- தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநில அணைகளில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது, மத்திய நீர்வள ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை. பெங்களூருவில் தற்போது நிலவிவரும் தண்ணீர்த் தட்டுப்பாடு, கர்நாடகத்தின் மற்ற பகுதிகளிலும் வரக்கூடும் என்கிற அச்சம் அங்கு இருக்கிறது. அதே நிலை தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளுக்கும் ஏற்படலாம் என்கிற அச்சத்தை, இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் எழுப்பியிருக்கின்றன.
- மத்திய நீர்வள ஆணையத்தின் சமீபத்திய வாராந்திர அறிக்கையின்படி, தென் மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா ஆகியவற்றின் பெரும்பாலான அணைகள் அவற்றின் கொள்ளளவில் 25%-க்கும் குறைவாக நிரம்பியுள்ளன. 2023இல் 39.4%ஆக இருந்த நீர் இருப்பு, 2024இல் 23%ஆகக் குறைந்துள்ளது; இதில் கேரளம் மட்டுமே விதிவிலக்கு. கிழக்கு இந்தியாவில் அதிகபட்சமாக 48.8% அளவு உள்ளது.
- அந்தப் பகுதியில் கடந்த ஆண்டு நீர் இருப்பு 43.1% என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நிலவரத்துடனும், கடந்த 10 ஆண்டு சராசரி நிலவரத்துடனும் ஒப்பிடும்போது, தென்னிந்திய மாநிலங்களைத் தவிர, வேறு எந்தப் பகுதியும் இந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை என்பதை இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
- தமிழ்நாடு கவனம் குவிக்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டில் பரவலாக மிதமிஞ்சிய மழை பெய்தபோதும் நீர் இருப்பு மொத்தக் கொள்ளளவில் 33% மட்டுமே உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
- கடந்த ஆண்டு இது 60%ஆக இருந்தது. மாநிலத்தில் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மொத்தக் கொள்ளளவான 2.65 லட்சம் கோடி லிட்டரில் 28% மட்டுமே, இப்போது இருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 90 அணைகளில் ஆறு அணைகள் கிட்டத்தட்ட வறண்டுவிட்டதாக வெளியாகும் தகவல்கள் மேலும் கவலையளிக்கின்றன.
- 25 அணைகளில் 20% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. 39 அணைகளில் 20% முதல் 50% வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பல அணைகள் அதன் முழுக் கொள்ளளவில் இல்லை என்கிற செய்தி கவனத்துக்குரியது.
- திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நல்ல மழை பெய்தாலும், பல அணைகளில் வெள்ள நீரைத் தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
- இதனால் அணைகளின் கொள்ளளவில் 50% மட்டுமே சேமிக்க முடிந்துள்ளது. மேட்டூர் அணையின் கொள்ளளவு குறைவாக உள்ளதால், காவிரி டெல்டா சாகுபடிக்காக நீர் அளிப்பதில் தட்டுப்பாடு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், நீரின் தேவையும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அணைகளின் நீர் இருப்பு, கடும் வெயிலால் மேலும் குறையும் வாய்ப்பும் உள்ளது.
- இதனால் தண்ணீர்த் தட்டுப்பாட்டை முன்னுணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்படுவது அவசியம். சென்னை மாதிரியான பெருநகரங்கள் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலையை பெங்களூருவின் சமீபத்திய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். அணைகளில் தூர்வாருதல், நீர் இருப்புக்கான கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல் ஆகிய பணிகளை எதிர்காலத் தேவையைக் கணக்கில் கொண்டு தமிழ்நாடு நிறைவேற்ற வேண்டியதும் அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 04 – 2024)