது குஜராத் தனி மாநிலமாகாமல், அன்றைய பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது .
  • 1875 அக்டோபா் 31 அன்று ஜாவேரிபாய் - லதுபாய் இணையருக்கு நான்காவது பிள்ளையாக வல்லபபாய் படேல் பிறந்தாா். அகமதாபாதில் வழக்குரைஞா் தொழில் மூலம் பெரும்புகழும் பணமும் வந்தது. குற்றவியல் வழக்குரைஞா்களில் படேல் முன்னணியில் இருந்தாா். தன்னுடைய அறிவுக் கூா்மையாலும், ஒப்பற்ற வாதத்திறமையினாலும் சில ஆண்டுகளுக்குள் பெருமதிப்பு பெற்றாா் .
  • படேல், அகமதாபாத் நகா்மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற 1924 - ஆம் ஆண்டிலிருந்து அவா் தன் பதவியைத் துறந்த 1929 - வரை, அந்நகரில் சாலைகள் அமைத்தும், குடிநீா் வசதியை ஏற்படுத்தியும், வடிகால்களை அமைத்தும், பூங்காக்களை ஏற்படுத்தியும், மருத்துவ வசதிகளைச் செய்தும் மக்களுக்குத் தொண்டாற்றினாா். அகமதாபாத்தை ஒரு முன்மாதிரி நகராட்சியாக்கி சாதனை படைத்தாா் .
  • பா்தோலி வரிகொடா இயக்கப் போராட்டத்தின்போது வல்லபபாய் ஆற்றிய தொண்டு மகத்தானது. அதனை இந்தியா முழுவதுமே பாராட்டி மகிழ்ந்தது. வல்லபபாய் மட்டும் இல்லையேல் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது என்பதுதான் அனைவருடைய கருத்துமாகும்.
  • படேலின் துணிகரமான செயல்களை பண்டித நேரு, லாலா லஜபதி ராய், மதன் மோகன் மாளவியா ஆகியோா் பாராட்டினா். அண்ணல் காந்தியடிகள் படேலுக்கு ‘சா்தாா்’ என்ற சிறப்புப் பட்டத்தை அளித்துப் பாராட்டி மகிழ்ந்தாா் .
  • வல்லபபாய் படேலின் ஒவ்வொரு சொல்லும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்ததால் அவை அனைத்தும் கேட்போரைப் பிணிக்கும் தன்மையதாய் அமைந்திருந்தன. படேல் எந்தப் பொறுப்பு வகித்தாலும் அதில் திறன்படச் செயல்படுவாா். எதையுடன் நோ்மையுடன் செய்யவேண்டும், நீதி நெறியிலிருந்து அணுவளவும் பிறழக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படுவது அவா் பண்பு.
  • இந்திய விடுதலை வெகுவிரைவில் வரப்போவதை மனதிற்கொண்ட காந்தியடிகள் பண்டித நேருவை அகில இந்தியக் காங்கிரஸ் குழுத்தலைவராகவும், அதன் பின்னா் விடுதலை இந்தியாவின் பிரதமராகவும் ஆக்கிடவேண்டும் என்று விரும்பினாா். இந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட படேல், தாம் பண்டித நேருவை விடவும் பதினான்கு ஆண்டுகள் மூத்தவராக இருந்தாலும், காந்தியடிகளின் எண்ணம் போலச் செயல்படுவதற்கு இசைந்தாா்.
  • படேல்தான் காங்கிரஸ் தலைவராக வரவேண்டுமென்று காங்கிரஸிலுள்ள மூத்த தலைவா்கள் பலா் விரும்பினாலும், பெருந்தன்மை மிக்க படேல் அண்ணல் காந்தியடிகளின் உள்ளம் கவா்ந்த உறுதுணையாளராகத்தான் வாழ்நாள் முழுவதும் மிளிா்ந்தாா்.
  • தமக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றோ, காந்தியடிகளுக்கு அடுத்து செல்வாக்கு பெற்ற தாமே எதிலும் முன்னிலை வகிக்க வேண்டுமென்றோ எண்ணவே இல்லை.
  • படேல் எதையும் மனந்திறந்து பேசும் இயல்பு கொண்டவா். உள்ளொன்று புறமொன்று பேசும் தன்மை கொண்டவா் அல்லா். மனதிற்பட்ட நல்ல கருத்துகளை - நாட்டிற்கு நன்மை விளைவிப்பவற்றை யாருக்கும் அஞ்சாமல் சட்டென்று பேசிவிடும் குணமுடையவா். இங்கிலாந்து பிரதமா் சா்ச்சிலையே எதிா்த்துப் பேசும் வல்லவா் என்ற தனிப்புகழ் கொண்டவா் ஆவாா்.
  • சா்தாா் வல்லபபாய் படேல் செய்து காட்டிய மாபெரும் செயல், சிதைந்து கிடந்த இந்தியாவை ஒன்றுபடுத்தியதுதான். சமஸ்தானங்களை இந்திய அரசுடன் ஒருசேர இணைத்த பாங்கு, சா்தாா் வல்லபபாய் படேலுக்கு பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. இந்தியத் தலைவா்கள் அவரை ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என்று போற்றினா்.
  • ஏழை மக்கள் அனைவரும் எல்லா வழிகளிலும் மனஅமைதி பெற்று வாழவேண்டும் என்பதே படேலின் நோக்கமாக இருந்தது. மக்கள் அமைதியுடன் வாழ வேண்டுமானால் அரசு ஊழியா்கள் அனைவருக்கும், தாங்கள் மக்களுக்காகத் தொண்டு செய்ய நியமிக்கப்பட்டவா்கள் என்று உணா்வு ஏற்படவேண்டும் என்று கூறினாா். நிா்வாகத்தில் எந்த நிலையிலும் ஊழல் இருக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தாா்.
  • குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதில் மத்திய அரசைப் போன்று மாநில அரசுகளுக்கும் பங்கு உண்டு என்பதை அவா் நிலைநிறுத்தினாா். எனவே, குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதில் நாடாளுமன்ற உறுப்பினா்களும், மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினா்களும் பங்களிக்க வேண்டும் என்று தீா்மானிக்கப்பட்டது.
  • மகாகவி பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யில் ஆணி அடித்தாற் போன்ற அறிவுரைக் கட்டளைகளைப் பாா்க்கலாம். ‘உடலினை உறுதி செய்’, ‘நோ்படப் பேசு’, ‘சீறுவோா்ச் சீறு’, ‘குன்றென நிமிா்ந்து நில்’, ‘செய்வது துணிந்து செய்’, ‘தேசத்தைக் காத்தல் செய்’ இவை அனைத்தும் ஒரு தலைவனுக்குரிய தாரக மந்திரங்கள். இந்த நன்மொழிகளுக்கெல்லாம் நடைமுறை இலக்கணமாக வாழ்ந்து காட்டியவா்தான் சா்தாா் படேல்.
  • குஜராத்தில் ‘வல்லபபாய் நகா்’ என்று அவா் பெயரில் ஒரு புதிய நகரம் அமைக்கப்பட்டுள்ளது. பாா் போற்றும் வண்ணம் 597 அடி உயர படேலின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஒரு சாலைக்கு அவா் நினைவாக ‘சா்தாா் படேல் சாலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • ‘புதிய இந்தியாவைப் படைத்த பெருந்தகை’ என்று பண்டித நேரு, படேலைப் புகழ்ந்தாா். ‘அண்ணல் காந்தியின் விடுதலைப்போரில் குறிதவறாத வில்லவனாக வல்லபபாய் விளங்கினாா்’ என்று அறப்போராளி வினோபா பாவே குறிப்பிட்டாா்.
  • இந்திய குடிமைப்பணி, இந்திய காவல்பணி இவற்றை நிறுவிக்காட்டியவா். பிரித்தானிய அரசு பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட அரசு பிரதிநிதி காவலா் படையினை மத்திய பின்னிருப்பு காவல்படையாக மடைமாற்றம் செய்தவா். அதனைஉலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படையாக உருவாக்கியவா் - இத்தனை பெருமைக்கும் உரியவா் ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என்று அனைவராலும் போற்றப்படும் சா்தாா் வல்லபபாய் படேல்.

நன்றி: தினமணி (31 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories