TNPSC Thervupettagam

குறைந்து வரும் நிலத்தடி நீர்: கூடுதல் கவனம் அவசியம்

January 23 , 2024 218 days 326 0
  • தமிழ்நாட்டில், 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்குத் தென்மேற்கு-வடகிழக்குப் பருவமழை முக்கியப் பங்களிக்கிறது. நான்கு பருவங்களிலும் பரவலான மழைப்பொழிவு இருந்தாலும், சராசரி அளவைவிட மழைப்பொழிவு குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
  • 2022 டிசம்பரைவிட 2023 டிசம்பரில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக இறங்கியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில், 3.72 மீட்டரில் இருந்து 6.32 மீட்டராக நீர்மட்டம் இறங்கியுள்ளது. மேலும், கோயம்புத்தூர் (7.45 மீ. / 9.84 மீ.), திருப்பூர் (4.69 மீ. / 7 மீ.), நாமக்கல் (3.46 மீ. / 5.56 மீ.), சேலம் (2.86 மீ. / 4.63 மீ.), திருச்சி (3.32 மீ. / 5.06 மீ.), பெரம்பலுார் (3.32 மீ. / 5.04 மீ.) ஆகிய மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக இறங்கியுள்ளது. மறுபுறம் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்துள்ளது.
  • 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, 244.92 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சி, அதிகளவு நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது; இது அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பயன்பாட்டைவிட அதிகமாகும். இந்தியாவில் விவசாயம் தொடங்கி தொழிற்சாலை வரை பல்வேறு பயன்பாடுகளுக்கு நிலத்தடி நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், இதே வேகத்தில் அதன் பயன்பாடு தொடர்ந்தால், 2080ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர்மட்டம் தற்போதைய அளவைவிட மூன்று மடங்கு குறைந்துவிடும் என அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழக ஆய்விதழானசயின்ஸ் அட்வான்சஸ்எச்சரித்துள்ளது.
  • நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவரும் அதே வேளையில், நிலத்தடி நீர் மாசுபாடோ பிரச்சினையின் தீவிரத்தைக் கூட்டுகிறது. இந்தியாவில், 25 மாநிலங்களின் 230 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ஆர்சனிக்; 27 மாநிலங்களின் 469 மாவட்டங்களில் ஃபுளூரைடு ஆகியவை கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய நீர் சக்தித் துறை இணையமைச்சர் விஸ்வேஸ்வர் டுடு டிசம்பர் 4 அன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
  • தமிழ்நாட்டில், நிலத்தடி நீர்வளத்தைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும்தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு-மேலாண்மை) சட்டத்தைத் தமிழ்நாடு அரசு 2003இல் இயற்றியது; இச்சட்டம் 2013இல் நீக்கப்பட்டது. பல்வேறு சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் நிலத்தடி-மேற்பரப்பு நீர்வளத்தை ஒழுங்குபடுத்தவும், மேலாண்மை செய்யவும், நீரை மறுமுறை பயன்படுத்தவும் ஓர் ஆணையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநிலத் திட்டக் குழுவின் மூலம் தமிழ்நாடு நீர்வள (ஒழுங்குமுறை-மேலாண்மை) ஆணையச் சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் 2023 மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது. அது விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும்.
  • இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடியை எட்டியிருக்கும் நிலையில், வாழ்க்கையின் ஆதாரமான நீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களில் ஒவ்வொரு இந்தியரின் தேவையையும் உறுதிசெய்வதில் மத்திய-மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories