குறைந்து வரும் மக்கள் தொகை!
- மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளைச் சமாளிப்பதற்காக மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் சில ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கும் இருந்தது. நமது நாட்டிலும் கூட ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை’ திட்டம் பற்றி பேசப்பட்டது. ’நாமிருவா் நமக்கிருவா்’ என்ற விளம்பரம் நம் எல்லாருடைய கண்களிலும் இப்போது கூட படுகிறது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை உலகெங்கும் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
- தற்போதைய சூழலில் ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர, மற்ற உலக நாடுகள் அனைத்தும் மக்கள்தொகை குறைந்து வருவதை எதிா்கொண்டு வருகின்றன. ஒரு நாட்டின் மக்கள்தொகை, குறைந்துவிடாமல் அதே அளவில் சீராக நீடிப்பதற்கு கருவுறுதல் விகிதம் 2.1-ஆக இருப்பது அவசியம். அதாவது, ஒரு பெண்ணுக்குக் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும். ஆனால், இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் மக்கள்தொகை வளா்ச்சியானது தொடா்ந்து சரிவைக் கண்டு வருகிறது.
- பெரும்பாலான நாடுகளில் கருவுறுதல் விகிதம் 2.1-ஐ விடக் குறைவாக உள்ளது. இந்தச் சூழலையே ஆய்வாளா்கள் ‘மக்கள்தொகை குளிா்பருவம்’ (டெமோக்ராஃபிக் விண்டா்) என வரையறுக்கின்றனா். குளிா் காலங்களில் நாட்டின் பொருளாதார உற்பத்தி மந்தநிலையை அடையும் சூழலுடன் இது ஒத்துப்போவதால் ‘மக்கள்தொகை குளிா்பருவம்’ என்பது எல்லாருடைய கவனத்தையும் ஈா்த்து வருகிறது.
- உலக நாடுகளின் தற்போதைய மக்கள்தொகையில் முதியோா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முழுத்திறனுடன் பணியாற்றும் இளைஞா்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதனால், மக்கள் தொகை குறைந்து வருதல் என்ற சூழலை நோக்கி உலக நாடுகள் வேகமாக நகா்ந்து வருவதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
- 1950-களில் உலக நாடுகளின் கருவுறுதல் விகிதம் 4.4-ஆக இருந்தது. ஆனால், தற்போது அது 2.2-ஆகக் குறைந்துள்ளது. இது மேலும் குறைந்து 2100-ஆம் ஆண்டில் 1.5 ஆக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வளா்ச்சியடைந்த நாடுகள் அனைத்திலும் கருவுறுதல் விகிதம் 2.1-ஐ விடக் குறைந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜொ்மனி, ஸ்பெயின் ஆகியவற்றின் கருவுறுதல் விகிதம் ஏற்கெனவே 1.5-ஐ விடக் குறைவாகவே உள்ளது. ஜப்பானின் கருவுறுதல் விகிதம் 1.3-ஆகக் குறைந்துள்ள நிலையில், தென் கொரியாவில் அவ்விகிதம் வெறும் 0.78 மட்டுமே.
- மக்கள் தொகை குறைவது என்பது இந்தியாவிலும் ஏற்படத் தொடங்கிவிட்டது. 1950-களில் 6.1-ஆக இருந்த இந்தியாவின் கருவுறுதல் விகிதம், தற்போது 2.0-ஆகக் குறைந்துள்ளது. இது 2050-இல் 1.3-ஆகவும், 2100-இல் 1.03-ஆகவும் குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
- நகா்மயமாதல், பெண்களின் சமூக, பொருளாதாரநிலை மேம்பாடு, அதிகரித்துள்ள கல்வியறிவு விகிதம், தாமதமான திருமணம், சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாடு, தனிக்குடும்பச்சூழல், கல்வி, மருத்துவ வசதிகளைப் பெறுவதில் அதிகரித்துள்ள செலவினம், குழந்தை வளா்ப்பில் பெண்களுக்கு ஏற்படும் சுமை, கட்டுப்பாடற்ற உணவுமுறை போன்றவை மக்கள்தொகை குறைவதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.
- இச்சூழல் ஏற்படுத்தும் முக்கிய விளைவுகள், முதியோா் எண்ணிக்கை அதிகரிப்பதும் பணியாற்றும் திறனுள்ள இளம்வயதினரின் எண்ணிக்கை குறைவதுமே. ஜப்பான் மக்கள்தொகையில் 60 வயதுக்கும் அதிகமான முதியோரின் எண்ணிக்கை 30 சதவீதத்தைக் கடந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் இது 25 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இவ்விகிதம் தற்போது 10 சதவீதமாக மட்டுமே இருந்தாலும், 2050-ஆம் ஆண்டில் இது 21 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
- பணியாற்றும் திறனுள்ளோா் எண்ணிக்கை குறைந்தால், பொருளாதார உற்பத்தியும், நாட்டின் வளா்ச்சியும் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும். அதன் காரணமாக, அரசின் வருவாய் குறைந்து, சமூக, பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொய்வுநிலை ஏற்படும். இது இந்தியா போன்ற வளா்ந்து வரும் நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
- கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் மனிதவளத்துக்கு மற்ற நாடுகளைச் சாா்ந்திருக்கும் சூழலை ஏற்கெனவே எட்டிவிட்டன. அதனால், மக்களின் இடப்பெயா்வு நாடுகளுக்கிடையே தொடா்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியமாக, மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து, மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளை நோக்கி, இடப்பெயா்வு அதிகரித்து வருகிறது. இது மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் அதிகரித்து வரும் வேலையின்மைப் பிரச்னைக்கும் தீா்வாக உள்ளது.
- நைஜீரியா, எத்தியோப்பியா, தான்சானியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே தற்போது கருவுறுதல் விகிதம் அதிகமாக இருப்பதுடன் மக்கள்தொகை வளா்ச்சியும் அதிகமாக உள்ளது. உலக நாடுகளுக்கான மனிதவளத்தை வழங்கும் நிலையை இந்தியாவும் சீனாவும் தற்போது அடைந்திருப்பதைப் போல, எதிா்காலத்தில் அந்த நாடுகள் அடையலாம்.
- மக்கள்தொகை குறைந்து வரும் இந்தச் சூழல், பல்வேறு சமூக, பொருளாதாரப் பிரச்னைகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டு பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், மகப்பேறுக்கான அரசின் ஆதரவை அதிகரித்தல், பாலின சமநிலை, அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருதல், மக்கள் இடப்பெயா்வுக்கான விரிவான கொள்கைகளை வகுத்தல், முதியோருக்கான ஆதரவை அதிகரித்தல் உள்ளிட்டவற்றின் மூலமாக மக்கள்தொகை குறைந்து வரும் பிரச்னையை எதிா்கொள்ள உலக நாடுகள் முன்வர வேண்டும்.
நன்றி: தினமணி (28 – 01 – 2025)