TNPSC Thervupettagam

குழந்தையின்மை சிகிச்சையும் பொதுச் சுகாதாரத்தின் அங்கமே

November 30 , 2023 408 days 318 0
  • ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ஏற்கெனவே செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செயற்கைக் கருவூட்டல்சிகிச்சையும் இணைக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த இதுபோன்ற ஆக்கபூர்வமான வாக்குறுதிகள், செயல்வடிவம் பெற வேண்டியது அவசியம்.
  • குறைந்த வருமானமும் வாழ்க்கை நெருக்கடிகளும் கொண்ட இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், குழந்தையின்மை என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஆறு தம்பதியரில் ஒருவருக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் கட்டாயம் மருத்துவ உதவி பெற வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் செயற்கைக் கருவூட்டலுக்கான இந்தியச் சங்கமும் தெரிவித்துள்ளன.
  • இயல்பான வழிமுறைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையை நோய்என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தபோதும், இந்தியாவில் குழந்தைப்பேறின்மை என்பது அவமானமாகவும் சமூக இகழ்ச்சியாகவும் கருதப்படுகிறது. குழந்தைப்பேறின்மைக்கான உடல் குறைபாடுகள் குறித்துப் பேசவும் அவற்றைச் சரிசெய்வதற்கான மருத்துவச் சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கவும் இந்தியச் சமூகத்தில் பெரும் மனத்தடை நிலவுகிறது.
  • குழந்தைப்பேறின்மைக்கான சிகிச்சைகளில் ஒன்றான செயற்கைக் கருவூட்டல்முறைக்கு நகரத்தையும் மருத்துவமனையையும் பொறுத்து ரூ.1 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகிறது. ஒரு சுற்று சிகிச்சைக்குத்தான் இந்தக் கணக்கு. முதல் முயற்சி வெற்றியடையவில்லை என்றால், மீண்டும் சிகிச்சை அவசியம் என்கிற நிலையில், ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தொகை பெரும்சுமையாக இருக்கிறது. தவிர, குழந்தை மீதானமக்களின் ஏக்கத்தையும் எப்பாடுபட்டாவது குழந்தை பெற்றுவிட வேண்டும்என்கிற நெருக்கடியையும் பயன்படுத்தி போலி செயற்கைக் கருவூட்டல் மையங்கள் பல செயல்பட்டுவருவதையும் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம்.
  • இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், குழந்தையின்மை சிகிச்சை மையங்களை அரசு மருத்துவமனைகளில் நிறுவ வேண்டும்.
  • கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு மருத்துவமனையில் செயற்கைக் கருவூட்டல் பிரிவைத் தொடங்கியதன்மூலம், இந்தச் சிகிச்சையை அரசு மருத்துவமனையில் தொடங்கிய முதல் இந்திய மாநிலம் என்கிற பெருமையை கோவா பெற்றுள்ளது.
  • தெலங்கானா மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் செயற்கைக் கருவூட்டல் பிரிவு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. மேலும், இரண்டு மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் செயற்கைக் கருவுறுதலுக்கான சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து, அதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன. இவையெல்லாமே மக்களின் ஆரோக்கியம் சார்ந்த அவசியமான முன்னெடுப்புகள். இவை அனைத்து மாநிலங்களிலும் நிகழ வேண்டும்.
  • குழந்தையின்மைக்கான சிகிச்சையும் பொதுச் சுகாதாரத்தின் ஓர் அங்கம்தான் என்பதை மத்திய-மாநில அரசுகள் புரிந்துகொண்டு அதற்கேற்பப் பொதுச்சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும். மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் குழந்தையின்மை சிகிச்சை மையங்களை அரசு நிறுவ வேண்டும்.
  • பெரும்பான்மை மக்கள் பயன்பெறும் வகையில் அரசின் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்திலும் இந்தச் சிகிச்சையை இணைக்க வேண்டும். அரசுஇந்தத் திட்டத்தை முன்னெடுக்கும்போது அது மக்களின் ஆரோக்கியம் சார்ந்த தேவையைப் பூர்த்திசெய்வதுடன், குழந்தையின்மை சிகிச்சை குறித்த சமூகக் கண்ணோட்டத்தையும் மாற்றும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories