TNPSC Thervupettagam

கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர்… விடாமல் துரத்தும் பயங்கரம்!

August 13 , 2019 1922 days 969 0
  • நம் அந்தரங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றின் வழியாக நம்மை எல்லோரிடமும் காட்டிக்கொள்வதற்குத் துடித்துக்கொண்டிருக்கிறோம். ஒரே மாதிரியான விளம்பரங்கள் நம்மைப் பின்தொடர்ந்துகொண்டிருப்பதைக் கண்டு அரண்டுபோகிறோம்.
  • நமது தனிப்பட்ட விஷயங்களின் தரவுகள் சுரண்டப்படுவதை நாம் வெறுக்கிறோம்; ஆயினும், நம் தகவல்களைச் சுரண்டாத ‘டக்டக்கோ’ (DuckDuckGo) தேடுபொறியைவிட கூகுளையே நாடுகிறோம்; ஒரு கொலைகாரனைப் போல கூகுள் நம்மைப் பின்தொடர்வதை நாம் பொருட்படுத்துவதேயில்லை. ஃபேஸ்புக்கையும் அப்படியே பயன்படுத்துகிறோம்; நம் உள்ளுறுப்புகளை உருவியெடுப்பதுபோல் நம் தகவல்களை அது எடுத்துக்கொண்டிருப்பதையும் நாம் பொருட்படுத்துவதேயில்லை.
  • நமது செயலிகளைத் தரவிறக்கும்போது ‘ஒப்புக் கொள்கிறேன்’ என்பதையே சொடுக்குகிறோம். இத்தனைக்கும் அந்தச் செயலிகளெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டிருப்பவை; நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம், என்ன மாதிரியான இசை கேட்கிறோம், நமக்குக் கருமுட்டை எப்போது வெளிப்படும் என்ற தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்பவை என்பதை நன்கு அறிந்தே அந்தச் செயலிகளை நாம் தரவிறக்குகிறோம்.
உடலற்ற இணைய அனுபவம்
  • ஆக, இப்போது ஒரு கேள்வி எழுகிறது. நமக்கு மிகவும் முக்கியம் என்று நாம் கருதும் அந்தரங்கம் தொடர்பான விஷயங்களுடன் முரண்படும் வகையில் நாம் ஏன் நடந்துகொள்கிறோம்? ‘அந்தரங்க முரண்பாடு’ என்ற நிகழ்வை எப்படிப் புரிந்துகொள்வது? இது தொடர்பாக, குற்றவுணர்ச்சியிலும் இந்தப் பிரச்சினையை நன்றாகப் புரிந்துகொள்வதற்காகவும் சமீப வாரங்களாக நிறைய பேருடன் தொலைபேசியில் பேசினேன்; நிறைய படித்தேன், பெரும்பாலானவை இணையத்தில். கடைசியில் பார்த்தால் அந்தரங்கம், தனியுரிமை குறித்த புத்தகங்கள், இணைய ஒலிக்கோப்புகள் போன்றவை தொடர்பான விளம்பரங்களை கூகுள் எனக்கு முன்பாகத் தொடர்ச்சியாகக் கொட்ட ஆரம்பித்தது.
  • கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜாய்ஸ் சியல்ஸ் என்ற தனியுரிமைச் செயல்பாட்டாளர் ஒரு விளக்கம் கூறுகிறார். இணையத்தில் இருக்கும்போது நாம் யாராக, என்னவாக இருக்கிறோம் என்பதை இன்னும் புரிந்துகொள்ள ஆரம்பிக்கவே இல்லை என்கிறார் அவர். இதற்குக் காரணம், இணைய அனுபவம் என்பது உடலற்ற ஒரு அனுபவமாக இருப்பதுதான். இணையவெளியின் மூடுபனியூடே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது, நாம் தனியர்களாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அப்படி அல்ல. நாம் கண்காணிக்கப்படுகிறோம், பின்தொடரப்படுகிறோம்; நம்மால் அதைக் காணவோ உணரவோ முடியவில்லை என்பதால் அது நமக்குத் தெரிவதில்லை.
அடிப்படையில் நாம் சமூக மனிதர்களே!
  • இதுதான் நாம் மனசாட்சியைக் கொஞ்சம் அடக்கிவைத்துவிட்டு இணையத்தில் திரிவதற்கும் காரணம். ஏனெனில், நாம் கண்காணிக்கப்படுவதற்கும் பின்தொடரப்படுவதற்குமாக அவமானத்துக்குள்ளாகும் வகையிலான விலையைப் பெரும்பாலானோர் கொடுப்பதில்லை. “நிர்வாணமாக நடந்துபோய்க் கொண்டிருந்தாலும் அதனால் நாம் உணரக்கூடிய விளைவுகள் ஏதும் ஏற்படாததன் பெரும் அனுபவம் நமக்குக் கிடைத்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் சியல்ஸ். அப்படி இருக்கும்போது ஆடை அணிவதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?
    ஆகவே, நம் போக்கில் போய்க்கொண்டிருக்கிறோம். இதற்கிடையே ஒவ்வொருவரும் நம் தேடல்கள், விருப்பங்கள், விநோத ஆசைகள், பதற்றங்கள் குறித்துத் தரவுகளைத் திரட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
  • கூகுள், அமேசான், ஃபேஸ்புக், யூட்யூப், பேண்டோரா, பின்ட்ரெஸ்ட், தி வெதர் சேனல், ரெடிட், விக்கிபீடியா, போர்ன்ஹ்ப், நாம் படிக்கும் இணைய செய்தித்தாள், நம் வங்கி, நம் செல்போன் சேவையளிப்பவர்கள் என்று எல்லோருமே திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். “நாமெல்லாம் அடிப்படையில் சமூக மனிதர்கள், தனிப்பட்ட முயற்சியின் மூலம்தான் தனிமனிதர்கள் ஆகிறோம்” என்று தரவு நிறுவனம் ஒன்றின் நிறுவனரான டானா பாய்ட் எழுதியது ரொம்பவும் பொருத்தமானது.
  • “நமது தரவுகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது என்ற உணர்வே நிலவுகிறது” என்கிறார் கார்னெஜீ மெலான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அக்விஸ்ட்டி. “அதற்கான சாதனங்கள் மிகவும் நேர விரயம் ஆக்குபவை. அவற்றால் எந்தப் பலனும் இல்லாமலும் போகலாம். ஏனெனில், உங்களுடைய தரவு ஏற்கெனவே இணையவெளியில் இருந்துகொண்டிருக்கிறது.” நம்மால் ஏதும் செய்ய முடியாது என்று நினைப்பதுதான் அந்தரங்கம் தொடர்பான முரண்பாட்டை விளக்குவதாகும். கைவிடப்பட்ட நிலையில் மனிதர்கள் இப்படியொரு முடிவுக்குத்தான் வருவார்கள்.
  • ‘கண்காணிப்பு முதலாளித்துவத்தின் யுகம்’ என்ற நூலின் ஆசிரியரான ஜுபோஃப் மக்களின் பழக்கவழக்கங்கள் குறித்த தரவுகளைப் பெருநிறுவனங்கள் எப்படியெல்லாம் சுரண்டுகின்றன என்பதையும், சமூகத்தில் இதனால் ஏற்படும் விளைவு கள் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார். இணையத்தில் நாம் கவனக்குறைவாக இருக்கிறோம் என்று திட்டுவது அபத்தமானது என்கிறார் அவர். ஏனெனில், நமக்கு வேறு வாய்ப்பே கிடையாது. இணையத்தில்தான் நம் தனிப்பட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன, ஏனெனில், நிதர்சன வாழ்வில் அவை பூர்த்தியாவதில்லை. இணையத்தில் இருக்கும்போது நம்மில் பெரும்பாலானோரும் உணராத விஷயம் என்னவென்றால், நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களெல்லாம் நம் அந்தரங்கம் குறித்த எண்ணங்களை நமக்குத் தெரியாமல் எப்படி மாற்றியமைத்துக்கொண்டிருக்கின்றன என்பதுதான். தொடர்ச்சியாக நமது நடத்தையையும் மாற்றியமைக்கின்றன.
அச்சுறுத்தும் தானியங்கித்தன்மை
  • என் சொந்த வாழ்க்கையில் நான் முதன்முதலில் ஃபேஸ்புக்கில் யாருடைய நட்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன் என்பதை நினைத்துப்பார்க்க முயல்கிறேன். அவருடைய பெயர் எனக்கு நினைவுக்கு வரவில்லை. அவர் எனக்கு எந்த வகையிலும் தெரிந்தவர் இல்லை என்பது மட்டும்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இருந்தும் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நான் ஒரு புத்தகம் எழுதியிருந்ததால் அதைப் பரவலாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2014 வாக்கில் இதுபோன்று நான் அதிகம் செய்திருக்கிறேன்.
  • எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, இந்த எதேச்சையான மனிதர்களில் ஒருவர் ஃபேஸ்புக் மெஸேஞ்சரில் என்னைப் பற்றி மோசமான ஒரு கருத்தைத் தெரிவிக்கும் வரை. உடனே அவரை நான் நட்பு நீக்கம் செய்தேன். என் மீதே எனக்குக் கோபமும் வந்தது. ஏனெனில், நான் அவரை நட்பு நீக்கம் செய்வதுவரை அந்த நபர் என் குழந்தைகளின் படங்களை ஃபேஸ்புக்கில் பார்த்திருக்கக்கூடும், என் திருமணம் எங்கே நடந்தது என்பதைப் பற்றி அறிந்திருக்கக்கூடும், இன்னும் பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்கக்கூடும். என்ன காரியம் செய்திருக்கிறேன் நான்!
  • பெரும் தொழில்நுட்பங்களெல்லாம் நமது விருப்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை மட்டுமல்ல, அதை உருவாக்கியவர்களின் விருப்பங் களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டவை. அவற்றிலெல்லாம் அச்சுறுத்தும் ஒரு தானியங்கித் தன்மை இருக்கிறது. (‘நான் ஒப்புக்கொள்கிறேன்’, ‘கிளிக்’). ஏதோ நாமெல்லாம் எந்திர மனிதர்களைப் போல! இதில் முரண் எது தெரியுமா? இந்தத் தொழில்நுட்பங்களிடம் விழுந்துகிடக்கும் பெருந்திரள் மக்கள்தான் தங்கள் அந்தரங்கம் குறித்து தீர்க்கமான எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே.

நன்றி: இந்து தமிழ் திசை(13-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories