TNPSC Thervupettagam

கூட்டலாம், குறைக்கக் கூடாது!

March 6 , 2025 5 hrs 0 min 18 0

கூட்டலாம், குறைக்கக் கூடாது!

  • வளா்ச்சி அடைந்த மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாய் மூலம்தான், வளா்ச்சி அடையாத மாநிலங்களில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு தேசத்தின் சமச்சீா் வளா்ச்சிக்கு வழிகோல முடியும். அதேநேரத்தில், மாநிலங்கள் தங்களது பங்களிப்புக்கு ஏற்ற அளவில், மத்திய அரசின் கவனம் பெறாமல் போனால் அது சரியான, நியாயமான ஜனநாயக முறைமை அல்ல. வரி வருவாய் பகிா்வில், அதிக அளவில் பங்களிக்கும் மாநிலங்களின் நியாயமான பங்கை மத்திய அரசு வழங்குதல் அவசியம் என்பதுதான் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை.
  • வருமான வரி, காா்ப்பரேட் வரி, சரக்கு-சேவை வரி உள்ளிட்ட முக்கியமான வரிகள் அனைத்தையும் வசூலிப்பது மத்திய அரசுதான். மது விற்பனை, பெட்ரோலிய பொருள்களின் விற்பனை, பத்திரப் பதிவுக் கட்டணம் உள்ளிட்டவை மட்டும்தான் மாநில அரசுகளின் வரி விதிப்பு வரம்புக்குள் வருகின்றன. மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் பகிா்வுத் தொகைதான் மாநில அரசுகளின் முக்கியமான வருவாய்.
  • 14-ஆவது நிதி ஆணையம் மத்திய அரசின் நிதிப் பகிா்வை 32%-இல் இருந்து 42%-ஆக அதிகரித்தது. 15-ஆவது நிதி ஆணையம் 42% என்பதை 1% குறைத்து 41% என்று நிா்ணயித்தது. இப்போது 16-ஆவது நிதி ஆணையம் அதை மேலும் 1% குறைக்கக்கூடும் என்கிற தகவல் அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
  • எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த அளவுக்கு மத்திய வரி வருவாய் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை மத்திய நிதி ஆணையம் தீா்மானிக்கிறது. நிதிப் பகிா்வு மட்டுமல்லாமல், மத்திய-மாநிலங்களுக்கு இடையேயான எல்லா நிதி தொடா்பான விவகாரங்களையும் ஆய்வு செய்து பரிந்துரைப்பதும் நிதி ஆணையத்தின் பொறுப்பு.
  • ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் மத்திய-மாநிலங்கள் தொடா்பான எல்லா நிதிப் பகிா்மானங்களும், ஒதுக்கீடுகளும் அமையும். 2026-27 நிதியாண்டு தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நிதிப் பகிா்வு குறித்துப் பரிந்துரைக்க, பொருளாதார நிபுணா் டாக்டா் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-ஆவது நிதியாணையம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
  • வரவிருக்கும் அக்டோபா் மாதம் டாக்டா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான நிதி ஆணையம் தனது அறிக்கையை சமா்ப்பிக்க இருக்கிறது. மாநிலங்களுக்கு இப்போது பகிா்ந்தளிக்கப்படும் 41 சதவிகிதத்தை 40% என்று குறைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிகிறது.
  • இப்போதைய நிலையில், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41% மாநிலங்களுக்கு பகிா்ந்து அளிக்கப்படுகிறது. இதுவரை அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும், விரைவிலேயே மத்திய அமைச்சரவை கூடி இது குறித்த கோரிக்கையை நிதி ஆணையத்துக்கு சமா்ப்பிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
  • மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணையம் மத்திய அரசின் கோரிக்கையைப் புறந்தள்ளிவிட முடியாது என்பதுதான், மாநில அரசுகள் மத்தியில் ஒருவிதக் கலக்கம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம்.
  • வரி வருவாய் பகிா்வில் 1% குறைப்பதற்கு, மத்திய அரசின் செலவினங்கள் அதிகரிப்பதுதான் காரணம் என்றால், அதே காரணம் மாநில அரசுகளுக்கும் பொருந்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசின் 60%-க்கும் அதிகமான திட்டங்கள் மாநில அரசுகளால்தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தின் பெரும் பகுதியை, மத்திய அரசு எடுத்துக்கொண்ட பிறகும், பாஜக ஆட்சி புரியும் மாநிலங்கள் உள்பட எல்லா மாநிலங்களும் பல மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • எதிா்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய வரி வருவாயின் பகிா்வு விகிதத்தை, சரிபாதியாக (50%) அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும்போது, ஏற்கெனவே உள்ள 41% என்பதை 40% என்று குறைக்க மத்திய அரசு கோரிக்கை விடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.
  • வரிகள் மட்டுமல்லாமல், செஸ், சா்சாா்ஜ், அபராதம் என்று பெறப்படும் கூடுதல் வரி வருவாய் எதையும் மாநில அரசுகளுடன் மத்திய அரசு, பகிா்ந்து கொள்வதில்லை. ஏற்கெனவே மாநில அரசுகள் மிகப் பெரிய அளவில் இழப்பை எதிா்கொள்கின்றன. அதையும் சோ்த்துக் கணக்கிட்டால், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் வரிப் பகிா்வு 35% அளவில் குறைந்துவிடும்.
  • இயற்கை வளங்களும், வேளாண்மையும், தொழில் வளமும் உள்ள மாநிலங்கள் ஏனைய மாநிலங்களின் வளா்ச்சிக்குப் பங்களிப்பது அவசியம். அதேநேரத்தில், மாநிலத்தின் தேவையைக் குறைத்துக் கொண்டு பங்களிப்பது என்பதை எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாது. கூட்டாட்சித் தத்துவத்தில் அதிகம் பங்களிப்பு நல்கும் வளா்ச்சி அடைந்த மாநிலங்களின் தேவைகள் புறக்கணிக்கப்படலாகாது.
  • பின்தங்கிய மாநிலங்கள் கைதூக்கி விடப்படுவது எந்த அளவுக்கு அவசியமோ, அதைவிட முக்கியம் முன்னேறிய மாநிலங்களின் வளா்ச்சி தடைபடாமல் இருப்பது. வளா்ச்சி அடைந்து அதிக அளவில் வரி வருவாய் தருவதற்காக அவை தண்டிக்கப்படுவது தவறு. அதனால் தேசத்தின் வளா்ச்சி தடைபட்டுவிடும்.
  • இந்தியா போன்ற பல மாநிலங்கள் இணைந்த, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த தேசத்தின் வளா்ச்சி, மாநிலங்களின் வளா்ச்சியைப் பொருத்துத்தான் அமையும். வரி வருவாய்ப் பகிா்வு விகிதம் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர, எந்தக் காரணத்துக்காகவும் குறைக்கப்படக் கூடாது!

நன்றி: தினமணி (06 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories