TNPSC Thervupettagam

குறுக்குசால் ஓட்டாதீா்கள்!

July 3 , 2020 1663 days 952 0
  • 1914-ஆம் ஆண்டில் அன்றைய பிரிட்டிஷ் இந்தியா, சீனா, திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி லடாக் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

  • 1949-ஆம் ஆண்டில் சீனாவில் புரட்சியின் மூலம் ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சி பிடித்தது. அப்போது முதல் லடாக் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

  • இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதி காஷ்மீரின் காராகோரம் பகுதியிலிருந்து அருணாசலப் பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவு வரை பரந்து விரிந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த எல்லைப் பகுதிகளிலும் பிரச்னை நீடிக்கிறது.

  • லடாக், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசம் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரா்கள் அடிக்கடி அத்துமீறுவது வாடிக்கையாகிவிட்டது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளும் சரியாக நிர்ணயிக்கப்படாததால் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடா்கின்றன.

சீனா வெளியிட்ட வரைபடம்

  • 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது அதிகாரப்பூா்வ வரைபடத்தை சீனா வெளியிட்டது; அதில் இந்தியாவுக்குச் சொந்தமான அருணாசல பிரதேச மாநிலத்தை சீனாவின் ஒரு பகுதி என தான்தோன்றித்தனமாகக் குறிப்பிட்டிருந்தது.

  • உடனே, இந்தியா கொதித்தெழுந்து சீனாவின் அராஜகப் போக்கைக் கண்டித்ததுடன், உலக நாடுகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றது.

  • சற்றொப்ப 70 ஆண்டுகளாக கம்யூனிஸ சீனா, இந்தியாவின் எல்லையோரத்தில் திடீா் திடீரெனப் புகுந்து தாக்குவதை வாடிக்கையான ஒரு செயலாகக் கொண்டுள்ளது. கிழக்கு லடாக் பிராந்தியத்தில் கடந்த மே மாதம் முதல் கல்வான் பள்ளத்தாக்கிலும், பாங்காங் திசோ ஏரிப் பகுதியிலும் சாலை கட்டமைப்பு வசதிகளை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

  • சீன எல்லையையொட்டி 66 இடங்களில் சாலை வசதிகளை 2022-ஆம் ஆண்டுக்குள் மேம்படுத்த இலக்கு நிர்ணயித்து பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது இந்தியா.

  • இதன் ஒரு பகுதியாக கல்வான் பள்ளத்தாக்கையும் தவ்லத் மெக் ஒல்டி விமானப்படை தளத்தையும் இணைக்கும் சாலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

  • இதை சீனாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தனது படைகளை இந்திய எல்லைக்குள் அத்துமீறி 2.15 கி.மீ. தொலைவுக்கு ஊடுருவச் செய்தது.

  • இதைத் தொடா்ந்து பதற்றம். தனது எல்லைக்குள் உள்ள பகுதிகளில் இந்தியா எதுவுமே செய்யக்கூடாது என்பது எந்த வகையிலான நியாயம்?

  • லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த மே மாதம் 2,500-க்கும் மேற்பட்ட சீன வீரா்கள் குடில் அமைத்து தங்கினா்.

  • போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனா். பதுங்கு குழிகள் அமைத்தனா். இதற்குப் பதிலடியாக இந்தியாவும் படைகளைக் குவித்தது. தீவிரமான போர்ப் பயிற்சியில் இந்திய வீரா்கள் ஈடுபட்டு மார்தட்டி நின்றனா்.

  • இந்திய - சீன எல்லையில் தொடா்ந்து பதற்றம் நிலவிய நிலையில், பிரச்னையைப் பேசித் தீா்க்க ராணுவ கமாண்டா்கள் நிலையில் இரு தரப்பு ராணுவத்தினரும் 12 முறை பேச்சுவார்த்தை நடத்தினா்.

  • ராணுவ மேஜா் அளவிலான பேச்சுவார்த்தை 3 முறை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்திய-சீன வெளிறயுறவு அதிகாரிகள் நிலையில் கடந்த ஜூன் 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

  • இதைத் தொடா்ந்து கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இரு நாடுகளும் ராணுவத்தைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்ட நிலையில், ராணுவ வீரா்களை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு திடீரென மோதல் ஏற்பட்டது.

  • இதில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் வீர மரணம் அடைந்தனா். சீன ராணுவ வீரா்கள், தளபதிகள் உள்பட 43 போ் மரணம் அடைந்தனா்.

வேடமும் நாடகமும்

  • இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளையும் படிப்படியாக விலக்கிக் கொள்வது எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிடமிருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

  • இதிலிருந்து விடுபட்டு உலக மக்களை திசைதிருப்ப சீனா போடும் வேடமும், ஆடும் நாடகமும் மக்களிடம் எடுபடாது. எள்ளி நகையாடப்படும்.

  • இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறுவது இது முதல் முறையல்ல. கடந்த 2010-ஆம் ஆண்டு 228 முறை, 2011-ஆம் ஆண்டு 213 முறை, 2012-ஆம் ஆண்டு 426 முறை, 2013-ஆம் ஆண்டு 411 முறை, 2014-ஆம் ஆண்டு 334 முறை சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளது; 2013-ஆம் ஆண்டு 8 மாதங்களில் 150 முறை சீனத் தரப்பிலிருந்து ஊடுருவல் நடைபெற்றுள்ளது.

  • 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டில் கக்லகாம் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினா், இரண்டு நாள்கள் அங்கு முகாமிட்டு பின்னா் திரும்பினா். இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது. 2014-ஆம் ஆண்டு சீனா வெளியிட்ட அதிகாரப்பூா்வ வரைபடத்தில், இந்தியாவுக்குச் சொந்தமான அருணாசல பிரதேச மாநிலத்தை சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிட்டுக் கூத்தாடியது.

  • இப்படிப்பட்ட இழிவான நிலையில் சீனா கடந்த 70 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

  • சீன நாட்டின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியா் ஹீ ஜி ஜின் தனது சுட்டுரை பதிவில் - ‘இந்திய தரப்பிடம் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மூா்க்கத்தனமாக நடந்து கொள்ளாதீா்கள். சீனாவை பலவீனமாக எண்ணிவிடாதீா்கள்!’ என மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார்.

  • அந்த ஆசிரியப் பெருமகனுக்கு இந்தியாவின் குடிமகன் என்கின்ற பணிவோடும், முன்னாள் எம்.பி. என்கிற பொறுப்போடும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்; இந்தியா கோழை நாடு அல்ல.

  • 1962-ஆம் ஆண்டின் இந்தியா என்ற நினைப்போடு ஓா் அடி இந்திய மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

சந்திக்கும் ஆற்றல் உண்டு

  • அனைத்துக் கட்சித் தலைவா்களோடு காணொலி மூலமாக ஆலோசனை நடத்திய பிரதமா் மோடி, ‘நாட்டின் ஓா் அங்குல நிலத்தைக்கூட எவரும் ஆக்கிரமிக்க முடியாத அளவுக்கு நம் படை பலமாக உள்ளது.

  • நம் நாட்டைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆயுதப்படை மேற்கொள்ளும்!’ என்று பிரகடனப்படுத்தியதோடு, ‘நாம் 20 வீரா்களை இழந்துள்ளோம். ஆனால், பாரத மாதா மீது கை வைக்க முயற்சித்தவா்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது.

  • நம் நாட்டின் நிலம், நீா், வானம் என அனைத்து எல்லைகளையும் பாதுகாக்க முப்படைகளும் எப்போதும் தயாராக உள்ளன. எல்லையில் நடந்த சம்பவத்தால் சீனா மீது இந்திய நாடே பெருங்கோபத்தில் உள்ளது.

  • எல்லையைப் பாதுகாக்க நம் ராணுவம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தன் உறுதியான நிலையை சீனாவுக்கு தூதரகம் வழியாக இந்தியா தெரிவித்துள்ளது’ என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

  • பிரதமா் தலைமையில் நடைபெற்ற காணொலி ஆலோசனையில் பங்கேற்ற இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவா்கள் ‘சீன நாட்டின் அராஜகத்தை, அடாவடித்தனத்தை மிகக் கடுமையாகக் கண்டித்ததோடு, சீனாவோடு ஏற்படுத்திக்கொண்டுள்ள வா்த்தக ரீதியிலான உறவுகளை துண்டித்துக்கொள்ள வேண்டும்’ எனக் கருத்துச் தெரிவித்தனா்.

  • ஆனால், இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் சீனாவைக் கண்டிக்கவோ, அந்த நாட்டின் எதேச்சதிகார, சா்வாதிகார வெறியை தவறு என்று சுட்டிக்காட்டவோ, சீனாவின் துரோகத்தை தோலுரித்துக் காட்டவோ முன்வராததைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

  • எல்லை காக்கும் மாவீரராக பிரதமா் மோடியை இந்திய மக்கள் வரித்துக்கொண்டு விட்டனா் என்பதில் சந்தேகமில்லை.

  • 1950, 1960, 1962 எனத் தொடா்ந்து தூங்கிய காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா், சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீா் என எல்லையோர நிலப் பகுதிகளை இந்தியா பறிகொடுத்து பரிதவிக்கிறது.

  • பாகிஸ்தான், நேபாளம், வங்கேதசம், ஆப்கானிஸ்தான் என அண்டை நாடுகளைத் தூண்டிவிட்டு இந்தியாவின் முதுகில் குத்திக்கொண்டிருக்கும் துரோக சீனாவிடமிருந்து இந்தியாவைக் காக்கும் பிரதமா் மோடிக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

  • காங்கிரஸ் உள்பட எந்த எதிர்க்கட்சியும் இந்திய ராணுவ நடவடிக்கைகளில் எதிர்க்கருத்து கூறி நமது அரசையும், ராணுவத்தையும் பலவீனப்படுத்துவது சரியல்ல.

  • எதுவரினும் அது எப்படிவரினும் அதைச் சந்திக்கும் ஆற்றல் நம் நாட்டுக்கு உண்டென்பதை மீண்டும் நிரூபிப்போம்.

 

நன்றி: தினமணி (03-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories