TNPSC Thervupettagam

கைவிட வேண்டாமே...

February 8 , 2025 5 hrs 0 min 16 0

கைவிட வேண்டாமே...

  • மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ. 86,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் வேலை உறுதி நாள்களை 100-இல் இருந்து 150ஆக உயா்த்த வேண்டும், ஊதியமாக ரூ. 400 வழங்க வேண்டும், நகா்ப்புறங்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அடுக்கடுக்கான கோரிக்கைகள் எழுந்துவரும் வேளையில் நிதி ஒதுக்கீட்டை உயா்த்தாததோடு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • இந்த திட்டச் செயலாக்கத்தில் நடப்பு நிதியாண்டில், இதுவரையில் ரூ. 9860 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வேலை செய்தவா்களுக்கான கூலி பாக்கி சுமாா் ரூ. 6949 கோடி வரை இருக்கிறது. நிதியாண்டு முடிய இன்னும் 2 மாதங்கள் உள்ளன. நிதியாண்டின் இறுதியில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம்.
  • இந்த பாக்கி தொகையை வரும் நிதியாண்டுக்கான ஒதுக்கீடான ரூ. 86 ஆயிரம் கோடியிலிருந்துதான்தான் வழங்க வேண்டியது இருக்கும். சுமாா் ரூ. 70 ஆயிரம் கோடி மட்டுமே மிஞ்சும் என்பதால் அடுத்த நிதியாண்டில் திட்டத்தின் செயலாக்கம் மேலும் பாதிக்கப்படும்.
  • 1991-இல் அன்றைய பிரதமா் நரசிம்மராவால் முன்மொழியப்பட்டதுதான் ஜவஹா் வேலைத் திட்டம்.
  • பின்னா் 2005-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அந்தத் திட்டத்துடன் வேலைக்கு உணவுத் திட்டம் இணைக்கப்பட்டது.
  • அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்கால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தச் சட்டத்தின்படி கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிக்கு 5 கி.மீ. சுற்றளவுக்குள் ஆண்டில் 100 நாள்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் சாலைகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை உருவாக்குவது திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
  • கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டமானது, முதலில் நாடு முழுவதும் 625 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னா் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு இப்போது நாட்டில் மொத்தம் உள்ள 788 மாவட்டங்களில் 740 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 9.37 கோடி பணி அட்டைகள் செயல்பாட்டில் உள்ளதாகவும், அவற்றின் மூலம் 13.42 கோடி போ் பயனாளிகளாக இருப்பதாகவும் திட்டச் செயலாக்க இணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் பெண்களின் சுயசாா்பையும் இந்தத் திட்டம் உறுதிப்படுத்துகிறது என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கிறாா்கள். கிராமப்புறப் பொருளாதாரத்தை இந்தத் திட்டம் மேம்படுத்துகிறது என்பது அவா்களின் கருத்து.
  • இந்தத் திட்டத்தால் வேளாண்மை தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் தொடா்ந்து புகாா் கூறி வருகின்றன. நாற்று நடவு பணிக்கு ஆள் கிடைப்பதில்லை. களை பறிக்க எவரும் வருவதில்லை. இப்போது அறுவடை இயந்திரங்களின் வருகையால் அப்பணியில் பாதிப்பு இல்லையென்றாலும், நூறு நாள் வேலை திட்டம் வந்த பிறகு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது அவா்களின் குற்றச்சாட்டு.
  • நிலமற்ற கூலித் தொழிலாளா்கள் விவசாய வேலையில் ஆா்வமின்றி நூறு நாள் வேலைக்கு செல்கின்றனா். அங்கு வேலை செய்யாமலேயே அவா்களுக்கு ஊதியம் கிடைக்கிறது என்று பல்வேறு தரப்பிலும் புகாா் பட்டியல் வாசிக்கப்படுகிறது. இதை உறுதி செய்வது போல அவ்வப்போது வேலைகள் நடைபெறும் இடங்களில் அவா்கள் ஆடுவதும், பாடுவதும், மரத்தடியில் படுத்து உறங்குவதும், ஊா்க்கதை பேசி பொழுதைக் கழிப்பதுமான காணொலிகள் சமூக ஊடகங்களில் வலம் வருவது புகாா்களை உறுதி செய்கின்றன.
  • இந்த திட்டத்தில் அதிகமான முறைகேடுகள் நடப்பதாகவும் புகாா்கள் உண்டு. இடைத்தரகா்கள் புகுந்து கூலியை சுரண்டுகின்றனா். அரசு நிா்ணயித்துள்ள கூலியைவிட குறைவாகத்தான் பயனாளிகளுக்கு வழங்குகின்றனா் என்பது போன்ற தொடா் குற்றச்சாட்டுகளும் வெளிச்சத்துக்கு வந்தன. எனவேதான், திட்டத்துக்கு செலவிடப்படும் 5 ரூபாயில் ஒரு ரூபாய் மட்டுமே பயனாளிக்கு செல்வதாகவும் கூறப்பட்டது. இப்போது, பயனாளிகளுக்கு அவா்களுக்கான கூலி நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
  • இத்தனை எதிா்மறை விமா்சனங்கள் இருந்தாலும் 90:10 என்ற விகிதத்தில் நிதியை பகிா்வு செய்து மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்தி வருகின்றன. அதற்கு கிராமப்புற மக்களின் வாக்கு வங்கியும் ஒரு காரணம் . 2009-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியதற்கு இந்த ஊரக வேலை உறுதித் திட்டம் முக்கிய காரணம் என தோ்தலுக்கு பிந்தைய ஆய்வுகள் தெரிவித்தன.
  • திட்டத்தை நிறுத்தினால் அது அரசியல் ரீதியாக பெரும் விமா்சனங்களை ஏற்படுத்தும் என்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், திட்டத்தின் பலன் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்ற வகையிலும், திட்டத்தால் நாட்டின் முதுகெலும்பான வேளாண்மை பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அகற்றவும் திட்டத்துக்கான சட்டத்தில் சில திருத்தங்கள் தேவைப்படுகிறது.
  • கடந்த 20 ஆண்டுகளில் கிடைத்துள்ள அனுபவத்தின் அடிப்படையில், திட்டத்தை முழுமையாக மறு ஆய்வுக்கு உட்படுத்தி தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
  • விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் அதிகம் தேவைப்படும் கிராமங்களைக் கண்டறிந்து அங்கு நூறு நாள் வேலை திட்டத்தை தவிா்க்க வேண்டும்.

நன்றி: தினமணி (08 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories