- முத்துலட்சுமியின் தங்கை புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி வலியோடும் வேதனையோடும் அவரது கண் எதிரிலேயே உயிர் துறந்தது அவரை வெகுவாகப் பாதித்தது. அதன் தொடர்ச்சியாகவே புற்றுநோய்க்குச் சிறப்பு மருத்துவமனை அமைக்க அவர் உறுதிபூண்டார். முத்துலட்சுமியின் கணவர் சுந்தரத்தின் மறைவுக்குப் பிறகு சுந்தரத்துக்கு வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியத்தொகையும் நிறுத்தப்பட்டுவிட, வீட்டு வாடகை மட்டுமே ஒரே வருமானமாக இருந்தது. அந்தத் தொகையை வைத்துக்கொண்டு புற்றுநோய் மருத்துவமனையை எப்படிக் கட்டியெழுப்புவது?
- முத்துலட்சுமி தான் சார்ந்திருந்த இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியை நாடினார். மேலும் சில பெண்கள் அமைப்புகளும் இணைய, பொது நிதி திரட்ட முடிவானது. அமெரிக்காவில் மருத்துவ மேற்படிப்பு முடித்துத் திரும்பிய தன் மகன் கிருஷ்ணமூர்த்தியையும் இந்த நிதி திரட்டும் பணியில் முத்துலட்சுமி இணைத்துக்கொண்டார்.
- தென்னிந்தியாவின் பெருமிதம்: புற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் கேட்டு அரசாங்கத்தை அணுகிய முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் 1952இல் மதராஸ் மாகாணத்தில் பொறுப்பேற்ற சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான அரசு, முத்துலட்சுமியை சட்டப் பேரவைக்குப் பரிந்துரைக்க விரும்பியது. ஆனால், முத்துலட்சுமியின் விருப்பம் வேறாக இருந்தது. பதவியைவிட மக்கள் நலனே அவரது தேர்வாக இருந்தது. புற்றுநோய் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்கித் தந்தால் மட்டுமே அரசின் கோரிக்கைக்குத் தன்னால் செவிசாய்க்க முடியும் என்று ஒரு நிபந்தனையை முத்துலட்சுமி விதித்தார். அன்றைய அடையாறு மாவட்டத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய நிலப்பரப்பை ஒதுக்குவதாக அரசு தெரிவித்தது.கட்டுமானப் பணிகளுக்குப் பொருத்தமற்ற அந்த இடத்தை மக்களின் நலன் காக்கும் தன் கனவுக்கான முக்கியமான கருவியாகக் கைகொண்டார்.
- அதற்குள் நிதி திரட்டும் பணியும் ஓரளவுக்குக் கைகூடியிருக்க, கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பிறகு இந்திய அரசும், மதராஸ் அரசும் நிதியுதவி அளிக்க, தென்னிந்தியாவின் முதல் புற்றுநோய் மருத்துவமனையான அடையாறு புற்றுநோய் மையம் 1954இல் தொடங்கப்பட்டது. கூரை வேயப்பட்ட மிகச் சிறிய கட்டிடத்தில்தான் மருத்துவமனை செயல்பட்டது. அறுவை சிகிச்சை உபகரணங்கள் சில கடன் வாங்கப்பட்டன. மருத்துவமனையில் சமையலறை இல்லாததால் நோயாளிகளுக்கு முத்துலட்சுமியின் வீட்டில்தான் உணவு தயாரிக்கப்பட்டது. இன்று அடையாறு புற்றுநோய் மையம் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சைபெறும் வகையில் பரந்துவிரிந்திருக்கிறது. புதுக்கோட்டையில் ‘தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்தவள்’ என்று முத்திரை குத்தப்பட்டு, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட முத்துலட்சுமி என்கிற சிறுமிக்குக் கிடைத்த கல்விதான் அன்றைய மதராஸில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களுக்குக் காரணம்.
- கல்விதான் அவரைப் பகுத்தறிவாளராகவும் விரிந்த பார்வை கொண்டவராகவும் மாற்றியது. வட இந்தியாவில் பெண் கல்விக்காகப் பாடுபட்ட சாவித்ரிபாய் புலேவும் தமிழகத்தில் பெண் கல்விக்கும் பெண்கள் - குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் புதிய பாதைகளை வகுத்துத்தந்த முத்துலட்சுமியும் பெண்களின் முன்னேற்றம் என்கிற பரந்துவிரிந்த பார்வையில் ஒன்றிணைகிறார்கள். கைம்பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தியாவின் முதல் சிசுக்கொலை தடுப்பு இல்லத்தைத் தொடங்கிய சாவித்ரிபாயின் செயலும் அனைத்து சாதிப் பெண்களும் தங்கிப் பயிலும் வகையில் அவ்வை இல்லத்தை அமைத்த முத்துலட்சுமியின் செயலும் வேறல்ல. இருவருமே கல்வி என்னும் கண்கொண்டு உலகத்தைப் பார்த்ததால் விளைந்த நல்விளைவுகள் ஏராளம்.
- தடைபோட்ட சமூக அழுத்தங்கள்: இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கல்வி என்பது பெண்களால் தீண்டத்தகாததாகவே கருதப்பட்டது. ராஜபுத்திரர்கள், நாயர்கள், ஜமீன்தார்கள், சமணர்கள் போன்ற சில குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில பெண்கள் மட்டுமே படிக்கவும் எழுதவும் அறிந்திருந்தனர். அன்றைக்கு நம் சமூகத்தில் நிலவிவந்த மதரீதியான கருத்தாக்கங்களும் பெண் கல்வியைப் பெருமளவில் பாதித்தன. பெண்கள் படிக்க, எழுதக் கற்றுக் கொண்டால் அவர்கள் கைம்பெண்ணாகிவிடுவார்கள் எனவும் பாலியல் தொழில் புரிவோரும் ஆடல் மகளிரும் மட்டுமே கல்வி கற்க வேண்டும் எனவும் அந்தக் காலத்தில் நம்பப்பட்டது.
- 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண் கல்வி அதலபாதாளத்தில் இருந்ததற்கு இதுபோன்ற பிற்போக்குச் சிந்தனைகளும் சமூக அழுத்தமுமே காரணம். ‘பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இந்துப் பெண்கள் கல்வி பெறாததற்கு அவர்களது குடும்பங்கள் பாரம்பரியத்தின் பெயரால் விதித்த நிர்ப்பந்தங்களும் காரணம். பொ.ஆ (கி.பி) 1826இல் மதராஸ் மாகாணத்தில் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் அரை சதவீதம் மட்டுமே’ எனத் தான் எழுதிய ‘The Position of Women in Hindu Civilization’ நூலில் வரலாற்றாய்வளாரான ஆனந்த் சதாசிவ ஆல்டேகர் குறிப்பிட்டுள்ளார். இப்படியொரு பின்புலத்தில் இருந்துகொண்டு பல்வேறு தடைகளையும் எதிர்ப்புகளையும் கடந்துதான் பெண்கள் அன்றைக்குக் கல்வி பெற வேண்டியிருந்தது.
- சமூக அழுத்தங்களால் கல்வி மட்டுமல்ல பெண்களுக்கு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டன. ஒரு பெண் தன் விருப்பத்துக்கு மாறாகவலுக்கட்டாயமாகத் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதுகூட இல்லறக் கடமை என வலியுறுத்தப்பட்டது. பெண்களின் உயிரையே பறிக்கும் அளவுக்கு உயர்த்திப் பிடிக்கப்பட்ட அந்த அற்புதமான கடமை என்ன? அடுத்த வாரம் பார்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 12 – 2023)