குறையும் மகப்பேறு மரணம்: தலைநிமிரும் தமிழகம்
- தமிழகத்தில் 2023-24இல் மகப்பேறு மரணங்கள், முந்தைய ஆண்டைவிட 17% குறைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், பெரும் துயரத்தின் தீவிரம் தணிகிறது என்கிற நிம்மதியை அளிக்கிறது. மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு இரண்டாவது பிறப்பு எனக் கருதப்படுகிறது. குழந்தை உயிருடன் பிறக்கும் ஒரு லட்சம் மகப்பேறுகளில் 398 தாய்கள் உயிரிழக்கும் அளவுக்கு 1997-1998இல் இந்திய அளவில் நிலை இருந்தது. இது 2020இல் 99 பேர் எனக் குறைந்தது. தமிழகத்தில், கடந்த 20 ஆண்டு காலத் தரவுகளின்படி, பிரசவிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 134 பேர் இறப்பதாகவே 2001இல் நிலைமை இருந்தது.
- இது 2018-2020இல் 54 பேர் எனக் குறைந்தது. 2023-2024இல் இந்த எண்ணிக்கை 45.5 பேர் ஆகக் குறைந்தது. மேற்கண்ட நிலையிலிருந்து 10க்கும் குறைவானோர் என்கிற நிலையை அடுத்த 2 ஆண்டுகளில் எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு 2024 அக்டோபரில் அறி வித்தார். அதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு, மாநில அளவில் அவர் தலைமையில் ஒரு செயலாக்கக் குழுவும் மாவட்ட அளவில் அந்தந்த ஆட்சியர் தலைமையிலான செயலாக்கக் குழுக்களும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
- மகப்பேறுக்குப் பிந்தைய தொடர்ச்சியான ரத்தப்போக்கு, ரத்த அழுத்தம் காரணமான சீர்கேடுகள், தொற்று காரணமாக உறுப்புகள் செயலிழக்கும் அளவுக்கான பாதிப்பு, இதயக் கோளாறுகள், கருச்சிதைவு போன்றவை முதன்மைக் காரணிகளாக முன்வைக்கப்பட்டன. இவற்றை எதிர்கொள்ளும் பெண்களுக்குத் துணைநிற்க அரசின் பிற துறைகளுடனும் தனியார் மருத்துவமனைகளுடனும் ஒருங்கிணைந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்பட வேண்டியிருந்தது.
- மகப்பேறு மரணங்களில் 80% தவிர்க்கப்படக்கூடியவை எனத் தமிழகத்தில் பிறப்புத் தணிக்கை தொடர்பான நீண்டகாலத் தரவுகள் கூறுகின்றன. இதைச் செயல்படுத்து வதற்காக ஆரம்பநிலை சுகாதாரக் கட்டமைப்பையும் இரண்டாம் நிலைக் கட்டமைப்பையும் பன்னோக்கு உயர்மருத்துவக் கட்டமைப்பையும் வலுப்படுத்துதல், குழந்தை பிறப்புக்கு முன்னரும் பெண்களின் உடல்நலத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுதல் முதலான நடவடிக்கைகளையும் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டது. அதன் பலனாகத்தான் தற்போது மகப்பேறு மரணங்கள் குறைந்துவருகின்றன.
- மருத்துவப் பணிகள் சார்ந்த தரவுகளைத் திரட்டுவதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சேவைகளின் தரத்தை உயர்த்த முயலும் ‘சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பு’ (எச்எம்ஐஎஸ்) இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் இருப்பு, பெண்ணின் நலனையே அடிப்படையாகக் கொண்டுள்ள நிலையில், மகப்பேறு மரணங்களைக் கட்டுப்படுத்தியிருப்பதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை பல குடும்பங்களின் எதிர்காலத்தை நிலைநிறுத்தியுள்ளது.
- தமிழகத்தில் 72% மகப்பேறு மரணங்கள் கிராமப்புறங்களில் மருத்துவக் கட்டமைப்பின் போதாமையால் ஏற்படுவதாக ஓர் அறிக்கை கூறுகிறது. சுகப்பிரசவம் என்பது லட்சியமாகக் கொள்ளப்பட்டாலும், பெண்ணின் உடல்நிலை சிசேரியன் முறையைக் கோருவதாக இருந்தால், அதற்கான மருத்துவ வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனப் பன்னாட்டு மருத்துவ நெறிமுறைகள் அறிவுறுத்துகின்றன.
- ஏழ்மையான குடும்பங்கள்கூடத் தனியார் மருத்துவமனைகளை நாடும் அளவுக்குப் பொருளாதாரப் பாகுபாடுகளைக் கடந்த மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. 2024இல் சென்னை ஐஐடி மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, பொருளாதாரத்தில் முன்னேறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சிசேரியன் முறையைத் தேர்வு செய்வது தேசிய அளவில் அதிகமாக இருக்கிறது.
- இதற்கு நேரெதிராக, தனியார் மருத்துவமனைகளில் ஏழைப் பெண்களுக்கு சிசேரியன் மகப்பேறுகள் அதிகமாக நிகழும் போக்கைத் தமிழகம் காண்கிறது. இதுபோன்ற சிக்கல்களையும் மக்கள் நல்வாழ்வுத் துறை களைய வேண்டும். தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பான மகப்பேற்றை வழங்குவதன் மூலம் தமிழகம் மனிதவள மேம்பாட்டில் முதலிடம் வகிக்கட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 01 – 2025)