TNPSC Thervupettagam

கூட்டாட்சிக்கு உரிய அதிகாரம் அளித்திருக்கிறதா நம் அரசமைப்பு?

July 23 , 2019 1952 days 1092 0
  • 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து கூட்டாட்சித் தத்துவம் தொடர்பாகப் பல்வேறு பிரச்சினைகள் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து தோன்றியவண்ணம் இருக்கின்றன. ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தில் தொடங்கி ‘ஒரே நாடு – ஒரே ரேஷன் அட்டை’ என்ற முழக்கம் வரை அவற்றைப் பட்டியலிடலாம்.
  • மாநிலங்கள் உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மத்திய அரசின் அதிகாரங்கள் இவற்றையெல்லாம் பேசும்போது, நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. அது, இந்திய அரசமைப்புச் சட்டம் எப்படியான கூட்டாட்சியாக அமைத்திருக்கிறது என்பதுதான்; அப்படிப் பார்த்தால், ‘சமச்சீரற்ற கூட்டாட்சி’யையே நம்முடைய அரசமைப்பு கட்டமைத்திருக்கிறது.
  • நம்முடைய அரசமைப்புச் சட்டப்படி, இந்தக் கூட்டாட்சியில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் தனித்தனியாகவும், இரு அரசுகளுக்கும் பொதுவாகவும் வழங்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர, ‘எஞ்சிய அனைத்தும்’ மத்திய அரசுக்கே உரியது என்று அரசமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது. அதாவது, அதிகாரங்களைப் பொறுத்தவரையில், மத்திய அரசுக்குச் சார்பாக அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டிருக்கிறது.
அதிகாரம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா?
  • இது பல இடங்களில் மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. உதாரணமாக, மத்திய அரசும் மாநில அரசுகளும் சட்டமியற்றும் அதிகாரமுள்ள பொது அதிகாரப் பட்டியலில், மத்திய அரசும் மாநில அரசுகளும் தனித்தனியாகச் சட்டங்கள் இயற்றி, அவற்றில் எதை ஏற்பது என்ற பிரச்சினை வந்தால்,  மத்திய அரசு இயற்றிய சட்டமே செல்லும் என்று மத்திய அரசுக்குச் சாதகமாக, திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்படாத விஷயங்கள் ஏதும் இருந்தால் அவை மத்திய அரசுக்கு உரியது என்கிறது அரசமைப்புச் சட்டம். மாநில அரசுகளுக்குச் சட்டப்படியான தலைவர் மத்திய அரசால் நியமிக்கப்படும் மாநில ஆளுநர்கள்தான். சட்டப் பேரவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டால் அரசை அமைக்க வேண்டியது யார் என்பதைத் தீர்மானிக்கவல்ல அதிகாரம் மாநில ஆளுநருக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த அதிகாரம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்று ஊடகங்களும் பொதுமக்களும் இப்போது கண்காணிக்கத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரங்களின் படி, ஒரு மாநிலத்தைப் பிரிக்கவும், புதிய மாநிலங்களை உருவாக்கவும், எல்லைகளை மறுவரையறை செய்யவும், இப்போதுள்ள எல்லைகளை ரத்து செய்யவும் அதிகாரம் படைத்தது மத்திய அரசு. 1950-களில் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
வரலாற்றுக் காரணங்கள்
  • மத்திய அரசுக்குச் சார்பாக அரசியல் சட்டம் அதிக அதிகாரங்களை வழங்கியதற்குக் குறிப்பிட்ட வரலாற்றுக் காரணங்கள் இருந்தன. அந்தச் சூழல்களும் அதற்கான நியாயங்களும் இப்போது இல்லை. சுதந்திரம் பெற்ற புதிய அரசு என்பதாலும் ஏராளமான சுதேச சமஸ்தானங்களை மிக அண்மையில் சேர்த்து உருவாக்கப்பட்ட நாடு என்பதாலும் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டிய மிகப் பெரிய கடமை புதிய அரசுக்கு இருந்தது. அதற்கு இப்படியொரு வலுவான அரசமைப்புச் சட்டமும் தேவைப்பட்டது. இப்போது இந்தியா உடைந்து சிதறும் அபாயம் ஏதுமில்லை. அதுமட்டுமில்லாமல், நாட்டை முன்னேற்ற மத்திய அரசிலிருந்து எடுத்த முயற்சிகளைவிட, சில மாநில அரசுகள் தத்தமது பகுதிகளுக்குள் எடுத்துள்ள முயற்சிகள் வலுவானவையாகத் தொடர்கின்றன. கூட்டாட்சி முறை சொல்லாட்சியில் கூறுவதானால் ‘மாநிலங்கள் ஜனநாயகத்தின் சோதனைக் கூடங்களாக’ வளர்ந்துள்ளன. உதாரணத்துக்கு தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்வோம். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது ஏழை மாணவர்கள் கல்வி பயில ஊக்குவிப்பாக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வலுப்படுத்தினார். அந்தத் திட்டம் பிறகு தமிழ்நாட்டிலேயே விரிவுபடுத்தி செம்மைப்படுத்தப்பட்டதுடன் தேசிய அளவில் மதிய உணவு வழங்குவதற்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
சுதந்திரம்
  • மாநிலங்களுக்கு அதிக செயல்பாட்டுச் சுதந்திரத்தை வழங்கினால் அவை புதுமையான பொருளாதார – சமூக சோதனைகளைச் செய்து வெற்றி காண்கின்றன. இந்த மாநில வெற்றி, பிறகு மத்திய அரசால் கையாளப்பட்டு தேசிய அளவில் அமலாக்கப்படுகிறது. எனவே, இந்த உண்மைகளும் அனுபவங்களும் நமக்கு உணர்த்துவது இதைத்தான்: அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னால் அதைப் புரிந்துகொண்டதற்கும், இப்போது நாம் புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது! மத்திய அரசுக்குச் சார்பாக அதிக அதிகாரங்களை அரசமைப்புச் சட்டம் வழங்கக் காரணமாக இருந்த பல சூழ்நிலைகளும், காரணங்களும் இப்போது இல்லை. இந்தியா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், இனங்கள், மதங்கள், வாழ்க்கை முறைகளைக் கொண்டோர் வாழும் நாடு. இந்த பன்மைத்துவத்தைப் புறக்கணித்து விட்டு ‘ஒரே நாடு – ஒரே…’ என்ற பெயரில் எதையும் திணிப்பது தேவையற்றது மட்டுமல்ல, எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தவல்லது.
தெளிவான கண்ணோட்டம் அவசியம்
  • அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் மத்திய அரசுக்கு ஆதரவாக அதன் கட்டமைப்பில் சமச்சீரற்ற வகையில் சார்பாக இருக்கிறது. எனவே பிரச்சினைகள் என்று வரும்போதெல்லாம் கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் சார்பாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும். கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காதபோது, 48 மணி நேரத்துக்குள் பேரவையைக் கூட்டி முடிவு செய்ய வேண்டும் என்று மாநில ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், புதிய அரசு அமைப்பதில் ஆளுநரால் ஏதும் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டது. அதேசமயம், டெல்லி மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் யாருக்கு அதிகாரம் என்ற போட்டி, வழக்காக மாறியபோது, கூட்டாட்சிக் கொள்கை பற்றி அதிகம் கவலைப்படாமல், மத்திய அரசுக்கு சார்பாகவே கருத்து தெரிவித்திருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை இரு விதமாகவும் இருந்திருக்கிறது, ஆனால், எதிர்காலத்தில் இதில் தெளிவான கண்ணோட்டமும் பயணமும் அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (23-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories