- மற்றொரு மரணம்; பாதாளக் குழியில் இறங்கி கழிவகற்றும்போது விஷவாயு தாக்கி தமிழ்நாட்டில் மற்றொரு மரணம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. கழிவுகளை அகற்றும்போதான உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. ‘கைகளால் மனிதக் கழிவகற்றுவோர்’ என்ற சொற்றொடர் இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்கிறது இணையம்.
- ஏன் இந்தத் தனிப் பெரும் பெருமை? ஏனென்றால், இந்த மானுட அவலம் சாதியத்தில் வேர்கொண்டிருப்பதால்; சாதியம் இந்து சமூகம் மட்டுமே சுவீகரித்திருக்கும் ஆயிரம் ஆண்டு கால மாண்பு என்பதால்;
- தீண்டாமை நம் தனித்துவம் என்பதால்! ‘சாதிய சமூகம் தன் பல்லாண்டு கால மாபாதகத்துக்கு மன்னிப்புக் கேட்பதுடன்தான் இத்தகைய முயற்சிகள் தொடங்க வேண்டும்’ என்கிறார் பி.எஸ்.கிருஷ்ணன். இக்கேவலத்திலிருந்து மீட்கப்படுவோரின் மறு வாழ்வுக்காக அவர் முன்வைத்த பரிந்துரைகளுக்கு இன்னும் முகங்கொடுக்கவில்லை. அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்.
- ஐந்து நாட்களுக்கு ஒருவர் சாக்கடைகளைக் கழுவும்போது சாகின்றனர் என்கிறது தேசிய சஃபாய் கரம்சாரிகள் ஆணையம். ‘இவை அரசு செய்யும் கொலைக் குற்றங்கள்’ என்கிறார் இந்தக் கேவலத்துக்கு எதிராக வாழ்நாள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெஜவாடா வில்சன்.
- ஆணையத்தின் புள்ளிவிவரத்துக்குச் சென்றடையாத மலக்குழி மரணங்கள் எத்தனையோ! அதெல்லாம் நம் அனைவரின் கள்ள மெளனத்தில் மறைக்கப்படுகின்றன என்பதை உணரத் தொடங்க வேண்டும். பாதாள சாக்கடைகளில் தள்ளப்பட்டு, விஷ வாயு தாக்கி இறப்பவர்களின் விவரங்கள் மறைக்கப்படுகின்றன என்பதால், அரசு அளிக்க வேண்டிய நிவாரணத் தொகையும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
- சட்டம் விதிக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை கடந்த சில ஆண்டுகளில் மரித்த 123 பேரில் 70 பேருக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.
- வீடுகள், தெரு ஓரங்களில் இருக்கும் கழிப்பறைகளை, தண்ணீரே இல்லாத லட்சக்கணக்கான கழிப்பறைகளை (2011 கணக்கெடுப்பின்படி, நாட்டில் 26 லட்சம் உலர் கழிப்பறைகள் இருக்கின்றன), வெட்டவெளி மனிதக் கழிவுகளை சுத்தப்படுத்துபவர்கள் எல்லாம் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றிப் பணிபுரிகிறார்கள்.
- பல்லாண்டு காலமாக இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தபோதும் ஏன் இது அரசின் கண்களை உறுத்தவே இல்லை? இந்தியாவின் இந்தப் பேரிழிவை ஒழிப்பது அத்தனை கடினமானதா? சாக்கடைகளை இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் 80 ஆண்டுகளாகத் தெரிந்த ஒன்றுதான். உலகெங்கும் மிகவும் பின்தங்கிய நாடுகளிலும்கூடப் பயன்படுத்தப்படுகின்றனதான். விண்வெளியை ஆளவும், அணு சக்தியை வசப்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெருமையில் மிதக்கும் நாட்டுக்கு, பல லட்சம் கோடிகளை அடையாள ஆடம்பரங்களுக்குக் கொட்டும் நாட்டுக்கு, இந்த மக்களை மீட்சியடைய வைக்க முடியாதா என்ன?
- கைகளால் கழிவகற்றுவோர் பணி நியமித்தல், உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டம் - 1993, கைகளால் கழிவகற்றுவோரைப் பணியமர்ப்புத் தடை, மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டம், 2013 என்ற இரண்டு சட்டங்கள் இந்த இழிவைத் தடைசெய்வதற்காக இயற்றப்பட்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்டோருக்கான பல சட்டங்கள்போல் இவையும் செயலிழந்து கிடக்கின்றன.
- சட்டத்தை மீறி இப்பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது ஒரு கிரிமினல் குற்றம். பிணையில் வெளிவர முடியாத குற்றம். சட்டம் அமலுக்கு வந்த கால் நூற்றாண்டில் ஒரு குற்றவாளிகூடத் தண்டிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் விவரம். சட்டத்தை மீறும் பெரும் குற்றவாளிகள் யார் தெரியுமா? ரயில்வே துறை, மாநகராட்சி, நகராட்சிகள் போன்ற உள்ளாட்சித் துறைகள்தான்.
பரிகாரம் உண்டா?
- முதலில் சட்டத்தை மீறி பணியமர்த்துவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ரயில்வே போன்ற அரசுத் துறை அதிகாரிகள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தக்காரர்களிடம் விட்டுவிட்டோம் என்று தப்பிக்கவிடக் கூடாது. 1998-ல் நிறுவப்பட்ட சஃபாய் கரம்சாரிகள் ஆணையத்துக்கு, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதன் சட்ட அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. சட்டத்தை மீறுவோர் மேல் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இன்று அதற்கு இல்லை. மீண்டும் அந்த ஆணையத்துக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்.
- இந்த இழிவை ஒழிக்கச் சட்டம் மட்டும் போதாது. இந்தத் தொழில்கள் தேவை இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். முதல் முன்னுரிமையாக, மற்ற நாடுகள்போல் சாக்கடைகளை, கழிவறைகளை, கழிப்பறைகளைச் சுத்தப்படுத்தப்படும் முறை முழுமையாக இயந்திரமயமாக்கப்பட வேண்டும். இத்தொழிலிலிருந்து மீட்கப்படுபவர்களை மாற்றுத் தொழில்களில் பணியமர்த்த வேண்டும். இல்லையெனில், பிழைப்புக்கு வழியின்றி மீண்டும் அதே நரக வாழ்வுக்குத் திரும்பும் நிலை ஏற்படும்.
- இத்தொழிலில் தள்ளப்பட்டிருப்போருக்கு மறுவாழ்வை உறுதிப்படுத்தும் கல்வி, தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு கண்ணியமான பணிகள் என்று கருதப்படும் தொழில்களில் பணியமர்த்தப்பட வேண்டும். இத்தொழில்களிலிருந்து மீட்கப்படுவோர் மட்டுமல்ல;
- அவர்கள் எந்த சாதிகளிலிருந்து இத்தொழிலுக்கு வருகிறார்களோ, அந்தக் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தோர் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியும், பல்தொழில் பயிற்சிகளும், பணி அமர்த்தலும் நடைபெற வேண்டும். இல்லாவிட்டால், ஒருவர் மீட்கப்படும்போது அவர் இடத்துக்கு உடனடியாக இன்னொருவர் கிடைப்பார். அது கூடாது. இந்த வேலைகளைச் செய்வதற்கு யாரும் கிடைப்பதில்லை என்ற நிலை உருவாக வேண்டும்.
- அரசு அந்த சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தலை சிறந்த தரமுடைய இலவசக் கல்வி அளிக்க உயர்தரப் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் நிறுவ வேண்டும். மற்ற அனைவரும் கற்கும் கல்வி நிறுவனங்களைவிட உயர் தரமுடையவையாக இவை இருக்க வேண்டும். அப்போதுதான் வரலாறு முழுதும் கல்வியும் கண்ணியமும் மறுக்கப்பட்ட இவர்களுக்கும் மற்றவர்களுக்குமான ஆயிரம் ஆண்டுகால இடைவெளியை கொஞ்சமேனும் குறைக்க இயலும்.
தீண்டாமை ஒழிப்புக்கான கடமைகள்
- இத்தொழில்களிலிருந்து மீட்கப்படுவோர், அவர்களது சாதிகளைச் சேர்ந்தவர்களுக்காக மட்டுமே சில வகைப்பட்ட பணிகள் ஒதுக்கப்பட வேண்டும். அவை சனாதனம் குடிகொண்டிருக்கும் சமூக விலக்கல்களாகிய அசிங்கங்களை சம்மட்டி கொண்டு தாக்குபவையாக இருக்க வேண்டும். சனாதனம் எங்கே குடிகொண்டிருக்கிறது? விவேகானந்தர் சொல்கிறார், “நம் மதம் சமையலறையில் குடிகொண்டிருக்கிறது; நம் கடவுள் சமையல் பாத்திரத்தில் வீற்றிருக்கிறார்.” சனாதனத்தின் சிம்மாசனம் சாப்பிடும் சாப்பாட்டிலும், குடிக்கும் நீரிலும் அமைந்திருக்கிறது. ஆகவே, அவை தொடர்பான தொழில்களில் மறுவாழ்வு அளிக்கப்படும் இம்மக்கள் பணியமர்த்தப்பட வேண்டும். நாடு முழுதும் பால் விநியோகிக்கும் தொழிலில், அரசின் பால் பண்ணைகளில் இவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். மறுவாழ்வு பெரும் இம்மக்கள், அவர்கள் சாதிகளைச் சேர்ந்தோரின் கைகளிலிருந்து மட்டும்தான் இந்நாட்டு மக்கள் எவரும் பால் வாங்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
- இத்தொழிலாளர்களை மிக அதிகமாகச் சுரண்டுவது ரயில்வே துறைதான். அதற்குப் பரிகாரமாக, ரயில் நிலையங்களில் உணவு விநியோகம், டீ, தண்ணீர் விநியோகம் ஆகியவற்றில் இம்மக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்.
- ரயில் நிலையங்களில் உணவு விநியோகத்துக்காகத் தனியாருக்கு விடும்போது, இத்தொழிலாளர்களும் அவர்கள் சாதிகளைச் சேர்ந்தவர்களும் மட்டுமே அனைத்துப் பணிகளிலும் அமர்த்தப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் நிபந்தனையாக விதிக்கப்பட வேண்டும். இவை சில உதாரணங்கள்தான். இவையெல்லாம் இவர்களுக்கான ஒதுக்கீடு அல்ல. நமது அரசியல் சாசனம் வலியுறுத்தியிருக்கும் தீண்டாமை ஒழிப்புக்கான அடிப்படைக் கடமைகள்.
நன்றி: இந்து தமிழ் திசை (28-11-2019)