TNPSC Thervupettagam

கை கோக்கும் மாநகர கயவர்

May 16 , 2024 248 days 180 0
  • உலகின் உன்னத மறை நூல் திருக்குறள் என்று வானுயர போற்றப்படுகிறது. வள்ளுவர் பெருமான் பார்வை படாத விடயம் ஒன்றுமேயில்லை என்ற அளவில் வாழ்வியலில் அத்துணை நடைமுறைகளையும் ஆராய்ந்துள்ளார். ரொளடிகளையும் விட்டு வைக்கவில்லை!

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

             ஒப்பார் யாங்கண்ட தில்

  • என்றார் வள்ளுவர். தோற்றத்தில் மக்களை போலவே கயவர் உள்ளனர், இந்த ஒற்றுமையை வேறு எங்கும் பார்க்க முடியாது என்று வியக்கிறார். மனிதனிடம் அந்தக் கொடூரம் ஒளிந்திருக்கிறது. எப்போது மிருகமாவான் என்று கணிக்க முடியாது. நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால் மிருகத்தனம்தான் எங்கும் பரவியிருப்பதை நிரூபிக்கின்றது.
  • உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிகழ்வுகள், மனித உடலுக்கு ஊறு விளைவிக்கும் மோதல்களில் பதியப்பட்ட வழக்குகளில் காவல்துறை கறாரான நடவடிக்கை எடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு சீராக இயங்கும். எந்த அளவில் இத்தகைய வழக்குகள் நேர்மையாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரிகளுக்கு தண்டனை சட்டப்படி பெறப்படுகிறது என்பது காவல்துறையின் செயல்பாடுகளின் அளவுகோலாக கருதப்படும்.
  • பொது இடங்களில் வெட்டு குத்து நடைபெறுவது சமுதாயத்தில் பீதியை கிளப்பும். கொடூரமான கொலைகள், சமீபத்தில் நெல்லையில் நடந்தது போல் வெட்டிக் கொலை செய்து தீக்கிரையான உடல் வீசப்படுவது போன்ற கொலைகள் பயங்கர சூழலை உருவாக்கும். இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தால் மக்களுக்கு காவல்துறை மீதுள்ள நம்பிக்கை குறையும். காவல்துறை நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத மக்களின் ஒத்துழைப்பு அற்றுப்போகும். இதுவே சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கு வித்திடும்.
  • தேசிய குற்ற ஆவண வாரியம் 2022-ஆம் ஆண்டு வரை மாநிலங்களில் நிகழ்ந்த குற்றங்களும் அதன் காரிய காரணங்களும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்திய தண்டனை சட்டப்படி பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 35.61 லட்சம். தமிழ்நாட்டில் 1.91 லட்சம். மாநிலங்களில் ஆண்டுதோறும் வழக்குகள் குறையலாம் அதிகமாகலாம். ஆனால் தமிழ்நாட்டில் 2021-இல் பதியப்பட்ட வழக்குகள் 3.22 லட்சம், 2020-இல் 8.9 லட்சம். 2022-இல் 1.91 லட்சம் வழக்குகள். முந்தைய வருடங்களைவிட 300% சரிவு ஆச்சரியம் அளிக்கிறது. முழுமையாக வழக்குகள் பதியப்படுகிறதா என்பதை தலைமை கண்காணிக்க வேண்டும்.
  • வன்முறை வழக்குகளில் பிரதானமாக கருதப்படுவது கொலை வழக்குகள். இந்தியாவில் 2022-இல் மொத்தம் 28,522 வழக்குகள். அதில் தமிழ்நாட்டில் 1,690, உ.பி.யில் 3,491, கர்நாடகத்தில் 1,404, பிகாரில் 2,930, மகாராஷ்ரத்தில் 2,295 பதிவாகின. மாநகரங்களை பொறுத்தவரை தில்லியில் அதிகமாக 501 கொலைகள், சென்னை 101, மும்பை 135, பெங்களூரில்173 கொலைகள் நடந்தன.
  • வழக்குகளில் துரிதமாக புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்தான் போலீஸின் திறமை இருக்கிறது. மாநிலங்களில் சராசரி 74% வழக்குகள் நீதிமன்றத்தை அடைகின்றன. தமிழ்நாட்டில் அது 70.7%. இதில் அதிக கவனம் தேவை என்பது தெளிவாகிறது.
  • கொலை நிகழ்வதன் காரணத்தை ஆராய்ந்து, நிலத்தகராறு, கணவன் மனைவி சண்டை, பங்காளி சண்டை, குடிபோதையில் நடந்தன என்று கொலைகளின் தாக்கத்தை குறைக்க முடியாது. கொலை என்றாலே அது பயங்கரம்தான். ஆழமாக ஆராய்ந்தால் ஏதோ ஒரு விதத்தில் அவற்றை தடுத்திருக்க முடியும் என்பது புலப்படும். அதனால்தான் தொன்று தொட்டு காவல் துறையின் தலையாய கடமை தகவல் சேகரிப்பது என்று கணக்கிட்டுள்ளார்கள். அதை சரியாக செய்து, தடுப்பு நடவடிக்கை எடுத்தால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். போக்கிரிகளுக்கிடையே நிகழும் பதிலுக்கு பதில் வன்முறைகள் காவல் துறைக்குப் பெருமை சேர்ப்பதல்ல. காவல்துறையின் சுணக்கத்தைத்தான் பறைசாற்றும்.
  • காவலரின் பாதையில் கவனம் தேவை. பெரிய பாறை ஒதுங்கிப் போக வைக்கும், சிறிய கற்களே தவறி விழ வைக்கும் என்பதை காவலர்கள் நன்கு உணர்ந்தவர்கள். சிறு சிறு குற்றங்கள், சண்டை சச்சரவுகளை உடனே கவனத்தில் கொண்டு முளையிலேயே அவற்றைக் கிள்ளி எறிந்து பிரச்னை வளரவிடாது தடுப்பார்கள். தேர்ந்த காவல் அதிகாரிகள் கெட்ட நடத்தைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். போக்கிரிகள் வாலைச் சுருட்டி மறைந்துவிடுவார்கள் .
  • காவல் பணிகளை ஒழுங்குமுறைப்படுத்தி எல்லா நாடுகளின் காவல்துறைகளுக்கும் முன்னோடியாகத் திகழும் பிரிடிஷ் காவல்துறை, பொது அமைதியை பாதுகாக்க வெளிப்படையான, மக்கள் கண்களில் படும்படியான "விசிபிள் போலீஸிங்' என்ற திட்டத்தை உருவாக்கியது. "லண்டன் பாபி' என்ற பிரபலமாக அழைக்கப்படும் லண்டன் காவலர், கையில் சிறிய தடியுடன் நடந்தே நகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வலம் வருவார். பொதுமக்கள் மத்தியில் தோற்றத்தில் மாறுபட்டு இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு சீருடை வழங்கி, மீசை வைத்துக் கொள்ளவும் ஊக்கம் அளிக்கப்பட்டது. செதுக்கிய மீசையோடு மிடுக்காக லண்டன் பாபி களம் இறங்கினால் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும், சிறு தவறுகளும் நடக்காது பார்த்துக்கொள்வார்.
  • லண்டன் போலீஸ் பணிமுறைகள் அடிப்படையில் 1856-ஆம் வருடம் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, சென்னையில் முதல் முறையாக காவல் பணி சீரமைக்கப்பட்டு மதறாஸ் போலீஸ் கமிஷனரேட் உருவாக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் ரோந்து பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் இயங்கும் காவல் பணி துவங்கப்பட்டது.
  • சட்டத்தை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பாரபட்சமின்றி புலன் விசாரணை மேற்கொண்டு, நீதியின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருவதில் சென்னை மாநகர காவல்துறையினர் திறமையானவர்கள். இதுதான் சென்னை மாநகர காவல் பணியின் அடித்தளம். எப்போது இந்நடைமுறையில் தளர்வு ஏற்படுகிறதோ அப்போது போக்கிரிகளின் கை ஓங்கும், வெட்டு கொலை அதிகரிக்கும்.
  • பொருளாதார வளர்ச்சியும் அதனால் வரும் பணப்புழக்கமும் மக்களுக்கு நல்லது. ஆனால் அதோடு சமூக விரோதிகளும் வளர்ந்துவிடுகிறார்கள். இது எல்லா மாநகரங்களும் சந்திக்கக் கூடிய பிரச்னை. நாட்டின் முதன்மை வர்த்தகத் தலமான மும்பை சமூகவிரோதிகளின் புகலிடமாக மாறியதில் ஆச்சரியமில்லை.
  • கந்து வட்டி வசூலில், மிரட்டி பணம் கொடுக்கல் வாங்கலில் ரௌடிகள் வியாபாரிகளுக்கு உதவத் தொடங்கி, நாளடைவில் அவர்களே தனி கூட்டு குற்ற கும்பலை உருவாக்கினர்.
  • நில அபகரிப்பு, போலி பொருட்கள் தயார் செய்தல், ஆள் கடத்தல், "சுபாரி கொலை' எனப்படும் கூலிக்கு கொலை செய்தல், போதைப்பொருள் கடத்தல், விநியோகம் என்று பல க்ரைம் சிண்டிகேட்டுகள் உருவாகின. கருப்பு பணம் புழங்கியது. அத்தகைய கும்பல்கள் அந்தப் பணத்தை பாலிவுட் படங்களில் முதலீடு செய்து தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர்.
  • கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ், அருண் காவ்லி, தாவூத் இப்ராஹிம் என்று தொடர்ச்சியாகப் பல குற்ற கும்பல்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. துப்பாக்கி முனையில் கொலை, கொள்ளை, மிரட்டிப் பணம் பறிப்பு இல்லாத நாளே இல்லை என்ற அளவில் 1990-களில் மும்பை நகரம் போக்கிரிகள் பிடியில் சிக்கியது. பயங்கரவாதம் தலை தூக்கியது.
  • 1993-இல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரே நாளில் 257 அப்பாவி மக்கள் மாண்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மக்கள் பீதியில் தவித்தனர்.
  • குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்க மும்பை போலீஸ் பல இடங்களில் எதிர்தாக்குதல் நடத்தியது. பல குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். இந்த "என்கவுன்ட்டர்' முறை அளவுக்கு மீறியதில் விசாரணை கமிஷன் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகளில் பயங்கர குற்றவாளிகள் மீது எதிர்மறை தாக்குதல் நடத்தப்படுகிறது. கொடூர கொலைகள், இத்தகைய "என்கவுன்ட்டர்கள்' தேவை என்று சிலரால் நியாயப்படுத்தும் விதமாக அமைந்துவிடுகிறது. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் காவல் பணி இயங்க வேண்டும் என்பதை மறக்கலாகாது.
  • நீதிபதி அக்குயார் கமிஷன் அறிக்கை மகாராஷ்டிர காவல் துறையின் எதிர்மறை தாக்குதலுக்கு முற்றுப் புள்ளி வைத்ததால், மும்பை போலீஸ் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மகாராஷ்டிரா கூட்டு குற்ற சட்டம் இயற்றப்பட்டு அதன் மூலம் பயங்கர குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
  • ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் பயங்கராவாதிகளின் ஆதிக்கம் துண்டிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்காரர் டி.சிவானந்தன் 1998-இல் மும்பை மாநகர கூடுதல் ஆணையராக இருந்தபோது அவரது தலைமையில் இந்த சாதனை படைக்கப்பட்டது. வெகுவாக கொலை குற்றங்கள் குறைந்தன.
  • மும்பை நகரம் எதிர்கொள்ளும் கூட்டு கொள்ளைகாரர்கள் பிரச்னை, சமாளிக்கும் வழிகள் மற்ற நகரங்களுக்குப் பாடமாக அமையும். நகரங்களில் சிறிது அசிரத்தையாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இமைப் பொழுதில் ஏற்படும்.
  • சமீபத்தில் சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் கைதானவரின் சினிமா தொடர்பு, திரைப்படங்களுக்கு முதலீடு என்ற தகவலை அபாய மணி ஓசையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பஞ்சாப் மாநிலம் போதைப்பொருட்களின் புழக்கத்தால் மிகப் பெரிய சமுதாய சீரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த நிலை தமிழகத்தில் வந்துவிடக் கூடாது.

நன்றி: தினமணி (16 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories