TNPSC Thervupettagam

கெட்ட போரிடும் உலகம் 2024

September 19 , 2024 118 days 138 0

கெட்ட போரிடும் உலகம் 2024

  • லெபனானில் பேஜர் தொலைத்தொடர்பு கருவிகள், வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறியதில் ஒரு குழந்தை உள்பட 21 பேர் உயிரிழந்ததும், பல்வேறு இடங்களில் பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறியதில் 2,750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இவர்களில் 170 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
  • இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரால் பிராந்திய மோதல் ஏற்கெனவே உருவாகிவிட்ட சூழலில் இந்தத் தொழில்நுட்பத் தாக்குதல் பிரச்னையின் தீவிரத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த மோதல் எங்கே போய் முடியும் என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
  • லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் பயன்படுத்திய இந்த பேஜர் கருவிகள், வாக்கி டாக்கிகள் செப்டம்பர் 17, 18-ஆம் தேதிகளில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. காஸாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை நடத்திவரும் நிலையில், ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து இந்த அதீத திறன் கொண்ட தொழில்நுட்பத் தாக்குதலை இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட்டும், இஸ்ரேல் ராணுவமும் இணைந்து நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. லெபனான் அரசு மற்றும் ஹிஸ்புல்லாக்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.
  • இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லைப் பகுதியில் இருந்த இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாக்களின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் இஸ்ரேலியர்களை குடியமர்த்த தீர்மானித்தது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம். அடுத்த நாளே பேஜர் வெடிப்புச் சம்பவங்கள் நடந்திருப்பது இஸ்ரேல் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
  • தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் கடந்த காலங்களில் தங்களின் எதிரிகளின் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. மரபு ரீதியிலான போர் முறைகள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் எவ்வாறெல்லாம் உருவெடுக்கக்கூடும் என்கிற அச்சத்தை இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.
  • இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான சிசிடிவி விடியோ காட்சிகள் திரைப்படங்களில் வருவதுபோன்று உள்ளன. சூப்பர்மார்க்கெட் ஒன்றில் பழங்களை வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபரின் பையில் இருந்த பேஜர் வெடித்துச் சிதறி அவர் கீழே விழுவதும், அந்த சப்தத்தைக் கேட்டு அருகில் நின்றவர்கள் பயந்து ஓடுவதும் போன்ற காட்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
  • தைவானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ஹிஸ்புல்லாக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த பேஜர்களில் சிறிய அளவிலான வெடிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பேஜரிலும் பேட்டரிக்கு அருகே இந்த வெடிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், ரிமோட் மூலம் அந்த வெடிபொருளை வெடிக்கச் செய்திருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
  • உலகம் முழுவதும் பேஜர் கருவிகளின் பயன்பாடு பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனால், கைப்பேசிகளைப் பயன்படுத்தினால் அவற்றைக் கொண்டு ஹிஸ்புல்லா படையினரின் இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக ஹிஸ்புல்லா படையினர் பேஜர் கருவிகளை தங்களது தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த பேஜர் கருவிகளையே ஆயுதமாக்கி அவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுவது உண்மையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
  • ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். பேஜர் கருவிகள் ஆங்காங்கே வெடித்து, அதை வைத்திருந்தவர்கள் மட்டுமன்றி சாலைகளில் சென்ற பொதுமக்களும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த விடியோ காட்சியைப் பார்த்தவர்களின் மனதை பதைபதைக்க வைத்தது.
  • 1949, ஜெனீவா மாநாட்டின்போது நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அதில் ஒன்று சர்வதேச மனிதாபிமான சட்டத்தை உருவாக்குதல். அந்தச் சட்டத்தின்படி போரில் பங்கேற்காத அப்பாவி மக்கள் போரால் பாதிக்கப்படுவது பாதுகாக்கப்படுகிறது.
  • இந்த ஒப்பந்தம் உலகின் அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தங்களைத் துரும்புகூட மதிக்காமல்தான் உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் படையினர் இடையேயான போரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
  • இஸ்ரேலுக்குள் புகுந்து 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களை சுட்டுக் கொன்றதும், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றதும் இப்போதைய மத்திய கிழக்கின் பதற்றத்துக்கு விதைபோட்டது. அதற்குப் பதிலடியாக காஸா முனைக்குள் தரைவழி, வான்வழியாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலும் எந்தப் போர் விதிகளுக்கும் கட்டுப்படாததாகவே தொடர்கிறது.
  • இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் ஏராளமான மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் உருக்குலைந்துள்ளன. மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்தவர்கள்கூட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்குத் தப்பவில்லை.
  • கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் ஹமாஸ் படையினர் தங்களது பதுங்குமிடமாகப் பயன்படுத்துவதால் அவர்களைக் குறிவைத்துத்தான் தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. போரில் ஈடுபடும் தரப்புகள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் அதில் முதல் இலக்காக பொதுமக்கள் உயிரிழப்பதுதான் தொடர்கதையாக உள்ளது. இதுதான் மனித இனம் இப்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய சோகம்.

நன்றி: தினமணி (19 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories