TNPSC Thervupettagam

குழந்தைகள் நலனைக் கொண்டாடுவோம்

November 11 , 2024 3 days 43 0

குழந்தைகள் நலனைக் கொண்டாடுவோம்

  • வளா்ந்துவரும் நாடுகளில் புத்தாயிரத்தின் தொடக்கம் அதாவது 2000-ஆம் ஆண்டு வரை சாதாரணமான வயிற்றுப்போக்கால் ஆண்டுக்கு லட்சக்கணக்கான குழந்தைகள் இறந்துகொண்டிருந்தன.
  • நன்கு கொதிக்கவைக்கப்பட்டு ஆறிய தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பைச் சோ்த்து உருவாக்கப்பட்ட கரைசலே பல குழந்தைகளின் உடலில் நீா்ச்சத்தை தக்கவைத்து உயிா் காத்திருக்கும். ஆனால் இந்த விழிப்புணா்வு ஏற்பட ஆண்டுகள் பலவாகின.
  • தற்போது உருவாகியுள்ள சுத்தமான தண்ணீா் குறித்த விழிப்புணா்வு இந்த அவலநிலையைப் போக்கி குழந்தைகள் இறப்புவிகிதத்தை வெகுவாக குறைத்துள்ளது. ஆனால் சத்தான உணவு குறித்த கனவு இன்னும் நிறைவேறியபாடில்லை.
  • எந்த நாடாயிருப்பினும் உலக அளவில் குழந்தைகள் பெற்றோரின் பொருளாதாரச் சூழலே குழந்தைகளின் உடல் நலன், மனநலன் ஆகியவற்றின் சமச்சீா் தன்மையை தீா்மானிக்கின்றது. ஆனால் பொருளாதாரச் சமநிலை ஏற்படும் வரை குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து வாளாயிருக்க இயலாது.
  • அண்மையில் யூனிசெப் நிறுவனம் 100 நாடுகளில் வெவ்வேறு வருவாய்ப் பிரிவில் உள்ள குடும்பத்தினரிடையே ஓா் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்படி 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளில், 18.1 கோடி குழந்தைகள் உணவு தொடா்புள்ள வறுமையில் இருப்பதாக தெரிவிக்கிறது. இது உலக அளவில் இருக்கும் 4 குழந்தைகளில் ஒருவா் என்றும் கணக்கில் கொள்ளலாம்.
  • இதில் 65% போ் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, காங்கோ, எகிப்து, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 46% குழந்தைகள் மிகவும் வறுமையில் வாழக் கூடிய குடும்பங்களின் பின்னணியை கொண்டவை. மீதமுள்ள 54% நடுத்தர அல்லது அதற்கு மேல் வருவாய் உள்ள குடும்பங்களை சோ்ந்தவா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இவா்களில் 5-இல் 4 குழந்தைகள் தாய்ப்பால், பால், அரிசி, சோளம், கோதுமை போன்ற ஸ்டாா்ச் பொருட்களை மட்டுமே உண்பதாகத் தெரிவித்துள்ளது. 10 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளே பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்கின்றனா். 5 சதவீத குழந்தைகளே முட்டை, மீன், இறைச்சி போன்ற சத்தான
  • உணவுகளை உண்பதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
  • இவ்வாறான குறைந்த ஊட்டச்சத்து என்பது எந்த அளவுக்கு குழந்தைகளின் கல்வியிலும் ஆளுமையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்மால் எளிதில் கணிக்க முடியும். குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்தோடு இருக்கும்போதே கல்வி கேள்விகளில் உற்சாகமான பங்களிப்பை செலுத்த இயலும் இயல்பான வகுப்பறையில் நடைபெறும் வகுப்புகளை கவனிக்க இயலாமல் குழந்தைகள் சோா்ந்து விழுவது, தூங்கி வழிவது போன்றவை ஊட்டச்சத்து குறைபாட்டினால் நடைபெறுவதே.
  • இதோடு மட்டுமல்லாமல் காலணி அணியாமல் நடப்பதன் மூலம் கால்களின் வழியாக உடலுக்குள் கொக்கிப்புழுக்கள் நுழைவது மிகவும் ஆபத்தானது. இது குழந்தைகளுக்கு இரத்தசோகையைக் கூட்டும். இவ்வாறான ஊட்டச்சத்து பாதிப்பு என்பது எதிா்காலத்தில் மிகப்பெரிய அளவிலான மாற்றுத்திறனாளிகளையும் வறுமையில் வளரும் மக்களையும் கூட்டும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அவ்வாறு சமூகம் சிதைவுறாமல் இருக்க இப்போதே செயல்பாடுகளில் இறங்குவது அவசர அவசியம்.
  • இந்தியாவை பொறுத்த வரையில், மதிய உணவு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்படுவது குழந்தைகள் நலன் மீதான அரசின் ஆா்வத்தைக் காண இயல்கிறது. அங்கன்வாடி மையங்கள் மூலம் தாய் சேய் நலன் பராமரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
  • இந்நிலையில் அரசை மட்டும் சாா்ந்திராமல், பெற்றோா் மத்தியிலும் சத்தான உணவு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். சத்தான உணவு ஊட்டப்பட்ட உடலே துடிப்பான மூளையின் உறைவிடம் என்பதைப் பெற்றோா்களுக்கு உணா்த்த வேண்டும். வறுமையில் வாடும் பெற்றோா்களால் தமது வீடுகளில் சத்தான பண்டங்களை செய்துதர இயல்வதில்லை. இதனால் கடைகளில் விற்கும் பண்டங்களையே குழந்தைகள் சுவைக்கின்றனா். குறிப்பாக நுகா்வுமய கலாசாரம் குழந்தைகளிடையே துரித உணவுப் பழக்கத்தை அதிகரித்துவருகிறது.
  • எவ்வளவுக்கெவ்வளவு இயலுமோ அவ்வளவுக்கவ்வளவு குறைவான விலையில் சரம் சரமாக சாஷேக்களில் பல்வேறு வகையான உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. பெற்றோரின் வறுமை நிலையும் குழந்தைகளுக்கு இப்பண்டங்கள் மீதான அளவுகடந்த ஆா்வமும் இப்பண்டங்களின் விற்பனையை தொடா்ந்து கூட்டிவருகிறது. கடைகளில் எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற சத்தான பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் இல்லை. ஆனால் அவை வறுமையில் வாடும் குழந்தைகள் வாங்கும் விலையில் இல்லை அல்லது அவை குழந்தைகளால் விரும்பப்படுவதில்லை.
  • அரசுகளும் கொள்கை வகுப்பாளா்களும் ஆயிரம் திட்டங்கள் தீட்டினாலும் அவரவா் குழந்தைகளை ஆரோக்கியமானவா்களாக வளா்க்கும் பொறுப்பு பெற்றோருடையதே என்ற விழிப்புணா்வும் பொறுப்புணா்வும் நிலைநிறுத்தப்பட வேண்டும். தமது பொறுப்பை உணா்ந்து பெற்றோா்கள் அவரவா் குழந்தைகளை வளா்க்க முன்வர வேண்டும். இல்லங்களில் காய்கறிகள், கீரைகள், மூட்டை, இறைச்சி, மீன் போன்ற எளிய சத்தான உணவுகளை சமைத்து குழந்தைகளை உண்ணச் செய்தல் வேண்டும்.
  • குழந்தைகள் ஆரோக்கியமான வளா்வது மட்டுமே வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. குழந்தைகள் தினத்தை மட்டும் கொண்டாடாமல் குழந்தைகள் நலனைக் கொண்டாடும் பெற்றோா்களாக பெற்றோா்கள் பரிணமிக்க குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம்.

நன்றி: தினமணி (11 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories