TNPSC Thervupettagam

கேள்விகளை யார் கேட்க வேண்டும்?

March 9 , 2025 3 days 17 0

கேள்விகளை யார் கேட்க வேண்டும்?

  • பள்ளிகளின் நோக்கம் மாணவர்களுக்குப் பதில்களைச் சொல்லிக் கொடுப்பது அல்ல. அவர்கள் சிறந்த கேள்விகளை உருவாக்கப் பழகுவதற்கே பள்ளிகள் - மேரிலோ தாண்டானியோ.
  • கல்வியின் உயர்ந்தபட்ச நோக்கம் மனிதர்களின் அறிவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதே என்கிறோம். இப்படிச் சொல்லும்போது உலகை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற அனைவருமே தங்களுக்கு வைக்கப்பட்ட தேர்வுகளில் தாங்கள் எழுதிய பதில்களின் மூலம் சாதித்தவர்கள் அல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும். கலிலியோ தொலைநோக்கியை வானை நோக்கித் திருப்பியதும், நியூட்டன் பூவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்ததும், ரைட் சகோதரர்கள் விமானம் ஒட்டியதற்கும், பிரபஞ்ச ரகசியங்களை அணுவுக்குள் E=MC2 என்று ஐன்ஸ்டீன் தேடியதற்கும் அவர்கள் தங்கள் வாழ்வில் எழுப்பிக் கொண்ட சரியான கேள்விகளே காரணம்.
  • கேள்வி எனும் கலை:
  • எனவே குழந்தைகள் சரியான கேள்விகளை எழுப்ப பழக்குவதுதான் வகுப்பறையின் அடிப்படை. இது பற்றி, “கேள்வி கேட்க கற்றல் மற்றும் கற்றலுக்காகக் கேட்டல்” எனும் தலைப்பில் மேரிலோ தந்தானியோ மற்றும் பால் பைசன்ஹர்ஸ் ஆகிய இருவர் இணைந்து எழுதியுள்ளனர்.
  • பள்ளிக்கு வருவதற்கு முன் மூன்று வயது குழந்தை ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 100 கேள்விகளைக் கேட்கிறது. பள்ளிக்குள் நுழைந்த சில மணி நேரத்தில், கேள்வி எழுப்பும் அறிவு முற்றிலுமாக மழுங்கடிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டை சுமத்தியவாறு இந்நூல் தொடங்குகிறது.
  • கேள்வி கேட்கும் கலை என்பது ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டவும் விவாதத்தை ஊக்குவிக்கவும் ஒரு குறிப்பிட்ட சிக்கலைக் கையிலெடுத்து ஆழமான புரிதலைப் பெறவும் உதவுகிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட சீரிய கேள்விகளைக் கேட்கும் திறனை உருவாக்குவதுதான் பள்ளிக்கூடங்களின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர தாங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் சமூகத்தை உருவாக்குகிற ஒன்றாக ஏன் உள்ளன?
  • சாக்ரட்டிக் கேள்விகள்:
  • ஆறு வகையான கேள்விகள் இந்நூலில் விவாதிக்கப்படுகின்றன. முதலாவது மூடப்பட்ட கேள்விகள் - இந்த வகை கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை போன்ற நேரடி பதில்களை மட்டுமே தர முடியும். இரண்டாவது, எப்படி? ஏன்? என்ன? எதனால்? போன்ற சிந்தனையைத் தூண்டக்கூடிய திறந்த வகை கேள்விகள். பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டியது விரிவான பதில்களை ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய சிந்தனைக்கு ஏற்ப வெளியிடுவதை ஊக்கப்படுத்தக்கூடிய திறந்த கேள்விகளைத்தான்.
  • மூன்றாவது, ஆராய்வதற்காகக் கேட்கப்படும் கேள்விகள். அனுமானங்களை ஏற்படுத்திக்கொண்டு அவை சரிதானா என்பதைத் தீவிர தேடலின் மூலம் கண்டறிவதை இவ்வகை கேள்விகள் தோற்றுவிக்கின்றன. “சாக்ரட்டிக் கேள்விகள்” என்று அடுத்து ஒரு வகை உள்ளது. ஒரு பதிலிலிருந்து இன்னொரு பதிலுக்கு அடுத்தடுத்த தொடர் கேள்விகளைக் கேட்டுக் கொள்வதே அது. இறுதியாக விளக்கக் கேள்விகள் என்கிற ஒரு வகைப்பாட்டை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. ஒரு யோசனையை ஏற்படுத்திக் கொண்டு அதனை விரிவாக விளக்குவதற்கான பகுத்தறிவு பாதைதான் விளக்கக் கேள்வி என்பது.
  • கேள்வி கேட்கும் கலையின் வரலாறுதான் அறிவியல் கண்டுபிடிப்பு களின், தத்துவார்த்த அடிப்படைகளின் மற்றும் மனித முன்னேற்றத்தின் வரலாறாகும். இதற்கு எதிராகத்தான் எந்தக் கேள்வியும் கேட்காதே, கேட்ட கேள்விக்குப் பதிலை மட்டும் கொடு. அந்தப் பதிலுக்கு உனக்கு மதிப்பெண் கிடைக்கும்.
  • மதிப்பெண்ணுக்கு ஏற்ற வேலை கிடைக்கும் என்பது சமூக முன்னேற்றத்துக்கும் ஒட்டுமொத்த மனித முன்னேற்றத்துக்கும் எதிரானது என்று இந்தப் புத்தகம் எச்சரிக்கிறது. உங்கள் வீட்டுக் குழந்தை அடுத்த முறை பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் இன்று பள்ளியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னாயா என்று கேட்பதைவிட இன்று பள்ளிக்கூடத்தில் எந்த அழகான கேள்வியை நீ கேட்டாய் என்று கேளுங்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories