TNPSC Thervupettagam

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் தடை உத்தரவு

November 12 , 2019 1884 days 973 0
  • பள்ளி வளாகங்களிலும் அதைச் சுற்றி 50 மீட்டர் சுற்றளவிலும் கொழுப்பு, சர்க்கரை, உப்பு போன்றவை நிரம்பிய உணவுப் பொருட்களை விற்பதைத் தடுக்கும் வரைவு நெறிமுறையை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உருவாக்கியிருப்பது வரவேற்புக்குரியது.

தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

  • பள்ளிகளில் ஆரோக்கியமான உணவு முறையை வளர்த்தெடுப்பது குறித்த நெறிமுறைகளை அந்த ஆணையம் உருவாக்க வேண்டும் என்று 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் விளைவாகத் தற்போதைய வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
  • சக்கைத்தீனிகள் விற்பனையைத் தடுப்பதுடன் பள்ளிகள் பாதுகாப்பான, சரிவிகித உணவுமுறையை ஊக்குவிக்கும்படி எஃப்எஸ்எஸ்ஏஐ கேட்டுக்கொண்டிருக்கிறது.
  • விளம்பரங்களைப் பார்ப்பதும் குழந்தைகள் சக்கைத்தீனிகளிடம் அடிமையாகிக் கிடக்க ஒரு காரணம் என்பதால் அந்தத் தீனிகளின் விளம்பரங்கள், தயாரிப்புப் பெயர்கள் எதுவும் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிக் கட்டிடங்கள், பள்ளிப் பேருந்துகள், விளையாட்டுத் திடல்களில் இடம்பெறக் கூடாது என்றும் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

உணவு முறை

  • ஒரு முழுமையான உணவு முறையைத் தருவதற்கான வழிகாட்டுதலையும் கூடவே அந்த ஆணையம் தருகிறது. முழு தானியங்கள், பால், முட்டை, சிறுதானியங்கள் போன்றவற்றைக் குழந்தைகளுக்குத் தரச் சொல்கிறது. கூடவே, பள்ளியில் எந்தெந்த உணவுப் பொருட்களை வழங்கலாம் என்ற பட்டியலையும் அது தந்துள்ளது.
  • சத்துக்குறைபாடு காரணமாக இந்தியாவில் 2017-ல் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கும் அதேவேளையில் பல மாநிலங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு உடற்பருமன் பிரச்சினையும் அதிகரித்திருக்கிறது. 2017 ஜூலையில் வெளியான ஆய்வொன்று இந்தியாவில் 1.44 கோடி குழந்தைகளுக்கு உடற்பருமன் பிரச்சினை இருப்பதாகக் கூறுகிறது. இதில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். சமீபத்திய ஆய்வொன்று 23 மாநிலங்களில் தேசிய சராசரியைவிடக் குழந்தைகளுக்கு அதிக உடற்பருமன் இருப்பதாகக் கூறுகிறது. இதில் ஆறு மாநிலங்களில் 20% இந்தப் பிரச்சினை காணப்படுகிறது.
  • மேற்கத்திய உணவு முறையானது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் இயங்குமுறையையும் பன்மைத்தன்மையையும் பாதிப்பதுடன் வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்களுக்குக் களம் அமைக்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வு முடிவுகள் நிரூபிக்கின்றன.
  • ஆகவே, குழந்தைகளிடம் காணப்படும் உடற்பருமனுக்குக் காரணமான ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதைத் தடுக்கும் எந்த நடவடிக்கையும் வரவேற்புக்குரியதே. இதை எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறார்கள் என்பதில்தான் சவால் இருக்கிறது.

உதாரணம்

  • எடுத்துக்காட்டாக, பள்ளிகளைச் சுற்றிலும் முந்நூறு அடிகளுக்குப் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதும் விளம்பரப்படுத்தப்படுவதும் தடைசெய்யப்பட்டிருக்கும்போதும் விதிமீறலே நடைமுறையாக உள்ளது. புகையிலைப் பொருட்களை விற்கும் கடைகள்தான் எஃப்எஸ்எஸ்ஏஐ தற்போது தடைவிதிக்க விரும்பும் ஆரோக்கியமற்ற சக்கை உணவுகளையும் விற்கின்றன.
  • ஆரோக்கியமான உணவு முறையைக் குழந்தைகளுக்குள் விதைப்பது வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
  • ஆரோக்கியமற்ற உணவுகளைக் குழந்தைகள் உண்பதைக் குறைக்கும் நடவடிக்கைகளுடன் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி கொடுக்கும் செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துவதும் அவசியம். ஆரோக்கியமான உணவும் தினசரி உடற்பயிற்சியளிக்கும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளுமே குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதில் உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories