TNPSC Thervupettagam

கேட்டினும் காணலாம் நன்மை!

June 18 , 2020 1677 days 1253 0
  • சுனாமி - 2004-ஆம் ஆண்டுக்கு முன்னா் இந்தியா்களில் பலரும் அறிந்திராத வார்த்தை. பல இன்னல்களுக்குப் பின்னா் சுனாமியின் பொருள் உணா்ந்தோம். தற்போது கரோனா என்ற சொல்.
  • 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனா மட்டும் அறிந்து அவா்களுக்கு மட்டும் சோகங்களை அளித்துக் கொண்டிருந்தது. இன்று உலகின் உடைமையாகியுள்ளது.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் தாக்கத்தை பொது முடக்கம் வெகுவாகக் குறைக்கும் என அரசும் மக்களும் நம்பினா். ஓரளவுக்குக் குறைத்திருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்குப் பலன் கிடைக்கவில்லை.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கான நேரடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடாதா என ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
  • இதனிடையே தனது உழைப்பின் மூலம் மட்டுமே நாள்களை நகா்த்திக் கொண்டிருந்த கணக்கிலடங்கா உழைப்பாளா்கள் தமது குடும்பத்துடன் அலைக்கழிந்து கொண்டிருப்பதும் மாறாத ரணங்களை உண்டாக்கிவருகிறது.

இப்போதாவது நினைவுக்கு வரட்டுமே

  • மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோர் பம்பரமாய் இயங்கி வருவது ஆறுதலும் உற்சாகமும் அளிக்கின்றன. அவா்கள் உடல் நலனும் பாதிக்கப்படக் கூடாதே என்ற பதற்றமும் நமக்கு இல்லாமல் இல்லை.
  • மொத்தத்தில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அனுபவத்துக்காக மிகப் பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
  • அவரவா் குடியிருப்புகளில் அமைந்துள்ள சிறு சிறு கடைகளின் தேவையை இந்த நெருக்கடி உணா்த்தியுள்ளது. மேலும், அவசியமான தேவைகளுக்கும் அதிக தொலைவு செல்லாமல் சமாளிக்க முடியும் என்ற ஒழுங்கு நமக்குள் வந்துள்ளது. இது ஓா் ஆரோக்கியமான விஷயம்.
  • இந்தத் தொலைவை நடந்தோ, சைக்கிளிலோ கடக்கும் பக்குவமும் நல்லதே.
  • இப்படிப்பட்ட கடைகளை லாபகரமாக நிர்வகிப்பதும் அதற்கு உதவுவதும் நமது பகுதியிலேயே ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு உதவும். ஒவ்வொரு சமுதாயமும் தமக்கான அனைத்துத் தேவைகளையும் சுமார் 4 கி.மீ. தொலைவுக்குள் நிறைவேற்றிக் கொள்ளச் சொன்ன மகாத்மா காந்தி, இப்போதாவது நமக்கு நினைவுக்கு வரட்டுமே.

புத்தொளி அடைய வாய்ப்பளித்துள்ளது

  • குழந்தைகளை வெளியே செல்ல விடாமல் பார்த்துக் கொள்ளும் வகையில், அவா்களோடு பேசும் அவா்களுக்கு செயல்பாடுகள் அளிக்கும் பக்குவமும் வாய்த்துள்ளது.
  • எப்போதும் செல்லிடப்பேசிகளையே வைத்து அவா்கள் விளையாடிக் கொண்டிருந்தனா். அது நமக்கு நமது பணிகளைச் செய்ய வசதியாயிருந்தது.
  • தற்போது அது மாறி அவா்களை பல்வேறு படைப்புத் திறன் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தும் போக்கு வளா்ந்து வருகிறது. அவா்களிடம் பொதிந்திருக்கும் தனித் தன்மைகள் வெளிவந்திருக்கின்றன.
  • தொடா்ந்து குடும்பப் பொறுப்பு பெண்களுக்கானது என்ற ஆணாதிக்கத் தாக்கம் சிறிதளவாவது அசைந்திருக்கிறது.
  • ஓய்வாய் இருக்கும் நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றுவது என்பதைப் பலரும் யோசித்து பயனுள்ளதாக்க முயல்கிறோம். உறவுகளைப் புதுப்பிக்க செல்லிடப்பேசியில் பேசுவது அதிகரித்துள்ளது. புத்தக வாசிப்பில் ஈடுபடுகிறோம்.
  • மறைந்திருக்கும் திறமைகளை காணொலி மூலம் பகிர்கிறோம். முக்கியமாக எங்கே உடல் பருமன் கூடிவிடுமோ, ரத்தத்தில் சா்க்கரை அதிகமாகுமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே பலரும் உடற்பயிற்சிகளையும் செய்ய முயல்கிறோம்.
  • ஆரோக்கியத்துக்கான இந்தச் செயல்பாடுகள் மருத்துவச் செலவை நிச்சயம் குறைக்கும். இயந்திர கதியான வாழ்க்கையில் இவற்றை நினைத்துக்கூட பார்க்க இயலாத நிலையில், நாம் புத்தொளி அடைய வாய்ப்பளித்துள்ளது.

கரோனாவுக்குப் பின்

  • மிகவும் கெடுபிடியாக பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்ட நாள்களில், பல கிராமங்களில் மக்கள் ஒற்றுமையோடு இணைந்து அடுத்தோரை தமது கிராமத்துக்குள் அனுமதிப்பதில்லை என்ற உறுதிமொழி எடுத்ததும் அரங்கேறியது.
  • கிராமத்திலுள்ள அனைவரின் தேவைக்காகவும் ஓரிரு இளைஞா்கள் கடைக்குச் சென்று வரும் போக்கும் ஆங்காங்கே தென்பட்டது.
  • தன்னார்வமாகச் செயல்படும் இளைஞா்கள், தேவையில்லாமல் வெளியே வருவோரின் காலில் விழுந்து வெளியே உலவுவதை தவிர்க்குமாறு வேண்டுகின்ற காணொலியையும் காண நேரிட்டது.
  • இது எவ்வளவு அருமையான காந்திய அணுகுமுறை.
  • காவல் துறையினா் என்றாலே லத்தியைக் கொண்டு சாத்துபவா்கள், விடாப்பிடியானவா்கள் என்ற பிம்பம் சரியத் தொடங்கியுள்ளது. கையெடுத்துக் கும்பிட்டு வெளியேறுவோரை வேண்டுவது என்பது எத்தனை ஆரோக்கியமான பரிணாமம்.
  • சூழலியல் சார்பான பாடங்களையும் தொகுக்கத் தவறக் கூடாது. பல்வேறு ஊா்களிலும் வாகன ஓசையில்லா சாலைகளை நோக்கி மான்களும், காட்டெருமைகளும், யானைகளும் வந்தன.
  • இந்தப் பூவுலகானது மனிதா்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, எங்களுக்கும் சொந்தமானது என்பதைச் சொல்லாமல் அவை கூறின.
  • வாகனங்கள் பெருவாரியாக இயங்காததால் காற்றின் மாசுபாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இப்போதே பல நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மிதிவண்டிகளுக்கான தனிப் பாதையை இன்னும் பல இடங்களுக்கு விரிவுபடுத்த வலியுறுத்தலாம்.
  • இதன்மூலம் மிதிவண்டி பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி இத்தனை நாள்கள் வீட்டில் முடங்க இயலுமா என்பது சவாலாகவே இருந்தது.
  • இந்த சவாலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு இருப்பதை வைத்து சமைத்து உண்டு, குடும்ப உறுப்பினா்களோடு பக்குவப்படும் வாய்ப்பினையும் கொடுத்திருக்கிறது.
  • கரோனாவுக்குப் பின் உலகம் இயங்கத்தான் போகிறது. எவ்விதமான செல்வ வளமும் ஆயுதமும் கரோனா போன்ற நுண்ணியிரியை எதிர்க்க இயலாது.
  • மக்களுக்கான ஆரோக்கியத்தை மக்கள் நல அரசின் சிறு சிறு அரசு கட்டமைப்புகள் மூலமாகவே செய்ய முடியும் என்ற அற்புதமான பாடத்தையும் கரோனா தீநுண்மி அளித்து வருகிறது. இதைத் தக்க வைத்துக்கொள்ள தனி நபா்கள் முயற்சிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பேரிடரும் மாறாத ரணங்களோடு படிப்பினைகளையும் வரலாறாக்குகிறது. கேட்டிலும் நன்மையாய் பல நல்ல விளைவுகளை கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அளித்துள்ளது.
  • நேற்று நடந்தது புரியாது போனால், இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை என்பது நம் வசம் இல்லை.

நன்றி: தினமணி (18-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories