TNPSC Thervupettagam

குறைகிறது விளிம்புநிலை விவசாயிகளின் வருமானம்

July 7 , 2024 6 hrs 0 min 26 0
  • வாழ்வாதாரத்துக்கு இனியும் விவசாய வருமானத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற நிலைக்கு, விளிம்புநிலை விவசாயிகள் அனைவரும் வந்துவிட்டது செய்தித்தாள்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை. நீட் தேர்வு, விமான நிலைய மேற்கூரை சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்கும் அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. ‘சமத்துவ வளர்ச்சிக்கான தொழில்முனைவு அரங்கம்’ (FEED) அமைப்பு தயாரித்த ‘இந்திய விளிம்புநிலை விவசாயிகளின் நிலை-2024’ என்ற சமீபத்திய அறிக்கை அனைவராலும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணம்.

ஆவணத்தின் கருப்பொருள்

  • இந்த ஆண்டு ஆவணத்தின் கருப்பொருள், ‘பருவநிலை மாறுதல்களால் விவசாயிகளின் வாழ்க்கையிலும் வருவாயிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன?’ என்பது; ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பளவுள்ள (சுமார் இரண்டரை ஏக்கர்) நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகள் அல்லது குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யும் குடிவாரதாரர்கள் அல்லது ஊதியத்துக்குப் பாடுபடும் விவசாயிகள் ஆகியோரின் நிலை ஆராயப்பட்டது. இவர்களைத்தான் ‘விளிம்புநிலை’ (Marginal) விவசாயிகள் என்று அரசு வரையறுத்துள்ளது. வேளாண் துறை புள்ளிவிவர கணக்கெடுப்புப்படி 2015 - 2016இல் நம் நாட்டு விவசாயிகளில் 65.4%க்கும் மேற்பட்டோர் விளிம்புநிலை விவசாயிகளே.
  • ஒரு ஹெக்டேர் முதல் இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் ‘சிறு விவசாயிகள்’. இவ்விருவரும் சேர்ந்து மொத்த எண்ணிக்கை 89.4%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகிக்கொண்டேவருகிறது. ‘பிரதமர் – கிஸான் சம்மான் நிதி’ உதவிபெறும் விவசாயிகளின் எண்ணிக்கையோ 2022இல் 10.47 கோடி என்று உச்சத்தில் இருந்தது இப்போது 9.26 கோடியாக இறங்கிவிட்டது. குடும்பங்களில் பாகப்பிரிவினை காரணமாக விவசாய நிலங்கள் துண்டுதுண்டாக பிரிவதுதான் அதிகம் என்ற நிலையில், இப்படிப் பயனாளிகள் எண்ணிக்கை குறைவது எதிர்மறையாக இருக்கிறதே என்று நினைக்கலாம், அரசிடம் உதவிபெற்ற விவசாயிகளின் வேறு வருவாய் ஆதாரம் பற்றிய தகவல்களால், பலர் அந்த உதவிபெறும் தகுதியை இழந்திருப்பார்கள், மிகச் சிலர், வேறு தொழில் அல்லது வேறு வகையில் வருமானத்தை அதிகப்படுத்திக்கொண்டும் இருக்கலாம்.
  • இந்த உதவித்தொகை அற்பமாக இருக்கிறது என்று கருதி சிலர் அதைப் பெறுவதில் ஆர்வமில்லாமலும் விலகியிருக்கலாம். ஆனால், ஆய்வறிக்கை தொடர்புகொண்ட விளிம்புநிலை விவசாயிகளில் 86% பேர், பிரதமரின் கிஸான் நிதி உதவித் திட்டம் மூலம் நேரடியாகவே பணப் பயனைப் பெற்று வருவதாக உறுதி செய்தது நேர்மறையான தகவலாக இருந்தது. அதேசமயம், இந்த விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து விவசாயக் கடன், வேளாண் விரிவாக்க திட்டங்களின் பலன், பயிர் காப்பீடு, மண்வளச் சான்றிதழ் அட்டைகள் ஆகியவை கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை என்பதும் தெரியவருகிறது.
  • விவசாயத்துக்கான நிலத்தின் அளவை நம்மால் இனி அதிகரிக்கச் செய்ய முடியாது. ஆனால், அதில் செலுத்தக்கூடிய மூலதனம், உழைப்பு, சாகுபடித் தொழில்நுட்பம் ஆகியவற்றை அதிகப்படுத்த முடியும் என்று இந்த ஆவணத்தைத் தயாரித்தவர்களும் இது தொடர்பான விவாதங்களிலும் ஆலோசனைகளிலும் பங்கேற்றவர்களும் சுட்டிக்காட்டினர். அதற்கு அரசின் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில் கொள்கைகள் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
  • விளிம்புநிலை விவசாயிகள் சமுதாயத்தில் தனியொரு சமூகமாக இருக்கின்றனர் விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீர், விதைகள், சாகுபடிக்கான இடுபொருள்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், கடன் ஆகியவற்றைப் பெறுவதில் இடர்ப்பாடுகளைச் சந்திக்கின்றனர்.

துயரப்படும் பிரிவினர்

  • விளிம்புநிலை விவசாயிகள் எப்போதும் துயர நிலையிலேயே வாழ்கின்றனர். சந்தைகள் முக்கியம், அதைப் பயன்படுத்துவது அவசியம். ஆனால், விளிம்புநிலை விவசாயிகளின் சாகுபடியானது அந்தக் கால ‘சம்சாரிகளின் சாகுபடி’ நிலையைப் போலவே இருக்கிறது, அதாவது குடும்பத் தேவைக்குப் போதுமான அளவே விளைச்சலாகக் கிடைக்கிறது. எனவே, சந்தையில் விற்பதற்கு உபரி ஏதும் இருப்பதில்லை. இப்போது தீவிரமாகிவரும் பருவநிலை மாறுதலும் அவர்களுடைய வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக்கொண்டிருக்கிறது.
  • இதனால் ஆண்டுதோறும், கூடுதல் வருவாய் தேவைப்படும் விளிம்புநிலை விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டேவருகிறது. பருவமழைக் காலம் தொடங்க தாமதம் ஆவதாலும், குளிர்காலமும் தாமதமாகவும் மிகவும் மிதமாகவும் தொடங்குவதாலும் விவசாயப் பணிகளும் உற்பத்தியும் பாதிப்படைகின்றன. 2023 காரிஃப் பருவத்தில் சாகுபடி செய்த விளிம்புநிலை விவசாயிகளில் சரி பாதிப்பேருக்கு நெல் – பருத்தி சாகுபடியில் இழப்புதான் ஏற்பட்டது, ராபி பருவத்தில் கோதுமை – உருளை சாகுபடி செய்தவர்களில் 45% பேருக்கு இழப்பு ஏற்பட்டது.
  • இதன் விளைவாக விளிம்புநிலை விவசாயிகள் அனைவருமே பிற வகை வருவாய் ஆதாரங்களையே பெரிதும் நாட நேரிட்டது. கால்நடை வளர்ப்பு, பால் விற்பனை, முட்டை – இறைச்சி விற்பனை, அல்லது வேலை தேடி பிற ஊர்களுக்குச் செல்வது என்று வருமான இழப்பை ஈடுகட்ட கூடுதலாக உழைக்க நேர்ந்தது. பருவநிலை மாறுதல்களால்தான் இப்படி நேர்கிறதா, அல்லது பொதுவாகவே விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் குறைந்துகொண்டிருக்கிறதா என்ற ஆராய்ச்சி முக்கியமல்ல, வருவாய் குறைவதற்கேற்ப மாற்றுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

சிஆர்ஏ உத்தி 

  • பருவநிலை மாறுதல்களையும் தாக்குப்பிடிக்கும் உத்தி (Climate Resistant Agriculture – CRA) விளிம்புநிலை விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றால் வேளாண் விரிவாக்க திட்டங்கள் உண்மையிலேயே மேலும் விரிவாக்கப்பட வேண்டும், தொழில்நுட்ப வகையிலான இடுபொருள்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும், இதுதான் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு உண்மையிலேயே சவாலான வேலை. பருவநிலை மாறுதலுக்கேற்ப விதைப்பு, அறுவடைக் காலங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது, இதைத் திட்டமிட்டு செய்வதைவிட, இயல்பாகவே செய்துவிடுகின்றனர்.
  • விதைகள், நுண்ணூட்டச் சத்து, பூச்சிக்கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை கிராம அளவில் விநியோகிப்பவர்களே பருவநிலை மாறுதலுக்கேற்ப என்ன செய்ய வேண்டும் என்கிற ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். ஆனால், விளைபொருள்களை வாடகைக்குத் தரும் மையங்கள், கிடங்குகள், பழங்கள் – காய்கறிகள் – மலர்கள் போன்றவற்றை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட வசதியுள்ள கிடங்குகள் ஆகியவை விளிம்புநிலை விவசாயிகளுக்குக் கிடைக்க அரசு பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

2 திட்டங்கள் இணைப்பு

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் – பருவநிலை மாறுதல்களை தாக்குப்பிடிக்கும் உத்தி (சிஆர்ஏ) ஆகிய இரண்டையும் ஒடிஷா, மஹாராஷ்டிரம், பிஹார் ஆகியவை இணைத்துச் செயல்படுத்தி, நல்ல பலன்களையும் காட்டியுள்ளன. விவசாயத்துறையும் ஊரக வளர்ச்சித் துறையும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன. ஒன்றிய அரசில் இப்போது இவ்விரு துறைகளுக்கும் ஒரே அமைச்சராக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பதவி வகிக்கிறார்.
  • கடந்த பத்தாண்டுகளில் அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் நாட்டிலேயே அதிகபட்ச விவசாய உற்பத்தி 7.3% மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டது. விவசாய சாகுபடியை அதிகரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் கடைப்பிடிக்கும் உத்திகளையும் திட்டங்களையும் அந்தந்த மாநில வேளாண் அமைச்சர்களிடமிருந்து கேட்டு, நாடு முழுவதற்கும் தகவல்களைப் பகிர்ந்து அமல்படுத்த முடிவுசெய்திருக்கிறார் சௌஹான். அப்படியொரு வேளாண் கொள்கை ஏற்பட்டால் அது நன்மைகளையே தரும்.

