TNPSC Thervupettagam

குழந்தைகள் நலனில் அக்கறை: தமிழ்நாட்டின் முயற்சிகள் தொடரட்டும்

January 26 , 2024 214 days 289 0
  • தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 38% குறைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், பொதுச் சுகாதாரச் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையை ஆழப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில், 1,000 குழந்தைகளுக்கு 13ஆக இருந்த இறப்பு விகிதம், ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் 8.2ஆகக் குறைந்துள்ளது.
  • பொதுச் சுகாதார அளவீடுகளில் பெரும்பாலான பிரிவுகளில் தேசிய அளவீடுகளோடு ஒப்பிடுகையில், தமிழகம் எப்போதுமே முன்னிலை வகிக்கும். அதன்படி 2023 தேசிய அளவீட்டுடன் (26.619%) ஒப்பிடுகையில் தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது.
  • குழந்தை இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் தேசிய அளவில் கேரளத்தைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஒரு வயது நிறைவடைவதற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப் பதற்காகப் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தமிழக அரசு செய்துவருகிறது. தாய்சேய் நல நோக்கில் கர்ப்பிணிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் அரசு மருத்துவமனைகளில் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கான சிகிச்சைதடுப்பூசி போன்றவை பதிவுசெய்யப்பட்டுவருகின்றன.
  • தற்போது பச்சிளம் குழந்தைகளின் தகவல்களும் பிரத்யேக மென்பொருள் உதவியோடு பதிவேற்றப்படும் எனத் தமிழ்நாடு மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்பது லட்சம் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று அவர்களது எடை, வளர்ச்சி போன்றவை குறிப்பெடுக்கப்பட்டுக் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்பது வரவேற்கத்தக்கது.
  • இதன் மூலம் குழந்தைகளின் உடல்/மன நலக் குறைபாடுகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். தேசியச் சுகாதார ஆணையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்தப் பணியில், அங்கன்வாடிப் பணியாளர்களும் கிராமச் சுகாதாரப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
  • பச்சிளம் குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியப் பங்குண்டு. தாய்ப்பால் சேமிப்பு வங்கிகள், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் தாய்ப்பால் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு உதவுகின்றன.
  • குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை கட்டாயமாகத் தாய்ப்பால் ஊட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, தாய்ப்பால் வங்கிகளை அமைத்ததற்காகத் தேசிய அளவிலான முதல் பரிசைத் தமிழகம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மத்திய அரசுத் திட்டத்தின் மூலம் ஐந்து வயதுக்கு உள்பட்ட 95% குழந்தைகளுக்கு இரும்புச் சத்து, போலிக் அமிலம் கிடைப்பதை உறுதிசெய்வதில் தமிழகம் இரண்டாம் பரிசைப் பெற்றிருக்கிறது.
  • குழந்தை இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. கர்ப்ப காலம் நிறைவடைவதற்குள் குழந்தை பிறப்பது, குறைவான எடை, நிமோனியா தொற்று, பிரசவ நேரச் சிக்கல்கள், தொற்றா நோய்கள் போன்றவற்றால்தான் பெரும்பாலான குழந்தைகள் ஒரு வயது நிறைவடைவதற்குள் இறக்கின்றன.
  • இதைத் தடுக்க, 100% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். 2022 கணக்குப்படி 60% பிரசவங்களே அரசு மருத்துவமனைகளில் நடப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்புக் கருவிகளை அமைக்க வேண்டும்.
  • குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோரின் கடமை மட்டுமல்ல. குழந்தைகள் சமூகத்தின் சொத்து என்பதால், ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. அதை உணர்ந்து அனைத்துக் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் வளர்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories