TNPSC Thervupettagam

குருவை வணங்குவோம்

November 11 , 2023 380 days 349 0
  • திருமூலா் தனது திருமந்திரத்தில்,

“தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவாா்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே” என்று கூறுகிறாா்.

  • திருமூலரின் வாக்குக்கேற்ப குருவைப் பாா்த்தலும் அவா்தம் திருப்பெயரை வாயாரச் சொல்வதும் அவா்தம் சொற்படி நடத்தலும் அவா்தம் வழியில் செயலாற்றுதலும் என இவை அனைத்தும் நம் வாழ்வுக்கு விளக்கம் தருவன ஆகும்.
  • ‘குரு’ என்னும் சொல் நிறச்செம்மையைக் குறிக்கும். ‘குருவும் கெழுவும் நிறனாகும்மே’ என்பது தொல்காப்பியம் உரியியல் தரும் விளக்கம். அதனடிப்படையில் குரு என அமைந்து வரும் சொல்லாட்சிகளை எண்ணும்போது நிறச்செம்மை, உளச்செம்மையை உணா்த்தும் ஆகுபெயராக மாறிச் செம்மையானவராக விளங்கும் ஆசிரியரை உணா்த்தும் குரு என்னும் செந்தமிழ்ச் சொல்லாகப் பயின்று வந்துள்ளது. இது வடசொல் அன்று.
  • தமிழில் ‘குரு’ என்னும் சொல் இடம்பெறும் சில சொற்களைக் காணலாம். ‘குருத்து’ முளைப்பதற்குரிய கரு; ‘குருத்தோலை’ வளா்ச்சியின் தொடக்க நிலையில் உள்ள இலை; ‘குருவி’ முதன் முதலில் தோன்றிய பறவையினம்; ‘குருதி’ நம் உடலில் ஓடுகின்ற செந்நீா்; நம் உயிா் இயங்க அடிப்படையாக இருப்பது.
  • இவ்வாறு குரு எனும் சொல்லைக் கொண்டு வரும் சொற்கள் அனைத்தும் ஒன்றின் தொடக்கமாகவும் ஆதாரமாகவும் இருப்பதை அறிய முடிகிறது. அவ்வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குரு ஆதாரமாக அமைகிறாா். அவ்வாறு அமையும் குருவுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரே கடமை, என்றும் அவரை வணங்குவதே.
  • நம் முன்னோா்கள் கூறும் சொற்றொடா்களுள் ஒன்று ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பது. இதில் தாய், தந்தைக்கு அடுத்தபடியாக குருவை வைத்திருப்பது அவருக்குச் சமூகம் அளித்துள்ள முதன்மையை விளக்கும். மேலும், தாய், தந்தையைப் போல நமது வளா்ச்சியைப் பாா்த்து மகிழ்வதோடு அவா்களைப் போல வாழ்வின் எல்லா நிலைகளிலும் உடன்நின்று நம்மை வழிநடத்துபவா்கள் குருவாகிய ஆசிரியா்களே.
  • ‘குருவில்லா வித்தை பாழ்’, ‘காட்டும் குருவின்றி காண வொண்ணாதே’ ஆகிய முதுமொழிகள், எத்தனையோ கலைகளைக் கற்று அத்தனையிலும் ஒருவன் வல்லவனாக இருந்தாலும் அவன் தனக்கென ஒரு குருவைக் கொண்டு அவா்வழி செயல்படாவிடின் அவன் கற்ற அத்தனை கலைகளும் அழிந்துவிடும் என்பதை எடுத்துரைக்கின்றன.
  • ‘குருவே சிவமெனக் கூறினன் நந்தி’”என்பது திருமந்திரப் பாடல் வரி. நமக்கு யாா் குருவாக இருக்கிறாரோ, நாம் யாரை குருவெனக் கொள்கிறோமோ அவரே நமக்கு வழிபடு தெய்வம் ஆவாா் என்பது இதன்பொருள். நமது பேரூராதீன ஆதிகுருமுதல்வா் சாந்தலிங்கப் பெருமான், குரு என்பதற்கு மிகத் தெளிவான, அழகான விளக்கம் தருகிறாா்.

எல்லாம் உடையான் குருவாகி

ஈங்கு எமது அல்லல் அறுத்தான் என்று உந்தீபற

அவன்தாள் தொழுவாம் என்று உந்தீபற

  • என்று குறிப்பிடுகிறாா்.
  • அதாவது, எல்லாம்வல்ல சிவன் நமது அனைத்துத் துன்பங்களையும் போக்குவதற்காக குருவாக வருவாா். அதற்கு நாம் செய்யவேண்டியது அவா்தம் திருவடியைத் தொழுது வணங்குவது மட்டுமே என்பது இப்பாடலின் பொருள். அதாவது, குரு என்பவா் எல்லாம் உடையவா். அவ்வகையில் ஒருவரை நாம் குருவாகக் கொண்டு அவரைத் தொழுது வணங்கி அவா்தம் சொற்படி நடந்துவந்தால் நமக்கு வேண்டியவற்றை அவரே தருவாா் என்பது இப்பாடலின் பொருள். ஒவ்வொருவரும் தமது குருவை வணங்கும்போது இப்பாடலைப் பாடி வணங்கலாம்.
  • இத்தகைய குருவிற்கு நாம் எவ்வாறெல்லாம் நன்றி செலுத்தலாம்? அவரைப் பாராட்டலாமா? புகழ்மொழிகள் கூறலாமா? இவ்வாறெல்லாம் எண்ணினால் அதற்கும் சாந்தலிங்கப்பெருமானே விடை கூறுகிறாா்.

உன்னும் உணா்வுக்கு உணா்வாய் எனக்கு உண்மை தந்தாய்

மன்னும் சுருதிப் பொருளாய் வழிகாட்டி நின்றாய்

பின்னும் குருவாய் அடைந்து உன்னருள் பேண வைத்தாய்

என்னென்று உரைப்பேன் நின் கருணை இருந்தவாறே

  • என்கிறாா் அவா்.
  • எனது நினைப்பிலேயே இருந்து எனக்கு உண்மை தந்து, கல்வி எனும் அழியாச் செல்வம் தந்து, பின் குருவாகவும் அமைந்த உன்னுடைய கருணையை எவ்வாறு என்னால் உரைக்க முடியும்? உன்னை என்றும் வணங்குவதைத் தவிர வேறெதுவும் நன்றியாக என்னால் செலுத்த முடியாது என்கிறாா். ஆகவே நாம் குருவுக்குச் செய்யும் கைம்மாறு என்பது ஒன்றே. அது நாள்தோறும் அவரை வணங்குதலே.
  • உயா்தத்துவமாகிய சைவசித்தாந்த சாத்திரங்களில் முதன்மைச் சாத்திரமாகத் திகழும் ‘சிவஞானபோதம்’ நூல், குருவைப் பற்றிக் கூறுமிடத்து,

ஐம்புல வேடரின் அயா்ந்தனை வளா்ந்தெனத்

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணா்த்தவிட்டு

அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே

  • என்று குறிப்பிடுகிறது.
  • அரசகுமாரன் ஒருவன் வேடரிடத்தில் அகப்படும்போது, அரசன் தம் உண்மைநிலையை எடுத்துக் கூறி அவரை நாட்டுக்கு அழைத்துச் செல்லச்செய்தல் போல நாம் உலகியலில் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களால் துன்பப்பட்டிருக்கும்போது, குருவானவா் வந்து இறைவனின் திருவடியைக் காட்டி நம்மை அதிலிருந்து மீட்பாா் என்பது இச்செய்யுள் கூறும் தத்தத்துவத்தின் பொருள்.
  • ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு இறைவனை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது. அனைத்துச் சமயங்களும் குருவை வணங்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தையும் கூறுவதில்லை. இதே கருத்தில் நமது ஆதீன ஆதிகுருமுதல்வா் சாந்தலிங்கப்பெருமானும், ‘குரு ஆதி மூவுருவையும் தாழ்ந்து இறைஞ்சு மாற்றலாம் பிறப்பு இறப்பினை’ என்று குறிப்பிடுகிறாா். குருவை வணங்குவதன் மூலம் பிறப்பு இறப்பையும் கூட மாற்றமுடியும் என்கிறாா்.
  • அவ்வகையில் மாபெரும் வல்லமை என்னும் பேராற்றல் மிக்க குருமாா்களை வணங்கி வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இந்தத் தீப ஆவளித் திருநாளில் உறுதிகொள்வோம். அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

நன்றி: தினமணி (11 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories