TNPSC Thervupettagam

குழந்தைகளை விளையாட விடுங்கள்

October 3 , 2023 411 days 430 0
  • மூன்று வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறோம். சூழல் அப்படி. இப்படியான குழந்தைகளுக்கான வகுப்பு தொடங்கப்படுவதற்கான காரணங்கள் என்பவை பெரிதும் தனிக் குடும்பமே பின்னணியில் அமைகிறது. இன்னொன்று, பொருள் ஈட்டும் தேவை முன்பைவிட கூடியிருக்கிறது. அதனால் தாய், தந்தை இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.
  • இந்தச் சூழலில்தான் குழந்தைக்குத் தாத்தா, பாட்டியென உறவுகள் தேவையாகயிருக்கிறது. அந்த உறவு களின் இடத்தைத்தான் வகுப்பறைகள் முழுமை செய்ய முயல்கின்றன.

நாம் என்ன செய்தோம் 

  • நம் குழந்தைப் பருவத்திலிருந்து ஒப்பிட்டுப் பார்க்கையில் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நான்கு சுவர்களுக்குள் முடக்கி வைத்திருக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான்கு வயதிலேயே வயல், குளம், பம்ப்செட் என நண்பர்களோடு சுற்றித்திரிந்தி ருக்கிறேன்.
  • கோடையில் இன்னும் கூடுதலான தூரம் நடந்துபோய் பனை நுங்கு வெட்டி மகிழ்ந்திருக்கிறோம், மாடு மேய்த்திருக்கிறோம், பொன் வண்டைத் தேடி கொன்றை மரத்தடியில் காத்துக் கிடந்திருக்கிறோம். அப்போதெல்லாம் ஊரின் பகுதிகள் விரியவிரிய ஆச்சரியத்தையும் வியப்பையும் உருவாக்கின. ஏனெனில் நாங்கள் கடந்து போகிற அந்தத் தூரம்தான் அதிகபட்சம். அந்த வயதில் நாங்கள் பார்த்த அந்த ஆண்டின் புதிய இடம்.

அந்தக் காலத்து விளையாட்டுகள்

  • அந்த வயல்வெளிகளைக் கடந்து வேறு புதிய இடங்களையோ மலைகளையோ அருவிகளையோ கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அந்த வயல்காட்டைக் கடந்து கற்பனை செய்யும் எல்லைக்கூட சுருங்கித்தான் கிடந்தது. கற்பனை உலகுக்குக் கடிவாளம் இட்டிருந்தாலும் விளையாட்டு உலகம் அப்படியல்ல, விசாலமான திறப்பை அது உருவாக்கி வைத்திருந்தது.
  • நீச்சல், பம்பரம், கண்ணாமூச்சி, கோலிக்குண்டு, தட்டாண்பிடிப்பது, சில்லிக்கோடு, கூட்டாஞ்சோறு, கிட்டிப் புள் என ஒரு நீண்ட பட்டியலே இருந்தது. இந்த விளையாட்டில் ஒன்றுகூட தனித்தோ, வீட்டிற்குள்ளோ விளையாடும் கட்டமைப்பிலோ இருக்காது. எல்லா விளையாட்டுகளுமே குழு விளையாட்டுகளாகவும் இல்லத்தின் வெளியே உடல் உழைப்பைப் பெரிதும் செலுத்தி விளையாடுகிற விளையாட்டுகளாகவும் அவை இருந்தன.

விளையாட்டுத் தந்த தன்னம்பிக்கை

  • அப்போது விளையாடிய எல்லா விளையாட்டுகளுமே கூட்டு முயற்சியில் விளையாடிவைதான். விட்டுக்கொடுக்க, இணைந்து செயல்பட, வேறுபாடுகள் மறக்க, ரகசியம் காக்க எனப் பல்வேறு திறன்களை அவை வளர்த்தெடுத்தன.
  • கிட்டிப் புள் ஆரோக்கிய மனப்பான்மையை வளர்த்தெடுத்த முக்கியமான விளையாட்டு. இரண்டு அணிகள் கூர்ந்து கவனித்து ஆடிய ஆட்டம். எத்தனைத் தூரம் புள்ளை அடித்து வீசியிருக்கிறோம் என்பதைக் கிட்டியால் அளப்பது, அளந்த தூரத்தை அப்படியே மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வது.
  • அதிக தூரம் அடித்து வீசியவர்கள் வெல்ல, தோற்றவர்கள் வென்றவர்கள் புள்ளை அடித்து வீசிய தூரத்திலிருந்து ஆட்டம் நடந்த இடம் வரையில் மூச்சடக்கி “கித்கித்கித்” என்ற சொல்லைச் சொல்லிக்கொண்டே ஓடிவந்து முடிக்க வேண்டும். இத்தனையும் செய்து முடிக்க சிந்தனையும் உடல் வலிவும் அதிகம் தேவை. அவ்வளவு உடல்நலம், மனநலம் சார்ந்த விளையாட்டாக இருந்தது.
  • நீங்கள் நினைப்பதுபோல பாதுகாப்பு உடை அணிந்துகொண்டு நீந்திப் பழகும் ஆட்டமல்ல நீச்சல். குளத்தின் ஒரு கரையிலிருந்து எதிர்கரை வரை நீந்திச் செல்வது. மூழ்கி மூழ்கி எதிரே இருக்கும் நண்பனைத் தேடி தேடிப் பிடிப்பது என்று நாள் முழுவதும் குளம் தெறிக்க நீந்தி விளையாடுவது.

கூட்டாஞ்சோறு

  • கையில் கிடைத்த உணவு ஆயினும் பிறருக்குக் கொடுத்து உதவும் விளையாட்டு இது. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’ என்ற குறளைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட அமர்ந்து, தட்டில் சோற்றைப் பரிமாறிய பின் எல்லோரும் இந்தக் குறளைச் சொல்லும்போது, “டேய் எங்க வீட்டு மரத்துல மாங்காய் இருக்குடா நான் கொண்டு வரேன்” என ஒருவன் சொன்னதும் இன்னொருவன் மற்றொரு பொருள் கொண்டுவருகிறேன் என்று சொல்வான்.
  • இப்படி ஒவ்வொருவரும் ஒரு பொருள் கொண்டுவர கூட்டாக உருவான சோற்றை இலைகளில் பங்கிட்டு உண்டதெல்லாம் நினைவுகள். இந்தக் கூட்டாஞ்சோறு எல்லோருக்கும் கொடுக்கக் கற்றுத் தந்த விளையாட்டென்பதை இன்று என் மகளுக்குச் சொல்லிக் கொடுக்க, அதன் எச்சம்கூட இல்லாமல் தொலைந்து போய்விட்டது.
  • விளையாட்டு வழி கிடைக்கும் அறிவையும் தன்னம்பிக்கையையும் இன்றைய தலைமுறையினர் நான்கு சுவர்களுக்குள்ளாக இழந்து கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் இன்றைக்கு அவரவர் வாழும் சூழல் சார்ந்து உடலுக்கும் மனதுக்கும் தெம்பூட்டுகின்ற நாம், இளமைக் காலத்தில் விளையாடிய விளையாட்டுகளில் சிலவற்றையாவது மீட்டெடுத்து நம் குழந்தைகளின் கைகளில் கொடுக்க வேண்டும். குழந்தைகள்தானே, விளையாடட்டும். அவர்கள் வளர்ந்த பின்பு வாழ்க்கை இவர்களிடமிருந்து பறித்தெடுப்பது விளையாட்டாகத் தான் இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories