TNPSC Thervupettagam

குழந்தைகள் பாதுகாப்பு: அரசின் பொறுப்பு என்ன?

January 9 , 2025 2 hrs 0 min 25 0

குழந்தைகள் பாதுகாப்பு: அரசின் பொறுப்பு என்ன?

  • இந்தியாவின் நாளைய சமூகமே குழந்தைகளும் இளைஞர்களும்தான். ஆனால், நாட்டின் எதிர்காலமான அவர்களில் பலரின் நிகழ்காலம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதுதான் சமகாலப் பெரும் அவலம். தற்போதைய சமூகக் கட்டமைப்பில் குழந்தை வளர்ப்பிடமாகக் குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால், பல குடும்பங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இவ்வாறான சூழ்நிலைகளால் குழந்தைகளின் உடல்நலன், மனம், கல்வி, முன்னேற்றம் ஆகியவை பின்தங்கியிருப்பதை உணரலாம். இது ஒரு நாட்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் அவலச் சூழல்.

​பாது​காப்​பின்​மையால் நிகழ்ந்த திருமணம்:

  • ராணிப்​பேட்டை மாவட்​டத்தின் அமராபுரம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் நிலையை உதாரண​மாகச் சொல்லலாம். அக்குடும்பத்தின் தலைவர் மாற்றுத்​திற​னாளி. மூன்றாண்​டு​களுக்கு முன் அவர் குளத்தில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது தவறி விழுந்து இறந்து​விட்​டார். அதன் பின்னர், கூலி வேலை செய்து தன் குழந்தை​களைக் காப்பாற்றி வந்தார் அவரது மனைவி. அவரும் சமைப்​ப​தற்கான காய் பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்ததால், இடுப்​புக்குக் கீழான அவரது இயக்கம் முடங்கி​விட்டது.
  • இதனால், அத்தம்ப​தியின் மூன்று பெண் குழந்தை​களும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தாய்க்கு உதவியாக இருந்​தனர். பெண் குழந்தைகள் அடிப்படை உரிமையான கல்வியைத் தவறவிட்டு​விட்​டனர். அவர்களில் ஒருவர் 17 வயது நிரம்​புவதற்குள் காதல் திருமணம் செய்து​கொண்​டார். தன்னுடைய எதிர்​காலத்​துக்​கும், நிகழ்​காலத்​துக்கும் உத்தர​வாதம் இல்லை என்ற அச்சமே அவரைத் திருமண உறவுக்குள் தள்ளி​யுள்ளது. இதைத் தனிப்பட்ட குடும்பப் பிரச்​சினை​யாகப் புறந்தள்ள முடியாது. இது போன்ற ஏராளமான குடும்​பங்கள் தமிழகத்தில் உள்ளன. அவர்களுக்​கெல்லாம் சமூகப் பாதுகாப்பை உறுதி​செய்வது அரசின் கடமை.

குழந்​தையின் வளர்ச்​சியில் பாதிப்பு:

  • குழந்தை ஆரோக்​கியமாக வளர வேண்டும்​ என்​றால், குழந்தையை வளர்க்கும் பெற்றோரின் மனநலன் முக்கிய​மானது. அதேநேரத்​தில், அக்குடும்பம் போதுமான பொருளாதார வசதியை​யும், மருத்​துவம், கல்வி, அரசின் குழந்தை நலத்திட்​டங்கள் போன்றவை குறித்த புரிதலையும் பெற்றிருப்பது அவசியம்.
  • ஆனால் இந்தியச் சமூகம், படிநிலை ஏற்றத்​தாழ்வுடைய சமூகம் என்பதால், பல குடும்​பங்கள் கல்வி​யிலும் சுகாதாரத்​திலும் பின்தங்​கி​யுள்ளன. இதனால் குழந்தை​களின் வளர்ச்சி மனதளவிலும், உடலளவிலும் பாதிப்​படைகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை முழுவதும் குழந்தை​களின் வளர்ச்​சி நிலை குன்றி​யிருப்பதை உணர முடியும்.
  • அங்கு வாழும் மக்கள் மலையாளி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்​தவர்கள். மலையின் தொலைக்​கோடியான கிராமம் கல்லிப்​பாறை. கிராமத்தில் உள்ள குழந்தைகள் ஒவ்வாமை, நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்​கப்​பட்​டிருந்​தனர். அங்குள்ள ஒரு குழந்தைக்கு மூளை வளர்ச்சி குன்றி​யுள்ளது. ஒரு வயது நிரம்பிய குழந்தைக்குத் தலைகூட நிமிர​வில்லை; ஒரு வயதுக்கான உடல் எடையும், வளர்ச்​சியும் இல்லை. இதற்கு மருத்​துவச் சிகிச்சை இதுவரை அளிக்​கப்​பட​வில்லை.
  • குழந்​தையின் தாய்க்கு அலோபதி பற்றிய விழிப்பு​ணர்வு இல்லாத​தா​லும், குறைந்​த​பட்சக் கல்வி, பொருளாதார வசதி அக்குடும்பத்​துக்கு உறுதி செய்யப்​ப​டாத​தா​லும், அவர்கள் குழந்தையை மருத்​துவ​மனைக்கு அழைத்துச் செல்லப் பயப்படு​கிறார்கள்.
  • அக்குடும்பத்​தினருக்கு இந்தியக் குடிமக்கள் என்பதற்குச் சாட்சியான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என எதுவுமே இல்லை. குழந்​தையின் தாயும் ஊட்டச்​சத்துக் குறைவால் பாதிக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்குத் தன்னுடைய வயதைக்​கூடச் சொல்லத் தெரிய​வில்லை. இச்சூழ்​நிலையில் வாழும் அக்குழந்தை நிகழ்​காலத்​திலேயே வெளியில் சொல்ல முடியாத வலியை அனுபவித்து​வரு​கிறது.
  • இவையெல்லாம் அரசாங்​கத்தின் அலட்சியப் போக்கு, சாதிய ஏற்றத்​தாழ்வுகள் ஆகியவற்றின் விளைவுகளே. குழந்தை​களின் வளர்ச்சி விகிதத்தில் சாதி அளவுகோலும் முக்கியப் பங்கு வகிப்​பதைச் சமீபத்திய ஆய்வு நிரூபிக்​கிறது. மலேசி​யாவின் மோனேஷ் பல்கலைக்​கழகத்தைச் சேர்ந்த ராஜேஷ் ராமச்​சந்​திரன், அசோகா பல்கலைக்​கழகத்தின் அஷ்வினி, தேஷ்பாண்டே ஆகிய இரண்டு வல்லுநர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு குழந்தை​களின் வளர்ச்​சியில் சாதி பெரும் தாக்கத்தைச் செலுத்து​வ​தாகக் குறிப்​பிடு​கிறது.
  • ஆதிக்கச் சாதிகளில் பிறந்த குழந்தை​களின் வளர்ச்​சியைக் காட்டிலும் பட்டியல் சாதியினர் / பழங்குடி​யினர் குழந்தை​களின் வளர்ச்சி குறைபட்​டுள்ள​தாக​வும், ஆண் குழந்தை​களின் வளர்ச்​சியைக் காட்டிலும், பெண் குழந்தை​களின் வளர்ச்சி குறைபட்​டுள்​ளதையும் ஆய்வு மேற்கோள் காட்டு​கிறது. வழக்கமாக வெறுமனே வயதுக்கு ஏற்ற உயரத்​தை​யும், உடல் எடையையும் மட்டுமே வைத்துக் குழந்தைகள் வளர்ச்சி அளவிடப்​படு​கிறது.
  • வளர்ச்சி குன்றி​யிருப்​ப​தற்கு மரபியலும் காரணம் என்றும் காலங்​கால​மாகச் சொல்லப்​படு​வதால் ஊட்டச்​சத்துக் குறைபாடு பெரியளவில் பேசு பொருளாக​வில்லை. எனவே சுகாதாரம், ஊட்டச்​சத்து, ஆரம்ப​காலக் கற்றல் ஆகியவற்றை உள்ளடக்​கும்​போதுதான் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அளவிட முடியும் என்று ஆய்வை மேற்கொண்ட அஷ்வினி, ராஜேஷ் இருவரும் குறிப்​பிடு​கின்​றனர்.

வீடு என்கிற கட்டு​மானம்:

  • ஒரு குடும்பத்தின் அமைதிக்​கும், குழந்தை​களின் மனநலனுக்கும் குறைபாடற்ற வீடு (கட்டிடம்) என்பது இன்றியமை​யாதது. இதில் கிராமம், நகரம் என்று வித்தி​யாசம் இல்லாமல் விளிம்புநிலை மக்களின் வீடுகள் குறுக லானவை. இதற்கு இடப்பற்​றாக்குறை மட்டும் காரணமல்ல. இது சமூகத்தில் நிலவும் ஏற்றத்​தாழ்வு​களின் பிரதிபலிப்பே. இவ்வாறான வீடுகளில் தனியுரிமை (Right to privacy) என்பதற்கே வாய்ப்​பில்லை. இதனால் தம்பதிகள் இருவருக்கும் இடையிலான சண்டைகளாக இருந்​தாலும் சரி, உறவாக இருந்​தாலும் சரி அவர்களுக்கு எந்தவிதத் தனியுரிமையும் கிடையாது.
  • தனியுரிமை இல்லாததால் குடும்பத்தின் குழந்தைகள் எல்லா​வற்​றையும் கவனிக்​கின்​றனர். தாய் - தந்தை உறவின் ஈர்ப்பால் குழந்தைகள் சிறு வயதிலேயே திருமண உறவுக்குள் தள்ளப்​படும் அவலமும், கசப்பான குடும்ப அனுபவங்​களால் குழந்தைகள் குற்ற​வாளி​யா​வதும் தொடர்ச்​சியாக நிகழ்​கின்றன. சுகாதா​ரமான, தனியுரிமை பாதுகாக்​கப்​படும் வகையிலான வீட்டை உறுதி​செய்வது அரசாங்​கத்தின் கடமை.

குடும்ப வன்முறை:

  • குடும்​பங்கள் அன்பையே அடிப்​படை​யாகக் கொண்டிருக்க வேண்டும்; வன்முறையை அடிப்படை​யாகக் கொண்டிருந்தால் அது ஒட்டு மொத்தச் சமூகத்​துக்கும் சாபக்​கேடு. மண உறவில் கசப்பான அனுபவங்கள் இருவருக்கும் ஏற்படலாம். ஆனால், வன்முறையால் பாதிக்​கப்​படுவது பெரும்​பாலும் பெண்களே. அதேநேரத்​தில், குழந்தை வளர்ப்பும் பெண்கள் தலையில் திணிக்​கப்​பட்​டிருக்கும் சூழ்நிலை​யில், வன்முறையால் பாதிக்​கப்பட்ட தாய் தனது கோபத்தையும் வருத்​தத்​தை​யும், தனக்கு ஏற்பட்ட காயங்​களையும் குழந்தை​களிடமே வெளிப்படுத்து​கிறார்.
  • இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்​கப்​படுவர். அவர்கள் வளர்ந்த பிறகும் அதன் தாக்கத்தை அனுபவிப்பர். குழந்தை​களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க, குழந்தையை வளர்க்கும் தாயின் மனநிலையைப் பாதுகாப்பது அவசியம் என்பதைச் சமூகமாக நாம் உணர வேண்டும்.

அரசின் கடமை என்ன?

  • சமுதா​யத்தில் மனித வளத்தைப் பேணிப் பாதுகாக்கும் முழுக் கடமையும் அரசுக்கே உள்ளது. பொருளா​தா​ரத்​திலும் குடும்ப அமைப்பு முறையிலும் பாதுகாப்​பற்று உள்ள குடும்​பங்​களின் குழந்தை​களின் பராமரிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும்.
  • குழந்தை நலன் என்பது குடும்ப நலனை அடிப்​படை​யாகக் கொண்டிருக்​கும்​பட்​சத்​தில், வருங்​காலங்​களில் குடும்​பங்​களின் பொருளா​தா​ரத்​தையும் உறுதி​செய்யும் வகையில் அரசுத் திட்டங்கள் வரையறுக்​கப்பட வேண்டும். தனியுரிமை​யுடன் கூடிய வீட்டை அனைவருக்கும் சாத்தி​யப்​படுத்தும் கடமையும் குடும்​பங்களை ஜனநாயகப்​படுத்தும் கடமையும் அரசுக்கு உள்ளது. குழந்தை​களுக்காக இக்​கோரிக்கைகளைக் கூட்டாக வலி​யுறுத்தும் கடமை சமூகமாக நமக்​கும் உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories