- பிளாஸ்டிக் என்றழைக்கும் ஞெகிழி நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பொருள் ஆகியிருக்கிறது. நாம் புழங்கும் பல்வேறு கருவிகள், ஊர்திகள் எல்லாவற்றிலும் அதன் பயன்பாடு உள்ளது. இதில் மறுசுழற்சி செய்ய முடியாத, உயிரியல் சிதைவுக்கு உட்படுத்த முடியாத ஞெகிழிப் பொருள்கள் சுற்றுச்சூழலின் மீது பெருஞ்சுமையாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. எல்லா ஆறுகளும் கடலைச் சென்றடைகின்றனவோ இல்லையோ, நிலத்தின் எல்லாக் கழிவுகளுக்கும் இறுதிப் புகலிடம் கடலாகவே இருக்கிறது.
- ஆண்டு தோறும் 80 லட்சம் டன் ஞெகிழி கடலில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இதில் 95% கடலடித்தரையில் படிந்துவிடுகிறது. ஆர்க்டிக் முதல் அண்டார்ட்டிக் வரை உலகக் கடலின் அவ்வளவு மூலை முடுக்குகளிலும் பரவிக்கிடக்கும் ஞெகிழி மாசு, அங்குள்ள வாழிடங் களையும் உயிரினங்களையும் பாதித் துள்ளது.
- கடலுக்கு வந்துசேரும் திடக் கழிவுகள் கூளங்களாகக் கடலடித் தரைகளில் சேகரமாகி, பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் கடல் தரையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. 180,000 கோடிக் கூளக் குவியல்கள் 14 லட்சம் ச.கி.மீ. கடல்தரைப் பரப்பை மூடிவிட்டன. உலகின் ஐந்து ராட்சதக் கூளத் திட்டுகளில் மிகப்பெரிய திட்டு ‘கிரேட் பசிஃபிக் கூளத் திட்டு’.
- கடலை மாசுபடுத்தும் ஞெகிழியில் 80% நிலத்திலிருந்து வந்து சேர்வதாகும். இப்படி வந்து சேரும் கழிவில் கடலில் மிதப்பவை வெறும் 5% மட்டுமே; மற்றவை மொத்தமாகக் கடலடித் தரையில் படிந்துவிடுகின்றன. பற்பசை,திரவ சோப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஞெகிழி நுண்துணுக்குகள் வடிகட்டிகளி லிருந்து தப்பித்துவிடும் அளவுக்கு நுண்ணியவை. சாக்கடைகளை மறுசுழற்சி செய்தாலும் ஞெகிழி நுண்துணுக்குகள் எளிதில் தப்பித்துக் கடலில் சேர்ந்துவிடுகின்றன.
சிதைவுறா ஞெகிழி
- ஆர்க்டிக் முதல் அண்டார்ட்டிக் வரை உலகக் கடலின் அவ்வளவு மூலை முடுக்குகளிலும் பரவிக் கிடக்கும் ஞெகிழி மாசு, அங்குள்ள வாழிடங்களையும் உயிரினங்களையும் பாதித்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஞெகிழிக் கூளங்களைக் கடலுக்குத் தள்ளும் இந்தப் போக்கு நீடித்தால் பொ.ஆ. (கி.பி.) 2050இல் கடலில் மீன்களைவிட ஞெகிழியே அதிகமாகக் கிடைக்கும் நிலை ஏற்படும் என ஆய்வுகள் கணிக்கின்றன.
- கடல் விலங்குகளையும் கடல்பறவைகளையும் ஞெகிழி மூச்சுத்திணறடித்துக் கொன்று கொண்டிருக் கிறது. ஞெகிழியைத் தின்பதனால் மீன்கள், ஆமைகள், பறவைகள் இறந்துபோகின்றன. பல உயிரினங்கள் தவறுதலாக ஞெகிழிக் கூளங்களில் சிக்கி இறக்கின்றன. 0.5 மில்லிமீட்டருக்குக் குறைவான ஞெகிழி நுண்துணுக்குகள் மீன்களால் விழுங்கப்பட்டு உணவுச் சங்கிலிக்குள் நுழைந்துவிடுகின்றன.
- உணவாக நம் மேசைக்கு வரும் மீனிலும் ஞெகிழி நச்சு கலந்துவிட்டது. கனரக உலோகத் தனிமங்கள், பாலிகுளோரினேட்டட் பைஃபீனைல் போன்ற வேதி நச்சுகளை ஞெகிழி எளிதாக உறிஞ்சிக்கொள்கிறது. ஞெகிழியோடு இந்த நச்சுகளும் உணவுச் சங்கிலி வழியாக நம் உடலை வந்தடைந்து, குருதியிலும் கலந்துவிட்டன.
அதிகரிக்கும் பிரச்சினைகள்
- வெளிமண்டல வெப்ப உயர்வினால் பொ.ஆ. 2040, 2060, 2100 ஆண்டுகளில் உலகம் சந்திக்கப்போகும் நெருக்கடிகளைக் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (IPCC) விரிவாகப் பட்டியலிட்டுள்ளது. உணவு உற்பத்தி 50% வீழ்ச்சியடையும்; 360 கோடி மக்கள் உணவுசார்/ நீர்சார் நோய்களால் பாதிக்கப் படுவார்கள். புயல் காலக் கடல் கொந்தளிப்புகளால் (storm surges) கடற்கரை நிலங்களைப் பெரு வெள்ளம் சூழ்ந்துவிடும். உலகின் பல்வேறு பகுதிகளில் இம்மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிட்டன.
- ஆண்டுதோறும் வங்கதேசத்தின் 30 முதல் 40% நிலப்பரப்பு புயல்வெள்ளத்தில் மூழ்கிப்போகிறது. மயிலாடுதுறைக் கடற்கரையைப் போல, உலர்காலப் பெருவெள்ளம் (dry weather flooding), வெப்ப மயக்கம் (heat stroke), வளிமண்டல ஈரப்பத வீழ்ச்சியினால் மரணங்கள்- இப்படிப்பல சிக்கல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பெருந்தொற்று மரணங்கள்
- காலநிலை மாற்றம் பெருந் தொற்றுகளின் எளிதான பரவலுக்கும், மிகையான தாக்குதலுக்கும் காரணமாகிறது. பொ.ஆ. 1918இல் ஸ்பானிய ஃபுளூ என்னும் பெருந்தொற்று பரவியது; அதில் லட்சத்துக்குப் பதினான்கு பேர் இறந்துபோயினர். 2020-‘21இல் நேர்ந்த கோவிட் பெருந்தொற்றில் பலியானோர் லட்சத்துக்கு 100 பேர்! பெருந்தொற்றைத் தீவிரப்படுத்தியதில் உலகளாவிய போக்குவரத்து வளர்ச்சிக்கும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த 100 ஆண்டுகளில் சாதித்திருக்கும் மருத்துவ அறிவியல், உயிர்க்காப்பு நுட்பங்களால் பெருந்திரள் மரணங் களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இயற்கையோடு ஒப்புரவு பேண வேண்டியவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டிய தருணம் இது.
அழியும் தானியக் களஞ்சியங்கள்
- காலநிலை பிறழ்வினால் உலகின் தானியக் களஞ்சியங்கள் அழிவைச் சந்திக்கும் என்று 1990களில் அறிஞர்கள் கணித்திருந்தனர். இன்றைக்கு நிலத்தில் உணவு உற்பத்தி பொய்த்து வருவது போலவே, கடலில் மீன்வளமும் பெருவீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதோடு கடற்கரைகளைக் கடல் விழுங்கிக் கொண்டிருக்கிறது. நெய்தல் குடிகள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து அலைகுடிகளின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
- கடல் மாசுபாடு, மிகைச்சத்து ஏற்றம், கூளக்குன்றுகள், ஞெகிழிக் குன்றுகள், உயிர்வளி வீழ்ச்சி, உயிர்ப்பன்மய வீழ்ச்சி என்பதாக, கடல் இப்போது எதிர்கொண்டுவரும் சிக்கல்களைக் காலநிலைப் பிறழ்வு மேலும் துரிதப்படுத்தும்.
பொருளாதாரத் தாக்குதல்
- காலநிலைப் பிறழ்வு 2022இல் இந்தியாவுக்கு 270 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆண்டில் மொத்த உற்பத்தியில் 8% வீழ்ச்சி ஏற்பட்டது. 2021இல் இழப்பானது 159 பில்லியன் டாலர். காலநிலை மாற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வெப்பநிலை உயர்வினால் வேளாண் உற்பத்தி சரிவைச் சந்தித்தபோது உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது.
- 2030இல் காலநிலை மாற்றத்தினால் உலக அளவில் 8 கோடி பேர் தொழிலை இழப்பார்கள் என ஐ.நா. கூறுகிறது. அதில் 3.4 கோடி பேர் இந்தியர்களாக இருப்பார்கள்.
- காலநிலை மாற்றம் எப்படி வேலையிழப்பை ஏற்படுத்தும்? ‘வெப்ப அலையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், பகலில் வீடுகளில் இருந்து கொள்ளுங்கள், நிறையத் தண்ணீர் குடியுங்கள்’ என்று அறிவுரை வெளியிடுவதோடு கடமை முடிந்து போனதாக அரசு நினைக்கிறது. மக்களும் அப்படித்தான் நினைத்துக்கொள்கின்றனர். நம்மைப் பாதுகாப்பது அரசின் கடமை இல்லையா?
- இந்தியாவின் 49% பணியாளர்கள்- 23 கோடி பேர்- திறந்தவெளியில் வேலை செய்பவர்கள். அன்றாடக் கூலிகள். சூழலில் பெருநெருக்கடி ஏற்படும்பொழுது அவர்களுக்கு என்னவாகிறது என்பதைப்பெருந்தொற்றுக் காலத்தில் நாம் கண்டோம். குடும்பம் பிழைத்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் வெளியே போய் வேலை செய்தாக வேண்டும். மனித உடல் 40 பாகை செல்சியஸ் வரை இயல்பாக இயங்கும். வெப்பநிலை அதற்கு மேலே போனால் உடலில் வெப்ப மயக்கம் (heat stroke) ஏற்படும். இந்தியாவில் பல இடங்களில் 2024 மார்ச்சில் கோடை வெப்பநிலை 40 பாகையைக் கடந்தாயிற்று. இந்த ஆண்டு கோடை குறைந்தபட்சம் ஜூன் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போல இவ்வாண்டும் இரண்டாவது கோடை வருகிற அபாயம் உண்டு. மக்கள் என்ன செய்வார்கள்?
- ‘குடிமக்களுக்கு காலநிலைப் பிறழ்விலிருந்து பாதுகாப்பளிக்க வேண்டும்; அது அவர்களின் அடிப்படை உரிமை’ என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தூய்மையான சுற்றுச்சூழல் குடிகளின் அடிப்படை உரிமை என்கிற நிலையில் காலநிலை மாற்றத்தை அடிப்படை உரிமையுடன் இணைத்து அணுக வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 06 – 2024)