ஒடிஷா ‘காளியா’

  • இந்த வகையில் ஒடிஷா மாநிலத்தில், ‘காளியா’ (Krushak Assistance for Livelihood and Income Augmentation) என்ற திட்டம் அமலாகிறது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதுடன் கூடுதல் வருவாய்க்கும் வழிசெய்கிறது. இது விளிம்புநிலை விவசாயிகளுக்கு மட்டுமல்ல - குடிவாரதாரர்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் உதவுகிறது. இதன்படி மாநிலத்தில் ஒரு சிறிய நிலத்துண்டுகூட சாகுபடியில்லாமல் தரிசாக போடப்படுவதில்லை.
  • மத்திய பிரதேச மாநிலத்தில் அமல் செய்த ‘பவந்தர் புக்டன் யோஜனா’ என்ற திட்டமும் நிச்சயம் பலன் தரும். இது அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கொள்முதல் விலையைவிட, குறைவான விலைக்கு சந்தையில் விற்க நேர்ந்தால், அந்த இழப்பை (விலை வேறுபாட்டை) மாநில அரசே விவசாயிக்கு வழங்கிவிடும். இந்தத் திட்ட அமலின் அனைத்துப் பரிமாணமும் சௌஹானுக்குத் தெரியும் என்பதால் நாடு முழுவதற்கும் இதை அமல்படுத்துவதற்கு வழியேற்படும்.

அரசு – சமூகம் - சந்தை

  • விளிம்புநிலை விவசாயிகளின் வருமானம் உயர நாம் அரசை மட்டுமே நம்பியிருக்கப் போகிறோமா அல்லது வேளாண் விளைபொருள் சந்தை, மக்கள் அமைப்புகளுக்கும் இதில் பங்கு இருக்கிறதா? அனைத்து தரப்பும் இணைந்து செயல்பட்டால்தான் விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதே உண்மை. இந்தக் கோணத்தில் வேளாண் துறை செயல்படுத்திவரும் 27 திட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் மக்கள், குறிப்பாக விவசாயிகளின் கூட்டுறவு அமைப்புகளும் இணைந்து கோரிக்கைகளை முன்வைத்தால்தான் சந்தைகளில் அவர்களுக்கு விற்பனைக்குரிய வாய்ப்புகள் பெருகும், பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கும்.
  • சந்தையும் முக்கியம் என்று பார்த்தோம், ஐடிசி, ஐபிஐஎஸ்ஏ, தான் அறக்கட்டளை, டாடா அறக்கட்டளை ஆகியவை இதில் முன்முயற்சி எடுத்துள்ளன. பருவநிலையை அடிப்படையாகக்கொண்டு பயிர்களுக்குக் காப்பீடு செய்யப்படுகிறது, வேளாண் சேவைகள் வழங்கப்படுகின்றன, விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப சேவைகளை அளிக்கும் மையங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன.
  • அரசு, மக்கள், சந்தை ஆகிய முத்தரப்பும் இணைந்து செயல்பட்டால்தான் விவசாயிகளின் வருமானமும் சந்தை வாய்ப்புகளும் பெருகும் என்ற புரிதல் அதிகரித்துவருகிறது. இந்த முத்தரப்பு உருவாவது ஒன்றுக்கொன்று உதவுவதற்காக, ஒன்றுக்கொன்று போட்டி போடுவதற்காக அல்ல. இதில் எல்லாம் விவசாய சங்கங்கள்தான் முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால், விவசாய சங்கங்கள் அரசியல் சார்பு காரணமாக அரசுடன் மோதல் போக்கையே அதிகம் கைக்கொள்கின்றன.
  • விவசாய சங்கங்களுடன் இணைந்து செயல்பட ஃபீட் அமைப்பு தயார், ஆனால் விவசாயிகளின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட அரசியல் நோக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் விவசாய சங்கங்களின் தலைமை, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்வருவதில்லை.
  • விவசாயிகளின் வருமானம், சந்தைப்படுத்தலுக்குப் பல பிரச்சினைகள் சவாலாக இருக்கின்றன. வேளாண் வர்த்தகத்தில் அனைத்து தரப்பும் ஒரே மாதிரியான வலிமை உள்ளவை அல்ல, வேளாண் நடவடிக்கைகள் எளிமையானவை அல்ல, நில உடைமை ஆவணங்களையும் வேளாண் கடன் தேவைகள் தொடர்பான தரவுகளையும் பெறுவதும் எளிதல்ல. இந்தப் பிரச்சினைகள் விவசாயிகள் அனைவருக்கும் பொதுவானவை. இந்தியா வளர்ந்த நாடாக உருவாக விளிம்புநிலை விவசாயிகள், கட்டுப்படியாகக்கூடிய விதத்தில் தொழில் முனைவோர்களாக மாறுவதும் அவசியம்.

நன்றி: அருஞ்சொல் (07 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories