TNPSC Thervupettagam

குல்பெங்கியான் விருதின் முக்கியத்துவம் என்ன?

July 14 , 2024 3 days 95 0
  • சமீபத்தில், 2024ஆம் ஆண்டின் குல்பெங்கியான் மானுட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இது போர்ச்சுகல் நாட்டில் உள்ள கலோஸ்த்தே குபெக்கியான் என்னும் நிறுவனம் வழங்கும் விருது ஆகும்.
  • உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் சவாலான பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உழைக்கும் மனிதர்கள் / நிறுவனங்களுக்கு 2020ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. விருதாளர்களுக்குப் பட்டயத்துடன், 1 மில்லியன் யூரோ (9 கோடி ரூபாய்) நிதியும் வழங்கப்படுகிறது.
  • இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் ஜெர்மனி நாட்டின் முன்னாள் தலைவர் ஆங்கெலா மெர்க்கல். இவருடன் உலகில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் தொடர்பான உலக நிர்வாக அமைப்புகள் முதலிய தளத்தில் பணியாற்றும் ஒன்பது பேர் கொண்ட குழு இணைந்து இந்த விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
  • இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான சுனிதா நாராயண் இக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.

பட்டியிலில் சேர்ந்த இந்தியா

  • குல்பெங்கியான் விருது முதன்முதலாக, பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக உலகம் ‘பன்னாட்டு பருவநிலை மாற்றத்துக்கான அறிவியல் கூட்டமைப்’பின் (International Panel on Climate change - IPCC) பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி தனது அறவழிப் போராட்டத்தினால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த க்ரேட்டா தன்பர்க்குக்கு வழங்கப்பட்டது.
  • பிறகு, 2021ஆம் ஆண்டு பருவநிலைப் பாதுகாப்பிற்கான உலகளாவிய மேயர்களின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு, பன்னாட்டு பருவநிலை மாற்றத்திற்கான அறிவியல் கூட்டமைப்பிற்கும் (IPCC), பல்லுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் தளங்களில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கொள்கைகள் வடிவமைப்பு நிறுவனத்திற்கும் (Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services - IPBES) வழங்கப்பட்டது.
  • மேலும் 2023ஆம் ஆண்டுக்கான விருது, இந்தோனேஷியாவைச் சேர்ந்த வனப் பாதுகாப்புச் செயல்பாட்டாளர் பந்தி அப்பய் ஜங்கத், காமரூனைச் சேர்ந்த சிசில் பிபியன் ஜெபெட், பிரேசிலைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் லிலியா வனிக் சல்கதோ என மூவருக்கு பிரித்து வழங்கப்பட்டது.
  • இதில் 2024ஆம் ஆண்டுக்கான விருது, ஆந்திர பிரதேச சமூக மேலாண்மை வழி இயற்கை வேளாண்மை (Andhra Pradesh Community Managed Natural Farming - APCNF) நிறுவனத்திற்கும், மண்ணியல் பேராசிரியர் ரத்தன் லால் மற்றும் எகிப்து நாட்டின் செக்கெம் (Sekem) நிறுவனத்திற்கும் இணைந்து வழங்கப்படுகிறது.
  • இந்த விருதை, ஆந்திர பிரதேசத்தின் இயற்கை வேளாண்மை உழவர்கள் அமைப்பின் துணைத் தலைவர் விஜய் குமாரும், அமைப்பின் மிக முக்கியமான உழவர் தலைவரான நெட்டெம் நாகேந்திரம்மாவும் பெற்றுக்கொண்டார்கள். இந்த விருதுக்காக உலகெங்கிலும் 117 நாடுகளிலிருந்து 181 பரிந்துரைகள் அனுப்பட்டிருந்தன.

ஆந்திர மாநிலத்தின் முன்னெடுப்புகள்

  • இந்த இயற்கை வேளாண் இயக்கத்தை முன்னெடுக்க, ரைத்து சதிகார சம்ஸ்தா (RYSS) என்னும் தன்னார்வ நிறுவனம், ஆந்திர பிரதேச வேளாண் துறையால் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் பணிகள் 2016ஆம் ஆண்டு தொடங்கின.
  • இதன் தொடக்க காலப் பணிகள், வேதிப் பூச்சி மருந்துகள் இல்லாத பூச்சிக் கட்டுப்பாடு என்னும் முனைப்பில் தொடங்கின. பின்னர் மண் வள மேம்பாடு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்கேற்போடு தொடங்கப்பட்டன.
  • வேதிப் பொருட்களின் துணையோடு அதிக உற்பத்தியை மட்டுமே முன்னிறுத்தும் வேளாண்மையின் விளைவாக, பல்லுயிர்ச் சூழல் இழப்பு, மண் வளக் குறைவு மற்றும் நிலத்தடி நீர் இழப்பு முதலியவை உருவாகி, இன்று வேளாண்மை ஓர் இக்கட்டான நிலையில் வந்து நிற்கின்றது.
  • வேளாண் இடுபொருட்களின் தொடர் விலையேற்றம், உற்பத்திச் செலவுகளைத் தொடர்ந்து உயர்த்திவருகிறது. ஆனால், அதற்கேற்ப வேளாண் பொருட்களின் விலை உயர்வதாக இல்லை. பல சமயங்களில் பொதுச் சந்தையில் ஏற்படும் விலை வீழ்ச்சி உழவர்களை மீளாக் கடன்களில் ஆழ்த்திவிடுகிறது. இதன் விளைவாக, பல மாநிலங்களில் உழவர்கள் தற்கொலைகள் நடக்கின்றன.
  • வேளாண்மையின் இந்தச் செல்திசையை மாற்றி, வேளாண்மையை ஒரு சமூக இயக்கமாக முன்னெடுத்து, சிறு குறு உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் முயற்சிதான் ஆந்திர வேளாண் துறையின் இந்த இயற்கை வேளாண்மை இயக்கம்.
  • இயற்கை வழி வேளாண்மை என்பது இயற்கையாகக் கிடைக்கும் இடுபொருட்கள் (தொழு உரம், இயற்கைப் பூச்சிக் கொல்லிகள், உள்ளூர் விதைகள்) வழியே நடைபெறுகையில், உற்பத்திச் செலவு வெகுவாகக் குறைகிறது. இதனால், மண்ணின் கரிம வளம் மேம்படுகிறது. நீர்ப் பிடிப்பு சக்தி அதிகரிக்கிறது. மண்ணிற்கு மேலும், கீழும் பல்லுயிர்ச் சூழல் நிலைநிறுத்தப்படுகிறது. விளைவாக, வேளாண்மை நீடித்து நிலைக்கும் ஒன்றாக மாறுகிறது.
  • இந்த இயக்கம் உழவர்களை, அவர்களின் முன்னெடுப்புகளை (initiatives), அவர்களின் புத்தாக்க முயற்சிகளை (innovation) முன்னிறுத்துகிறது. அவை ஆவணப்படுத்தப்பட்டு, மாநிலம் எங்கும் எடுத்துச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இயக்கச் செயல்பாடுகள்

  • இந்த முயற்சிகளை அறிவியல் அடிப்படையில் முன்னெடுக்க, இயற்கை வழி வேளாண் அமைப்பிற்கு உதவியாக, இந்தோ-ஜெர்மன் கூட்டமைப்பில், உலக வேளாண் சூழலியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பு என்னும் ஒரு புதிய நிறுவனம் 2022ஆம் ஆண்டு கடப்பா மாவட்டத்திலுள்ள புலிவேந்துலா என்னும் ஊரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வழியே ஆராய்ச்சிகளும், உழவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் வழியே, பருவநிலை மாற்றங்களைத் தாங்கும் சக்தி பெற்ற கிராமங்களை (resilient villages) உருவாக்குவதே இதன் இலக்கு.
  • இதுவரை இந்த இயக்கம் கிட்டத்தட்ட 10 லட்சம் உழவர்களை இத்திட்டத்தில் இணைத்திருக்கிறது. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன. இந்த இயக்கம் அடுத்த 10 ஆண்டுகளில், ஆந்திர மாநிலத்தின் 80 லட்சம் உழவர்களையும் இத்திட்டத்தில் இணைக்கும் நோக்கத்தோடு பயணித்துவருகிறது.
  • இந்த இயக்கச் செயல்பாடுகளின் விளைவுகள் ஒவ்வொரு ஆண்டும் விசாகப்பட்டினத்தில் உள்ள வளர்ச்சிக்கான ஆய்வுகள் நிறுவனம் (Institute of Developmental Studies) வழியே கண்காணிக்கப்படுகின்றன. 2023ஆம் ஆண்டுக்கான அதன் ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  • இதில் நெல், நிலக்கடலை, பருத்தி, மக்காச் சோளம், துவரம்பருப்பு, மிளகாய், தக்காளி என்னும் முக்கியமான பயிர்களில், இயற்கை வழி மற்றும் வேதிப் பொருட்கள் வழி பயிர் செய்த உழவர்களின் மகசூல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1331 இயற்கை வழி உழவர்களும், 731 வேதிப் பொருட்கள் வழி உழவர்களும் பங்குபெற்றனர். இவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

பரிசோதனை முடிவுகள்?

  • இந்தப் பரிசோதனை முடிவுகள் சொல்லும் செய்தி மகிழ்ச்சிக்குரியது. பெரும்பாலான பயிர்களில், இரண்டு வகை வேளாண்மைகளிலும், மகசூலில் பெரிதான வேறுபாடுகள் இல்லை. அதீதமாக பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படும் பருத்திப் பயிரில், இயற்கை வழி வேளாண்மை மகசூல் அதிகமாக இருக்கிறது என்னும் தகவல் வியப்புக்குரியது. முந்தய ஆண்டுகளிலும் பருத்தி மகசூல் இயற்கை வழி வேளாண்மையில் குறையவில்லை என்பது முக்கியமான தகவல்.
  • இயற்கை வழி வேளாண்மையினால், சராசரியாக ஒரு ஏக்கருக்கு 7,500 ரூபாய் வரை இடுபொருள் செலவுகள் குறைகின்றன என்பதும் இந்த ஆய்வின் வழி வெளியாகும் தகவல். ஆனால், இயற்கை வழி வேளாண்மை வழிகளில், பண்ணை வேலை நாட்கள் அதிகரிக்கின்றன என்பது ஒரு முக்கியமான எதிர்மறை விளைவு. சிறு / குறு உழவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வயல்களில், வேளாண் வேலைகளைச் செய்பவர்கள். இன்று கிராமங்களில், வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது கடினமான சூழலில், இதுதான் இவ்வழியின் முக்கியமான தடையாகத் தோன்றுகிறது.
  • இதைச் சரிசெய்ய ஒரே வழி, இயற்கை வழி வேளாண் பொருளுக்கான விலை, வேதி வேளாண் பொருளைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே. இதைச் செய்ய, உழவர்களுக்கான வணிக நிறுவனம் ஒன்று உருவாகி வர வேண்டும்.
  • இயற்கை வழி வேளாண்மையின் இன்னொரு முக்கியமான நோக்கம், மண் வள மேம்பாடு. இயற்கை வழி வேளாண்மையின் வழியில், அதிக ஆயுள் கொண்ட மரபான ரகங்கள் பயிரிடப்படுவதனால், பயிர்கள் அதிக நாட்கள் மண்ணின் மேற்பரப்பில் இருக்கின்றன. செயற்கை உரங்களும், பூச்சி மருந்துகளும் இடுவது இல்லை என்பதனால், மண்ணின் கரிம வளமும், பல்லுயிர்ச் சூழலும் காக்கப்படுகின்றன.
  • இந்த இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பு என்பது இயற்கை வேளாண்மை வழியில், பயிர்களின் மகசூல் வெகுவாகக் குறைந்துவிடும் எனப் பொதுவெளியில் நிலவும் ஒரு கருத்தை உடைத்ததே. இரண்டாவது, இந்த இயக்கத்தின் வெற்றி என்பது பெண்களின் பங்களிப்பில் உள்ளது என்பதே.

நம் எதிர்காலத்துக்கு எது நல்லது?

  • இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில், வேளாண்மையை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள் சதவீதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. மற்ற துறைகளில் கிடைக்கும் பொருளாதார முன்னேற்றம் வேளாண்மையில் நிச்சயமாகக் கிடைப்பதில்லை என்பதே வேளாண் துறையின் முன்னே நிற்கும் முக்கியமான சவால்.
  • இத்தகைய சூழலில், ஆந்திர மாநிலத்தின் வேளாண் துறையின் இயற்கை வழி வேளாண்மை இயக்கம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இந்த வழியில் உள்ள தொடர் சவால்களை எதிர்கொண்டு, மனம் தளராமல் நடத்துவதென்பது அரசு போன்ற பொது அமைப்பினால் மட்டுமே முடியும். இதை வழிநடத்திவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமாரும், இதில் முன்னத்திஏராக இருக்கும் உழவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
  • வேதிப் பொருட்களற்ற வேளாண்மை சமூகத்திற்கு உருவாக்கும் நல்விளைவுகளை நாம் பணமாகக் கணிப்பதில்லை. இதனால் மேம்படும் மக்கள் நலனும், மண் வள மேம்பாடும், நீடித்து நிலைக்கும் பல்லுயிர்ச் சூழலும் விலை மதிப்பற்றவை. எனவே, இந்தத் திசையில் செல்வதே நமது எதிர்காலத்துக்கு நல்லது.

நன்றி: அருஞ்சொல் (14 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories